ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

காமன்வெல்த் 2018 - 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம்

காமன்வெல்த் 2018 - 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம்மாலைமலர் :ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது. #CommonWealthGames2018 #IndiaAtCWG #CWG2018 கோல்ட் கோஸ்ட்: 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.< கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. நேற்றைய 10-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. 10-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது. கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கமாகும்.


பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் இன்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் - சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் - மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இந்தியாவின் சிறந்த நிலையாகும். அதாவது 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது அதிகமான தங்கப்பதக்கத்தை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் ஆக மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 136 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

கருத்துகள் இல்லை: