வெள்ளி, 20 ஏப்ரல், 2018

கார்பறேட்டுக்கள் வசமாகும் கடற்கரைகள்! கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) திருத்தம்

சிறப்புப் பார்வை: ரியல் எஸ்டேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படும் கடற்கரைகள்!சேது ராமலிங்கம்- மின்னம்பலம் : கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை (Coastal Regulation Zone) முழுமையாகத் திருத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பரப்பை ரியல் எஸ்டேட்டுகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்பதே இந்தத் திருத்தம் கூறும் செய்தி.
இது வரை 21 முறைகளுக்கு மேலாக திருத்தப்பட்டு நீர்த்துப்போக வைக்கப்பட்ட அறிவி்ப்பாணை தற்போது முழுமையாக ஒழித்துக்கட்டப்பட உள்ளது. ‘கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2011’ மாற்றப்பட்டு கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையாக (Marine and Coastal Regulation Zone) இயற்றப்பட்டு அது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்புதிய அறிவிப்பாணை பொதுமக்கள் மற்றும் மீனவா் சமூகத்தினரின் பார்வைக்கு வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் நீதிக்கான திட்டம் என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த மீனாட்சி கபீர் என்பவர் இது தொடர்பாகச் சில கோப்புகளை பார்வையிட்டபோது அறிவிப்பாணையில் அரசு அதிர்ச்சிகரமான மாற்றங்களைச் செய்ய வந்தது தெரிய வந்தது.

அறிவிப்பாணையி்ல் மேற்கொள்ளப்படவிருந்த திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளிடமும் சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் பரவியதால் வேறு வழியின்றி தற்போது இணையதளத்தில் பார்வையாளர்களின் கருத்துகளுக்காக இந்த அறிவிப்பாணை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைப்புகளும் மீனவர் சமூகங்களும் அறிவிப்பாணைத் திருத்தங்களைக் கடுமையாக எதிர்க்கின்றன.
கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அதை திருத்துவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன?
நமது இந்தியக் கடற்கரை 7000 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகள் 1000 கி.மீ நீளம் கொண்டவை. உலக அளவில் கடற்கரைகளும் கடல் வளமும் கடுமையான அளவில் மாசுபட்டிருக்கும் சூழலில் இந்தியக் கடற்கரைகள் இன்னும் அதிக அளவில் மாசுபடாமல் இருக்கின்றன. கடல் வளமும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகவே உள்ளது.

சட்டம் உருவான வரலாறு
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சில மாநிலங்களின் கடற்கரைகளைப் பார்த்தபோது அவை மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார். எண்ணற்ற தொழிற்சாலை மாசுக்களாலும் உணவக மாசுக்களாலும் அவை நிரம்பியிருந்தன. இதனைப் பார்த்துக் கவலைப்பட்ட அவர் கடற்கரைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்துக் கடற்கரை மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமே கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையானது.
நமது நாட்டில் நிகழ்ந்த போபால் விஷ வாயுக் கசிவு விபத்திற்குப் பின்னரே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பகுதியாகச் சோ்க்கப்பட்டதால் அறிவிப்பாணையும் சட்ட அந்தஸ்தைப் பெற்றது.
கடற்கரை மண்டல ஒழுங்குமுறைச் சட்டம் கடற்கரையை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கிறது. பருவ காலங்களில் கடல் உயர் அலை தொடும் இடத்திலிருந்து உள்நாட்டில் 500 மீட்டர் வரை மூன்று மண்டலங்களும் நான்காவது மண்டலமானது அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கும் பொருந்தக்கூடியதாகும்
அறிவிப்பாணையானது சுருக்கமாக சிஆர்இசட் என்றழைக்கப்படுகிறது. சிஆர்இசட்டின் 4 பகுதிகளும் கடற்கரையைப் பாதுகாக்க, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எனப் பலவற்றை வகைப்படுத்தியுள்ளன.
இதன்படி சிஆர்இசட் முதல் பகுதி 1 முதல் 100 மீட்டருக்குள் வருகிறது. இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள், ஓட்டல்கள் நட்சத்திர விடுதிகள் மண் எடுப்பது உள்ளிட்ட கடற்கரைச் சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மற்றும் ராணுவ தளவாடங்களை நிறுத்திவைப்பது ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
சிஆர்இசட் 2ஆவது பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் நகரம் மற்றும் நாட்டின் திட்ட விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இப்பகுதியானது 100இலிருந்து 200 மீட்டர் வரை உள்ளது
சிஆர்இசட் 3ஆவது பகுதி 200 மீட்டரிலிருந்து 500 மீட்டர்வரை உள்ளது. இதில் புதிய தொழிற்சாலை உருவாக்கம் அல்லது ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் விரிவாக்கம் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடல் நீருடன் நேரடித் தொடர்புடைய அமைப்புகள், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதேபோலப் புதிய வீடுகள் கட்டுதலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள மீனவக் குடியிருப்புகளை வர்த்தகச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தவோ அல்லது விற்கவோ அல்லது பாரம்பரியமாகக் கடலோரத்திலுள்ள அல்லது இல்லாத மீனவரல்லாத மற்ற சமூகப் பிரிவினருக்கோ விற்கவோ, மாற்றி அளிக்கவோ கூடாது.
தற்போது இந்தக் கடற்கரை மண்டல ஒழுங்குமுறைச் சட்டம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா விடுதிகள் தடை செய்யப்பட்ட முதல் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சுற்றுலா வசதிகளுக்காக மழைக் குடைகள், நடைபாதைகள், பொதுக்கழிவுகளுக்கான பாதைகள், குடிநீர் வசதிகள் மற்றும் ஓய்வு எடுக்கும் அறைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
சிஆர்இசட் பகுதி 2இல் நகர வளர்ச்சித் திட்டங்கள் இருக்கும் சட்டங்களின்படி ஓழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது மாற்றப்பட்டு நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் வெறுமனே ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதாக மாற்றப்பட்டுள்ளன.
புதிய அறிவிப்பாணையி்ல் ஏற்கனவே இல்லாத 10 இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இவை இன்று வரை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

காற்றில் பறக்கும் கடற்கரை நலன்
முதலாவதாக கொண்டு வரப்படவுள்ள அறிவிப்பாணையில் ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் தடை செய்யப்படுவது நீக்கப்பட்டு அது மேலாண்மையாக மாற்றப்பட்டுள்ளது. ஒழுங்குமுறைக்கும் மேலாண்மைக்கும் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர்.
முந்தைய சிஆர்இசட்டில் கடலில் 12 கடல் மைல்கள் வரையிலும் (24 கிலோ மீட்டர்) கடற்கரையில் உயர் அலைக் கோட்டிலிருந்து அதாவது அலை தொடும் இடத்திலிருந்து 500 மீட்டர்வரை அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் புதிய சிஆர்இசட்டில்1,2,3 மற்றும் 4ஆம் பகுதிகளுக்கு புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு அனைத்து விதமான வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
முந்தைய சிஆர்இசட்டில் தடை செய்யப்பட்ட அழிவுத்தன்மையைக் கொண்ட தொழிற்சாலைகள், இணைப்புச் சாலைகள், கடற்கரைச் சாலைகள், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன.
முந்தைய சிஆர்இசட்டில் 200 மீட்டா் வரை வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி இல்லை ஆனால் அந்த 200 மீட்டரானது 50 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
தீவுகளுக்குக் கடற்கரைப் பாதுகாப்புப் பகுதி உயர் அலைக்கோட்டிலிருந்து 500 மீட்டராக இருந்தது. அது புதிய அறிவிப்பாணையில் 200 மீட்டராகச் சுருக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பழைய சிஆர்இசட்டைத் திருத்தி அதிகமான ரியல் எஸ்டேட்டிற்கும் சுற்றுலாவுக்கும் வழி விட வேண்டும் என்று நிர்பந்தித்துவந்தன. இதன் பின்னணியில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகப் புதிய கடல் மற்றும் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதாக அவசர அவசரமாக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய மீனவர்கள், முக்கியமாகத் தமிழக மீனவர்கள் அலட்சியப்படுத்தப்படும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு கோடி அளவில் உள்ள மீனவர்கள் கணிசமான வாக்கு வங்கியாகவும் திரண்டிருக்கவில்லை என்பதும் அலட்சியத்திற்கு ஒரு காரணம்.
உலக அளவில் அதிகம் மாசுபடாத இந்தியக் கடற்கரைகளை குறி வைத்துப் பல ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகள் காய்களை நகர்த்திவருகின்றன. அதனுடைய உச்சகட்ட வெளிப்பாடே கடற்கரைகளுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பை அளிக்கும் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதாகும்.

கருத்துகள் இல்லை: