சனி, 6 அக்டோபர், 2018

சிலை கடத்தல் - மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பழங்காலத் தூண்கள்!

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பழங்காலத் தூண்கள்!மின்னம்பலம்: சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் வீட்டில், மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழங்காலத் தூண்களைக் கைப்பற்றியுள்ளனர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.
சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள பெண் தொழிலதிபர் வீட்டில் நேற்று (அக்டோபர் 5) சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் சென்னை வீடு, திருவையாறு அரண்மனை மற்றும் படப்பை, மேல்மருவத்தூரில் அவருக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அவரோடு இணைந்து கூட்டாகத் தொழில் புரிந்துவரும் கிரண் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின்போது முதலில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதன்பின், அங்கிருந்த புல்வெளி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று அறிந்து, அதனை நீக்கும் முயற்சியில் இறங்கினர் போலீசார். அங்கிருந்த மண்ணைத் தோண்டினர். சுமார் 3 அடி ஆழத்தில், அந்த இடத்தில் இருந்து 2 பழங்காலத் தூண்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரன்வீர் ஷா வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, ரன்வீர் ஷாவும் கிரணும் பேசியதாகவும், அதன் அடிப்படையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: