வெள்ளி, 20 ஏப்ரல், 2018

எஸ் வி சேகர் பெண் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார்

tamilthehindu :பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவை தான் தவறுதலாக முகநூலில் பகிர்ந்துவிட்டதாக பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.
எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் திருமலை என்பவரின் பதிவை வியாழக்கிழமை பகிர்ந்தார். அப்பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். இந்நிலையில், எஸ்.வி.சேகர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வியாழக்கிழமை முகநூலில் திருமலை என்பவரின் கருத்தைப் படிக்காமல், தவறுதலாக என் பக்கத்தில் பகிர்ந்துவிட்டேன். சற்று நேரத்தில் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக என் நண்பன் சொன்னதையடுத்து உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டு விட்டது.

அதில் உள்ள கருத்துகள், குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாக சொல்லக்கூடிய எதனையும் நான் ஆதரிக்கவில்லை. அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும், நடத்தும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தரம் தாழ்ந்த அரசியலிலோ, பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனி மனித விமர்சனங்களிலோ எனக்கு என்றும் விருப்பம் கிடையாது. அதை நான் செய்யவும் மாட்டேன்.
இந்தச் சம்பவத்தால் மன வருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பெண் பத்திரிகையாளர்களிடமும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை இப்போதும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: