புதன், 18 ஏப்ரல், 2018

மாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார்? நிர்மலா தேவி தகவல்

மாலைமலர் :மாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேர் தூண்டுதலாக இருந்தனர் என்று பேராசிரியை நிர்மலா தேவி தகவல் தெரிவித்துள்ளார். விருதுநகர்: மாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேர் தூண்டுதலாக இருந்ததாக பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
 விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூடுதல் சூப்பிரண்டு மதி, துணை சூப்பிரண்டு தனபால், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மயில் ஆகியோர் பல்வேறு கேள்விகளை கேட்டும், பேராசிரியை நிர்மலா தேவி ஒரே பதிலையே தந்துள்ளார். தான் பேசியதை தவறாக மாணவிகள் புரிந்து கொண்டனர் என்று மட்டுமே கூறினார். அதே நேரத்தில் தான் குறிப்பிட்ட பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் யார் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார். இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஒருசில தகவல்களை பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.


இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-< மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் திருச்சுழியைச் சேர்ந்த கருப்ப சாமி, துறைத்தலைவராக பணியாற்றும் மதுரை முருகன் ஆகியோர் தான் தன்னை இந்த செயலுக்கு தூண்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள கருப்பசாமி ஏற்கனவே அருப்புக்கோட்டை கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் படித்தவர் என தெரிகிறது.

மேலும் பேராசிரியை நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.பில் படித்த போது அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதே போல் துறைத்தலைவர் முருகனும், பேராசிரியை நிர்மலா தேவிக்கு பழக்கமாகி உள்ளார்.

இதன் அடிப்படையில் தான் அவர்கள் பேராசிரியை நிர்மலா தேவியிடம், மாணவிகளை தவறான செயலுக்கு அழைப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி செயல்பட்டதால் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் தேடிச் சென்றபோது அவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்.

பேராசிரியை நிர்மலா தேவி தனது செல்போன் பேச்சின் போது எந்த இடத்திலும் பாலியல் தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தாமல் கவனமாக பேசியுள்ளார்.

இதன் மூலம் அவர் முதன் முறையாக இப்படி பேசினாரா? அல்லது ஏற்கனவே பேசிய அனுபவம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இனி அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களை வைத்தும் போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

மேலும் அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்ய சென்றபோது சுமார் 5 மணி நேரம் அவர் கதவை திறக்காமல் இருந்தார். அந்த நேரத்தில் அவர் யாரிடம் பேசினார்? என்பதையும் செல்போன் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: