செவ்வாய், 17 ஏப்ரல், 2018

காவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு!

காவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு!
மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கச் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் நேற்று (ஏப்ரல் 16) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
தீர்மானம்: 1
அதிமுக ஆட்சி மக்களைக் கைவிட்டுவிட்டதால், ஆளுநரிடம் எதிர்பார்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான அசாதாரண சூழ்நிலையை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்குத் தெளிவு படுத்திட வேண்டும் என்ற விரிவான கோரிக்கை மனுவை அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் 13.4.2018 அன்று நேரில் அளித்திருப்பதை இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு ஆளுநர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 2
மத்திய அரசுக்கு அழுத்தம் தர மாவட்டத் தலைநகரங்களில் ‘மாபெரும் மனித சங்கிலி போராட்டம்’
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு ‘தீர்ப்பாணை’ (டிகிரி) அந்தஸ்து கிடைத்து விடுகிறது என்று மாநிலங்களுக்கு இடையிலான 1956ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப் பிரிவு 6 (2) மிகத் தெளிவாக கூறியிருக்கிறது. (The decision of the Tribunal, after its publication in the Official Gazette by the Central Government shall have the same force as an order or decree of the Supreme Court).
‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் விருப்பு – வெறுப்பு அடிப்படையிலான, உள்நோக்கம் கொண்ட ஏமாற்று வேலைகளை எல்லாம் கண்டும் காணாமல் ஊழலைத் தொடர்ந்து செய்வதற்கு ஆட்சி அதிகாரம் மட்டும் போதும் என்று வாய்மூடி மவுனசாட்சியாக இருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் – காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதனை முன்னெடுக்க அனைத்துக்கட்சிகளின் சார்பில் வருகின்ற 23-4-2018 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை’ நடத்துவது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம்: 3
பிரதமரைச் சந்திக்கத் தனி முயற்சி
காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு பிரதமரைச் சந்திக்க அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு இதுவரை அனுமதி பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி ‘பிரதமரிடம் அப்படி ஒரு அப்பாயின்ட்மென்ட் முதல்வர் கேட்கவே இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சராக இருப்பவரும் – தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளிப்படையாகப் பேட்டியளித்தும், அதை இதுவரை முதலமைச்சர் மறுக்கவோ, விளக்கமளிக்கவோ முன்வரவில்லை.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும் – தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் – அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும், அதற்குரிய நேரம் கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: