சனி, 6 அக்டோபர், 2018

எவிடென்ஸ் கதிர் : ரூபாய். 2,17,29,388 / - இளவரசன் மரண விசாரணைக்கு செலவு செய்தது ... இளவரசனுக்கு நீதி?

இளவரசன்
எவிடன்ஸ் கதிர்
இளவரசன் மரணத்திற்கு வாய்க்கரிசி கூட கொடுக்காத அரசு, அவரது
மரணத்தை விசாரித்த விசாரணை கமிஷனுக்கு ரூபாய். 2,17,29,388 / - செலவு செய்து இருக்கிறது..
தர்மபுரியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன் கடந்த 2013ம் ஆண்டு மர்மமான முறையில் இரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தற்கொலை என்று ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் இது கொலை என்று கூறினார்கள். இவரது மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய சந்தேகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி திரு.எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சரிடம் நீதிபதி சிங்கார வேலு சமர்ப்பித்தார்.
இந்த விசாரணை ஆணையத்தில் தலைவராக நீதிபதியும் அவருக்கு செயலரும், ஒரு பிரிவு அலுவலரும், ஒரு உதவியாளரும், இரண்டு ஓட்டுநர்களும், மூன்று அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதுவரை இந்த விசாரணை ஆணையம் செய்த செலவினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு கேட்டுப் பெற்றது. இந்த விசாரணை ஆணையம் இதுவரை செலவு செய்த தொகை ரூ.2,17,29,388 (இரண்டு கோடியே பதினேழு லட்சத்தி இருபத்தி ஒன்பதாயிரத்தி முன்னூற்று எண்பத்தி எட்டு ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் சம்பளத்திற்கு என்று ரூ.1,98,23,817 செலவும், இதரச் செலவினங்களுக்கு ரூ.19,05,571 செலவிடப்பட்டுள்ளது.

இந்தச் செலவினங்களை பார்க்கின்றபோது அதிர்ச்சியாக இருந்தது. இறந்துபோன இளவரசனின் குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் நிவாரணம் கூட கிடைக்கவில்லை. ஆனால் இளவரசனுடைய மரணத்தை விசாரிக்க கூடிய விசாரணை கமிஷினின் செலவு இரண்டு கோடிக்கு மேல் தாண்டியிருக்கிறது.
இதுபோன்ற விசாரணை கமிஷினின் முடிவுகள் தமிழகத்தில் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுத்ததில்லை. ஆனால் நியமிக்கப்படுகிற ஆணையங்களுக்கான செலவுகள் கோடிக்கணக்கில் ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இதுபோன்ற நடத்தினாலும் ஓரளவு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இதுபோன்ற கமிஷன் நியமிக்கப்படுவதினால் நீதிமன்றத்திலும் வழக்கினை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 45 விசாரணை கமிஷன்கள் போடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான விசாரணை கமிஷினின் முடிவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக அமைந்ததில்லை.
உரிய நீதியும் கிடைக்காமல் மக்களின் வரிப்பணத்தில் அதிக செலவினையும் செய்து கொண்டிருக்கிற விசாரணை கமிஷின்கள் தேவையா? என்பதை சிவில் சமூகம் கேள்வி எழுப்ப வேண்டும். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை கமிஷினின் நடவடிக்கை குறித்து அதிர்ப்தி தெரிவித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எவிடென்ஸ் கதிர்

கருத்துகள் இல்லை: