வியாழன், 4 அக்டோபர், 2018

தேசம் காப்போம் மாநாட்டுக்கு ஸ்டாலினை அழைத்த திருமாவளவன்

தேசம் காப்போம்: ஸ்டாலினை அழைத்த திருமாவளவன்மின்னம்பலம்: திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (அக்டோபர் 4) சந்தித்துப் பேசினார். அண்மையில் ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அவரை நலம் விசாரித்த திருமாவளவன், விசிக சார்பில் தேசம் காப்போம் என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டுமென அழைப்பும் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஸ்டாலினுடைய உடல்நலம் குறித்து விசாரித்தோம். அவர் நலமுடன் இருக்கிறார். வரும் டிசம்பர் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமை நாள், அன்றைய தினம் சனாதன, பயங்கரவாத சக்திகளை முறியடிக்கும் வகையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து ‘தேசம் காப்போம்’ மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற வேண்டுமென ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவரும் மாநாட்டில் பங்கேற்பதற்கு இசைவு தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைக்கவுள்ளோம். அவர்கள் பங்கேற்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அழைக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
“திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதன்மூலம்தான் மதவாத சக்திகளை ஆட்சியமைப்பதை தடுக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: