Srinivasan Prabu Maruthanayagam Lalapet : திரு
சண்முகநாதன்! இன்றிலிருந்து 50 ஆண்டுகால கடந்த கால தமிழக அரசியலை
எழுதினால் அதில் இந்த பெயர் விடுபட்டிருந்தால் அது எழுதத் தெரியாதவன்
குற்றமேயன்றி வரலாற்றின் குற்றமல்ல. ஆன்மீகத்தில் முருகன் வரலாறு எழுதினால்
வீரபாகுவிற்கு பக்கங்கள் ஒதுக்குவதைப்போல, சிவபுராணத்தில் நந்தீஸ்வரர்
வரலாறு எப்படியோ இப்படி ஆன்மீகம் தவிர்த்து பழைய வரலாறுகளில் கூட இருந்து
கூட உதாரணங்கள் சொல்ல இயலும். அதையும் தாண்டி கருணாநிதி - சண்முகநாதன் உறவு
என்பது பிற்காலத்தில் இது போல இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு உதாரண வரலாறாக
இருக்கப்போவது என்பது மட்டும் உண்மை!
நமக்கு தான் அவர் சண்முகநாதன். ஆனால் இதோ கலைஞர் வீட்டில் சமீபத்தில் பிறந்த குழந்தை அருள்நிதி அவர்கள் மகனுக்கு கூட இவர் பெயர் “குட்டி பி ஏ” தான். தயாளுஅம்மாளும், ராஜாத்தி அம்மாளும் வைத்த “குட்டி பி ஏ” என்கிற பெயர் தான் இப்போதும் கோபாலபுரம் மற்றும் சி ஐ டி காலணி வீட்டின் சுவர் முழுக்க எதிரொலித்துக் கொண்டு இருக்கும். எனக்கு தெரிந்து அவர் இத்தனை நேரம் செல்வழித்து ஒருவருக்கு பேட்டி கொடுக்கின்றார் எனில் இதுவே முதன்முறை. இவரிடம் போய் “எனக்கு ஒரு பேட்டி வேண்டும்” என கேட்கும் தைரியம் கூட யாருக்கும் இருந்தது இல்லை. அத்தனை ஒரு பிசி மனிதன். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு மனிதன் தன் குடுப்பத்தை கூட கவனிக்காமல், தன் சொந்த பந்தங்கள் வீட்டு திருமண, துக்க நிகழ்வுகளுக்கு கூட செல்லாமல் தன்னை அர்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார் எனில் ஒரு விஷயம் தான் புலப்படுகின்றது. அவர் சம்பளத்துக்காக அதை செய்யாமல் ஒரு புலகாங்கிதம் அடையும் சேவையாக செய்து வருகின்றார் என்பதே பொருள்!
முதன் முதலில் அவரிடம் ஒரு முழு பேட்டியை வாங்கிய சமஸ் அவர்களுக்கு நன்றிகள்! “தி இந்து- தமிழ்”ல் அவரது பேட்டி நான்கு பாகங்களாக வெளி வந்ததை முழுமையுமாக இங்கே தருகின்றேன். இதோ அவரது பேட்டி....
************************
கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். "தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலில் இடம்பெற்றுள்ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.
திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்...
திருவாரூர் பக்கமுள்ள சின்ன ஊரு. நிறையப் பேரு ‘பக்தவச்சலம்’னு பேரு வைக்கிறாங்களே, அது எங்க ஊரு சாமிதான். 1942-ல பொறந்தேன். அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம். கூடப் பொறந்தது மூணு தம்பிங்க. மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்த பிள்ளை. கஷ்ட ஜீவனம். காவிரியோட கிளை ஆறான ஓடம்போக்கியைத் தாண்டித்தான் போய்ப் படிக்கணும். உள்ளூர்ல, அப்புறம் அம்மையப்பன்ல, அப்புறம் திருவாரூர் வி.எஸ்.டி. ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப சிரமப்பட்டுதான் படிக்க வெச்சாங்க. இன்னும் நெனைப்பிருக்கு. ஃபீஸ் கட்ட கடைசி நாள். காலையில ‘இரு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போனார் அப்பா. ஊருணிக்கரையில போய் சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். அப்பா வரலை. ராத்திரி எதையோ அடகு வெச்சுப் பணம் வாங்கிட்டு வந்தார். மறுநாள் ஸ்கூல் போனா, எங்க ஆசிரியரே பணம் கட்டிட்டார். வாழ்க்கை இப்படிப் பலரோட உதவியோடும் சேர்த்துதான் நம்மளை ஒரு இடத்துல கொண்டுவந்து உட்கார வைக்குது.
படிப்பு முடிச்சதும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்தர் வேலை. ஆனா, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வேன்கிறதால எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கூடவே நான் டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட இன்ஸ்டிடியூட்லேயே பகுதிநேர வேலைக்கும் போனேன்.
வேலையிருந்தால் மூணு ரூபாய் கூலி. ஆனா, எல்லா நாளும் வேலை இருக்காது. காத்துக் கிடக்கணும். அந்தச் சமயத்துலேயே சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதித் தேர்வானேன். வங்கியில யாருக்கும் அனுப்ப மனசில்லை. அப்புறம் அவங்களே, ‘சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல வேலை கிடைச்சி ருக்கு. பெரிசா வருவே’ன்னாங்க. சென்னைக்கு வந்தேன். சென்னைக்குப் போறேன்னு தெரிஞ்சதும் என்னோட இன்ஸ்டிடியூட் வாத்தியார் எனக்கு பேன்ட் சட்டை எடுத்துத் தந்தார். சென்னை வந்து முதல் ஒரு மாசம் அந்த பேன்ட் சட்டையைத்தான் தினம் துவைச்சிப் போட்டுக்கிட்டு வேலைக்குப் போனேன். வேற நல்ல உடுப்பு என்கிட்ட கிடையாது. ராயப்பேட்டைல சொர்ணண் ணன் வீட்டுல தங்கியிருந்தேன். ஆபீஸ்க்கு தினம் நடந்துதான் போவேன். மாசம் 135 ரூபாய் சம்பளம். அதுல 75 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிடுவேன். மீதி 60 ரூபாய் என் செலவுக்கு. அது போதாது. வேலையோடேயே தொலைநிலைப் படிப்புல வேற சேர்ந்துட்டேன்.
சரி, இங்கே பகுதிநேர வேலை என்ன கிடைக்கும்னு பார்த்தேன். என்விஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்துல வேலை கிடைச்சுது. காலையில் 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஓடுவேன். 8 மணி வரைக்கும் வேலை. மாசம் 50 ரூபாய் கிடைக்கும். அவர் டிக்டேட் பண்ணுவார். அதை டைப் அடிச்சுக் கொடுக்கணும்.
கமிஷனர் ஆபீஸ்லேயும் வேலைக்குக் குறைவிருக்காது. பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ வேலைப் பளு தாங்காம ஓடிப்போன ஆட்களெல்லாம் உண்டு. தினம் ஆயிரக்கணக்கான கைதுகள் நடக்கும். எல்லாரோட விவரமும் அடிச்சு சேகரிக்கணும். முதல் நாள் காலையில ஆரம்பிச்சு மறுநாள் மதியம் வரைக்கும் ஒண்ணுக்குப் போகக்கூட எழுந்திரிக்காம வேலை பார்த்த நாளெல்லாம் உண்டு. பத்து, பதினஞ்சாயிரம் பேரைப் பட்டியல்ல அடிக்கணும்னா..! அப்படி வேலை பார்த்ததுக்காக ரிவார்டெல்லாம் வாங்கியிருக்கேன். அப்புறம் தமிழ் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணினேன். அதுதான் இன்னிக்கு இந்த இடத்துல உட்கார வெச்சிருக்கு.
கருணாநிதிக்கு எப்படி அறிமுகமானீர்கள்?
அவர் கூட்டத்தை போலீஸ் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக என்னை அனுப்பியிருந்தாங்க. அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில இருக்கார். பேச்சை நான் எடுத்திருந்த குறிப்பின் அடிப்படையில அவர் மேல கேஸ் விழுந்துச்சு. அப்போ அவர் பேச்சை நான் எடுத்த குறிப்போட ஒரு பிரதியை அவருக்கும் அனுப்பியிருக்காங்க. படிச்சுப்பார்த்தவர், "என் பேச்சை ஒரு மனுஷன் அப்படியே எழுதியிருக்காரே!"னு ஆச்சரியமாயிருக்கார். அப்போ அவர்கிட்ட தமிழ் ஷார்ட் ஹேண்ட் எழுத ஆள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நான் யார்னு கண்டுபிடிச்சுட்டார். "உன்னைப் பொதுப்பணித் துறை அமைச்சர் பார்க்கணும்னு சொன்னாருப்பா"னு சேதி வந்துச்சு. நான் பயந்துட்டேன். கோபாலபுரம் வீட்டில் வந்து பார்த்தேன். "எனக்கு பிஏ வேணும். வந்திடுறியாய்யா?"ன்னார். நான் மறுத்துட்டேன்.
ஏன்னா, அப்போ என் சம்பளம் போலீஸ்ல 240 ரூபாய் ஆயிருந்துச்சு. அவருக்குக் கீழ வந்தா அது 140 ரூபாய் ஆயிடும். "கஷ்டப்படுற குடும்பம் ஐயா’’ன்னேன். "சரி, போ’’ன்னுட்டார்.
அப்புறம் எப்படிச் சேர்ந்தீர்கள்?
எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். "உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!" என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். "பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்"னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்ப வும் கோபாலபுரம் வந்தேன். "என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?"ன்னாரு தலைவர். "எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா"ன்னேன். "சரி, ஏற்பாடு பண்றேன்"னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு ரெண்டு பேரை வேலைக்கு எடுத்துட்டார். அதனால, "முதல்ல சட்ட மன்றத்துக்கு மாறிக்கோ. சமயம் பார்த்து எடுத்துக்குறேன்"னார்.
ஒரு வருஷம் அப்படிப் போச்சு. அண்ணா மறைஞ்ச சமயம் என் தங்கச்சி கல்யாணத்துக்காக லீவுல ஊருல இருக்கேன். ‘லீவ் கேன்சல். ஜாயின் சீஃப் மினிஸ்டர் ஆபீஸ் அஸ் பிஏ’னு தந்தி வந்துச்சு. உடனே, சென்னைக்கு ஓடி வந்துட்டேன். 16.2.1969 அன்னிக்குத் தலைவர்கிட்ட சேர்ந்தேன். 50 வருஷம் நெருங்குது!
இடையிடையே ஆட்சி மாறினபோதும் எப்படி நீங்கள் அவரிடமே தொடர்ந்தீர்கள்?
வேலைக்குச் சேர்ந்தப்போவே மூணு பிஏக்கள்ல நான்தான் ஜூனியர். குட்டி பிஏன்னு பேர் ஆயிடுச்சு. அம்மா (தயாளு), சின்னம்மா (ராசாத்தி) ரெண்டு பேருமே பிரியமா இருப்பாங்க. 1976-ல் ஆட்சி போச்சு. எல்லாரும் அவர்கிட்டேயிருந்து விலகிட்டாங்க. நான் மட்டும் தினம் வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன். தலைவர் கூப்பிட்டு, "நீ அரசாங்க வேலையை ரிஸைன் பண்ணிடு"ன்னார். "சரிங்கய்யா"ன்னு நானும் சொல்லிட்டேன். "பாவம் சின்ன வயசு. இவரு வயசுக்கு செகரட்ரி வரைக்கும் ஆகலாம் மாமா; வேலையை விடச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பிஏ வெச்சிக்கலாம் மாமா. அந்த இடத்துக் குச் சண்முகநாதனைக் கேட்டு வாங்கிடுவோம்"னு மாறன் சொன்னாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம் உண்டு. கோபம் வரும். திட்டுவாரு. ஆனா, ரொம்பப் பிரியமா இருப்பார். எல்லாருமே வீட்டுல ஒருத்தனாத்தான் பார்ப்பாங்க. ஆனா, முதல்வரா இருந்த எம்ஜிஆர் வேற கோபத்துல ‘முடியாது’ன்னு கோளாறு கொடுத்தார். தலைவருக்குக் கோபம் வந்திருச்சி. அப்படின்னா, "எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்"னு சொல்லிட்டார். நாஞ்சிலாருக்கு விஷயம் தெரிஞ்சு எம்ஜிஆர்கிட்ட பேசினார். "இதையெல்லாம் மறுத்தால் பெரிய கெட்ட பெயர் வந்துவிடும்"னு அவர் சொல்லவும் எம்ஜிஆர் ஏத்துக்கிட்டார்.
எம்ஜிஆருக்கு உங்கள் மேல் என்ன கோபம்? எம்ஜிஆர் - கருணாநிதி பிளவின்போதெல்லாம் நீங்கள் பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்...?
திமுகல அவரு இருந்தப்போ என்னை எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் ஆனவுடனே என்னையும் மனைவியையும் அழைச்சு விருந்தெல்லாம் கொடுத்தார். ஒன்பது வெள்ளி டம்ளர் பரிசளிச்சார். அவர் முதலமைச்சர் ஆனதும் நான் அவருக்கு பிஏவா இருக்கணும்னு கூப்பிட்டு அனுப்பினார். அது என்ன கணக்குன்னா, தலைவருக்கு யாரெல்லாம் பலமா இருக்காங்களோ, அவங்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துடணும்கிற கணக்கு. நான் மறுத்துட்டேன். இதை அவரால ஏத்துக்க முடியலை. அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்த நெனைச்சார்.
எம்ஜிஆரிடம் பழிவாங்கும் குணம் உண்டா?
எம்ஜிஆர்கிட்டேயும் உண்டு. பின்னாடி ஜெயலலிதாகிட்டேயும் உண்டு. ரெண்டு பேரோட பழிவாங்கல் கதைகளும் நிறைய உண்டே! என்ன, யாரும் எழுத மாட்டாங்க! என்னையே சும்மா விடலையே எம்ஜிஆர்? எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாம பால் கமிஷன்ல தொடர்புபடுத்தி, ஏதோ ஒரு கொள்ளைக்காரனைக் கைதுசெய்யுற மாதிரி என்னை அவர் ஆட்சியில நடத்தினாங்க. அப்போ போலீஸ் மிதிச்சதுல அடிபட்ட எங்கப்பா பிழைக்கலையே! பழிவாங்குற எண்ணத்துலதானே, தலைவர் தன்னோட சொந்த வீடு மாதிரி அன்றாடம் போய்ப் பார்த்துப் பார்த்துக் கட்டின புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை மருத்துவமனையா மாத்தினாங்க ஜெயலலிதா!
எம்ஜிஆர் - கருணாநிதி பிளவின்போதெல்லாம் நீங்கள் பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்...
ரெண்டு பேருக்கும் இடையில ரொம்ப அந்நியோன்யமான ஒரு உறவு இருந்துச்சு. பல விஷயங்கள்ல மாறுபாடும் இருந்துச்சு. கட்சியோ அரசு நிர்வாகமோ தலைவரைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப சீரியஸா அணுகுவார். உதாரணமா, காலம் தவறாமை. சட்ட மன்றக் கூட்டங்களுக்கு உழைக்கிறதெல்லாம் பாத்தீங்கன்னா, பரீட்சைக்குப் போற மாணவன் மாதிரிதான் தயாராவார்.
எம்ஜிஆர் அப்படிக் கிடையாது. கூட்டம் நடந்துக்கிட்டிருக்கும் போது தாமதமா பாதியில வந்து கவனத்தைத் திசைதிருப்புறதெல்லாம் நடந்திருக்கு. “பொதுக்கூட்டங்களில் நான் பேசுவதாக இருந்தால், அந்தக் கூட்டத்தில் என்னை அல்லாது வேறு எப்படிப்பட்ட சிறந்த பேச்சாளராக இருந்தாலும் சரி, தத்துவவாதியாக இருந்தாலும் சரி, அந்தக் கூட்டத்தில் நான் மேடைக்கு வந்ததும் பிறருடைய பேச்சு தடைபடும் அளவுக்கு மக்களிடையே ஒரு எழுச்சி உண்டாகும். பேச்சாளர் பிறகு பேச முடியாமல் போய்விடும்” என்பதை எம்ஜிஆரே எழுதியிருக்காரே!
ஆனா, இதற்கெல்லாம் அப்பாற்பட்டும் ரெண்டு பேருக்கும் மத்தியிலேயும் மதிப்பும் அன்பும் இருந்துச்சு. பிரிஞ்சு போய்க் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்கூட, காரில் எம்ஜிஆர்கூடப் போகும்போது ஒருத்தர் பேச்சுவாக்குல ‘கருணாநிதி’ன்னு சொல்லப்போவ, “கலைஞரை என் முன்னாடி கருணாநிதின்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?”னு கேட்டுப் பாதி வழியில வண்டிலேர்ந்து அவரை இறக்கிவிட்டிருக்கார் எம்ஜிஆர். தலைவர்கிட்டேயும் யாரும் எம்ஜிஆர் தொடர்பா தப்பாப் பேச முடியாது. இதெல்லாம் உண்டு. ஆனா, என்னாச்சுன்னா திமுக வோட எழுச்சி வட இந்தியக்காரங்களைப் பெரிசா அச்சுறுத்துச்சு. மாநில சுயாட்சி முழக்கத்தைத் தலைவர் கையில எடுத்தப்போ அடுத்தடுத்து பஞ்சாப், வங்கம்னு எல்லா இடங்கள்லேயும் எதிரொலிக்க ஆரம்பிச்சுச்சு. காங்கிரஸுக்குள்ளேயேகூட பல முதல்வர்கள் பேச ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி பிராமணர் - பிராமணரல்லாதோர் அரசியல் ஒரு தேசிய விவாதமா மாறுச்சு.
திமுகவோட வளர்ச்சி இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகள், கீழ்நிலைச் சமூகங்களோட எழுச்சிக்கு வழிவகுத்துடும்; அதனால அதுக்கு அணை போடணும்னு நெனைச்சாங்க, பலரையும் குறிவெச்சவங்க.
அண்ணா இருக்கும்போதே எம்ஜிஆரை வருமான வரித் துறையை வெச்சி நெருக்கிட்டாங்கன்னு பேச்சு வந்துடுச்சு. அண்ணா இருக்கும்போதுதானே 1964-ல மேலவை உறுப்பினர் பதவியை எம்ஜிஆர் ராஜினாமா செய்றார்... அதேசமயத்துலதானே ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி!’னு பேசுறார்... அண்ணா மறைவுக்குப் பின்னாடி எம்ஜிஆருக்கான நெருக்கடிகள் அதிகரிச்சதுதான் பிளவோட மையம். கணக்குக் கேட்டது, தலைவர் மேல குற்றஞ்சாட்டினது எல்லாம் வெளிப்பூச்சுல நடந்தது. அப்பவும்கூட எம்ஜிஆரை நீக்குற முடிவைத் தலைவர் எடுக்கலை. சுத்தி இருந்தவங்க முந்திக்கிட்டு செஞ்ச வேலைதான் நீக்கத்துக்கு வழிவகுத்துச்சு.
கொஞ்சம் விளக்க முடியுமா?
எப்படி அதுன்னா, 1971-ல ஜெயிச்சப்போ, “எனக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வேணும். அதனால நான் ஷூட்டிங்குலேர்ந்து திரும்புற வரைக்கும் அமைச்சரவையை அறிவிச்சுட வேணாம்”னு தகவல் அனுப்பினார் எம்ஜிஆர். ப.உ.சண்முகம் வீட்டுல எல்லாரையும் கூட்டி இதுபத்தி ஆலோசனை கேட்டார் தலைவர். பலர் “கூடாது”ன்னாங்க. ஏன்னா, “அது ரொம்ப முக்கியமான துறை; எதாவது சின்ன தப்பு நடந்துட்டாலும் அவருக்கு சினிமாலதான் அக்கறை; இது சும்மான்னு எதிர்க்கட்சிங்க பிரச்சாரம் பண்ணுவாங்க; கழகத்துப் பேரை அது கெடுத்துடும்”னு பலரும் சொன்னாங்க. கடைசியா “அமைச்சரவையைக் கொடுத்துடலாம்; ஆனா, அமைச்சரவையில இருக்குறப்போ சினிமாலேர்ந்து ஒதுங்கி இருக்கணும்”னு முடிவெடுத்தாங்க. அந்த முடிவை நான் தான் எம்ஜிஆர்கிட்ட கொண்டுபோய்ப் படிச்சுக் காண்பிச்சேன். “அப்ப முடியாதுன்றாங்க, அப்படித்தானே!”ன்னு கோபமா கேட்டார்.
அடுத்து, ஜெயலலிதாவை மதுரை கூட்டத்துல கட்சிக்குள்ள கொண்டுவரணும்னு நெனைச்சார். அதுக்கும் கட்சிக்குள்ள எதிர்ப்பு இருந்துச்சு. இதுக்கெல்லாம் தொடர்ச்சியாகத்தான் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் கணக்குக் கேட்டு அவர் பேசினார். பெரிய களேபரம் ஆச்சு. என்ன முடிவெடுக்குறதுன்னு கூடிப் பேசினாங்க. பெரும்பாலானவங்க கட்சியை விட்டு எம்ஜிஆரை நீக்கணும்னாங்க. தலைவருக்கு மனசில்லை. தவிச்சார். பேச்சு போய்க்கிட்டே இருந்துச்சு. “சரி, இன்னிக்கு ஆற விட்டு நாளைக்குப் பேசிக்கலாம்”னு சொல்லிக் கூட்டத்தை அவர் முடிச்சப்போ, “நீங்க இப்படி இழுப்பீங்கன்னு சொல்லித்தான் நான் நியூஸை அனுப்பிட்டேன்”னார் நாவலர். அதாவது, வெளியில நின்ன பத்திரிகையாளர்கள் மத்தியில “எம்ஜிஆர் மேல நடவடிக்கை எடுத்துட்டோம்”னு செய்தி போயிட்டுது. தலைவர் பதறிப்போய் “என்ன இப்படிச் செஞ்சுட்டீங்க!”ன்னு சொல்லி “ஓடிப்போய் செய்தியை நிறுத்துப்பா”ன்னு என்னை அனுப்பினார். ஆனா, அதுக்குள்ளேயே செய்தியை டெல்லிக்கு அனுப்பியாச்சுன்னுட்டார் பிடிஐ நிருபர் வெங்கட்ராமன்.
எம்ஜிஆர் வெளியேற்றத்துக்காக கருணாநிதி என்றைக்காவது வருந்தியிருக்கிறாரா?
நாவலர் அவசரப்பட்டிருக்கக் கூடாதுன்னு சொல்வார். ஆனா, “கட்சியை விட்டு வெளியேற்றாம இருந்திருந்தாலும் ரொம்ப நாளைக்கு எம்ஜிஆர் நீடிச்சுருக்க மாட்டார். கட்சி பிளவுபட்டதுல டெல்லியின் சதி இருந்தது”ன்னு தலைவர் பல முறை சொல்லியிருக்கிறார்.
அதற்குப் பின் திமுக - அதிமுக இணைப்பு சம்பந்தமாக எப்போது முதல் பேச்சு தொடங்கியது?
கட்சி பிரிஞ்சு எம்ஜிஆர் போய்ட்டாரே தவிர, அதிமுகன்னு ஒரு கட்சி நீடிச்சதுல தலைவருக்கு வருத்தம் இருந்ததில்லை. அது அழியணும், வீணாப்போகணும்னு அவர் நெனைச்சதில்லை. திராவிட இயக்கத்துலேர்ந்து வந்த ரெண்டுல ஒரு கட்சிதான் ஆட்சியில இருக்க முடியும்கிற சூழல் ஏற்பட்டதுல ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்துச்சு. 1979-ல ஒரு இணைப்பு முயற்சி நடந்துச்சு. பிஜு பட்நாயக் மத்தியஸ்தம் செஞ்சார்.
ரெண்டு பேரும் பேசினாங்க. கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சி டுச்சுன்னு நெனைச்சோம். மறுநாளே வேலூர் கூட்டத்தில் வேறு மாதிரி பேசினார் எம்ஜிஆர். இடையில் என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அதே மாதிரி, அவரோட இறுதிக் காலத்துல அப்படி ஒரு சூழல் நெருங்குச்சு. ஆனா, அவரைச் சுத்தி இருந்தவங்க அதை விரும்பலை. எல்லாத்தையும் தாண்டி, அவங்களுக்குள்ள ஒரு ஆழமான உறவு இருந்துச்சு. எம்ஜிஆர் மருத்துவமனையில இருந்தப்போ ‘நானும் பிரார்த்திக்கிறேன்’னு எழுதினாருல்ல... அப்ப டிக்டேட் செய்யும்போதே தலைவர் கண்ணெல்லாம் கலங்கும். எம்ஜிஆர் இறந்த இரவு முழுக்கக் கண்ணீர் வடிச்சார். நானே அழுதேன் சார். ஆயிரம் இருந்தாலும், அரசியல் வேற - அன்பு வேறல்ல!
முதல்வர் கருணாநிதி - எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. ஒப்பிடுங்கள்...
எந்தப் பதவியில இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; காலையில 4.30 மணிக்கு எழுந்துடுவார். நான் காலையில 7.30 மணிக்கு இங்கே வருவேன். அதுக்குள்ள எல்லாப் பத்திரிகைகளையும் படிச்சுட்டு, உடற்பயிற்சி முடிச்சிக் குளிச்சுட்டு, ‘முரசொலி’ கடிதம் முடிச்சுட்டுத் தயாராகிடுவார். நாளெல்லாம் வேலை முடிச்சு இரவு படுக்கைக்குத் திரும்ப 11 மணி ஆயிடும். அப்புறம்தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்புறமும் 12 மணி வரைக்கும் ஏதாவது வாசிச்சுட்டு தான் படுப்பார். சட்ட மன்றம் அவரைப் பொறுத்தமட்டுல ரொம்ப முக்கியமான இடம். ஆளுங்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி, எதிர்க்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி; பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போற மாணவனை மாதிரிதான் தயாராவார். இரவெல்லாம் படிப்பார். அதுவும் பட்ஜெட் சமயம்னா கேட்கவே வேணாம். அவரு வேகத்துக்கு ஈடுகொடுக்கத் திணறணும். உரைகளை டிக்டேட் பண்ணும் போது ஏதோ இன்னொரு ஆள் அவருக்குள்ளே புகுந்துகிட்ட மாதிரி இருக்கும். உண்மையான ஆவேசம் இருக்கும்.
சமத்துவபுரம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சியிலேயும் அரசுப் பணிகள்லேயும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டுவந்த தருணங்கள்ல அவ்ளோ பெருமிதமா இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார். தமிழ்நாடு எல்லாத்துலேயும் முதல்ல வரணும்; சமூக நீதியைக் கொண்டுவரணும்… அதான் அவருக்கு! அதே மாதிரி இக்கட்டான சமயங்கள்ல அதிகாரிகள் சொல்லைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டார். நேரம் காலம் பார்க்காம நேரடியாப் புறப்பட்டுடுவார். வெள்ளத்துல புழல் ஏரி உடைஞ்சுடும்கிற சூழல்னு ஒருமுறை தகவல் வந்தப்போ அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஓடினார். முதல்வரே இப்படி ஓடி வந்தா அதிகாரிங்க எப்படிச் சும்மா இருக்க முடியும்? அத்தனை பேரும் மெனக்கெட்டு, ஒரு பெரிய படையையே இறக்கிப் பெரிய வெள்ள அபாயத்துலேர்ந்து சென்னையைக் காப்பாத்தினார். அப்போ ‘தினமணி’யில் ‘தூங்காத கருணாநிதி!’ன்னு ஒரு தலையங்கம்கூட எழுதியிருந்தாங்க. அப்படி ஒரு அக்கறையைக் காட்டுவார். ஆனா, இவ்வளவையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவராத்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வரா இருக்குறப்போ அவரு கை கட்டப்பட்ட மாதிரி இருக்கிறதா தோணும். எதிர்க்கட்சித் தலைவரா இருக்குறப்போ இன்னும் கூடுதல் துடிப்போடும் படைப்பூக்கத்தோடும் இருப்பார். தலைவரோட முழு சொரூபத்தைப் பார்க்கணும்னா போராட்டக் காலங்கள்ல பார்க்கணும். எதிர்ப்புகள் மத்தியிலதான் விசுவரூபமெடுத்து நிற்பார்.
1970-களில் மாநில சுயாட்சி விவகாரத்தில் அவர் அவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு எது உந்துசக்தியாக இருந்தது?
திராவிட நாடு கேட்டு உருவான கட்சி சார் இது. அது இல்லைன்னு ஆனப்போ இங்கே உள்ள தமிழர்கள் சுயாதீனமா தங்களோட வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்குறதுக்கு அடுத்த நிலையில இருந்த தீர்வு மாநில சுயாட்சி. இயக்கத்தோட மைய நோக்கமா மாநில சுயாட்சியை அண்ணா வளர்த்தெடுத்தார். நிறைய மாற்றங்களைக் கொண்டுவரணும்னு நெனைச்சு ஆட்சிக்கு வந்தவங்களுக்கு, மாநில அரசுகளோட கையில ஒண்ணும் இல்லைங்கிறதுதான் ஆட்சிக்கு வந்த பின்னாடி தெரிஞ்சுச்சு. அண்ணா வழி வந்ததாலேயும் 1971 தேர்தல்ல பெரிய வெற்றியைத் திமுகவுக்குத் தமிழக மக்கள் கொடுத்திருந்ததாலேயும் மாநில சுயாட்சியை அந்த ஆட்சிக் காலகட்டத்துலேயே அடைஞ்சுடணும்னு ஒரு உத்வேகம் அன்னிக்கு இருந்துச்சு. அப்புறம் மாநில அரசு எல்லாத்துக்கும் டெல்லிக்கு முன்னாடி கைகட்டி நிக்க வேண்டியிருந்தது வேற கோபத்தை உண்டாக்குச்சு. சுதந்திர தினத்தையொட்டி கோட்டையைச் சுத்தி வளர்ந்திருந்த புதரைச் சுத்தப் படுத்தச் சொன்னார் தலைவர். “இது ராணுவத்துக்குச் சொந்தமான கட்டிடம். மத்திய அரசைக் கேட்காமல் நாம் வெள்ளைகூட அடிக்க முடியாது”ன்னு சொன்னாங்க அதிகாரிகள். தமிழ்நாட்டு மக்களோட முழு ஆதரவைப் பெற்ற ஒரு முதலமைச்சருக்கு அந்த மாநிலத்தோட தலைமைச் செயலகத்தைச் சுத்தப்படுத்துறதுக்குக்கூட டெல்லிகிட்ட அனுமதி கேட்கணும்னா இது அக்கிரமம் இல்லையா? அதிகாரம் இல்லாத பதவியை வெச்சிக்கிட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும்கிற கோபம்தான் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கான உந்துசக்தி. அப்பவே தலைமைச் செயலகத்துக்கு ஒரு புதுக் கட்டிடம் கட்டணும்னு தலைவர் முடிவெடுத்துட்டார். அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள்ல அது முடியாமப் போச்சு. 2006-ல ஆட்சிக்கு வந்தப்போ இந்த முறை எப்படியாவது கட்டிடணும்னுதான் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினார். அது எத்தனை வருஷக் கனவுன்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்; அதனாலதான் அதை மருத்துவமனையாக்கிச் சிதைச்சார்!
புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவமனையாக்கி ஜெயலலிதா அறிவித்தபோது, கருணாநிதி என்ன மனநிலையில் இருந்தார்?
மனசுக்குள்ள கவலை, கோபம் எல்லாம் இருக்கும். ஆனால், வெளிக்காட்டிக்க மாட்டார். பொதுவா ஒரு குணம் உண்டு அவருகிட்ட. தனிப்பட்ட விஷயங்கள் அவரை ரொம்பத் துளைக்காது. பொது விஷயங்கள்தான் கடுமையா பாதிக்கும். எனக்குத் தெரிஞ்சு அவரைக் கடுமையா பாதிச்ச விஷயங்கள்னா இலங்கைத் தமிழர் கள் பிரச்சினை, அண்ணா, எம்ஜிஆர், முரசொலி மாறனோட மரணங்கள்.
கட்சியின் வெற்றி - தோல்விகளை கருணாநிதி எப்படி எடுத்துக்கொள்வார்?
ரெண்டுக்குமே பெரிசா சந்தோஷத்தையோ சோகத்தையோ வெளிப்படுத்த மாட்டார். கட்சி தோத்துடுச்சுன்னா சோகமா வர்ற கட்சிக்காரங்களை உற்சாகப்படுத்துறவரா அவர்தான் இருப்பார். தோத்துட்டா, “எங்கே தப்பு நடந்துருக்கு, ஓட்டையை எப்படி அடைக்குறது, கட்சியை எப்படி வளர்க்குறதுன்னுதான் பார்க்கணுமே தவிர, அதுக்காக வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை”னு சொல்வார். ஜெயிக்கும்போது, “பதவி வரலைய்யா, பொறுப்பு வந்துருக்கு; இனிமே இன்னும் கவனமா நடந்துக்கணும்”னு கட்சிக்காரர்கள்கிட்ட சொல்வார். ஸ்டாலின் மேயரா ஜெயிச்சப்போகூட அதைத்தான் சொன்னார். திமுகவோட வரலாற்று வெற்றின்னா அது 1971 தேர்தல் வெற்றிதான். 184 சீட் ஜெயிச்சது. இரவு 2 மணி வரை வெற்றி அறிவிப்புகள் வந்துக்கிட்டே இருந்துச்சு. அப்போகூட, “போதும்பா. இதுக்கு மேல ஜெயிச்சி என்ன பண்ணப்போறோம்! எதிர்க்கட்சினு வேணாமா!”ன்னுதான் கேட்டார். தோல்வின்னு வந்தா உடனே அவருக்கு மக்களைப் பார்க்கணும். தெம்பாயிடுவார்!
கருணாநிதியின் டிக்டேஷனில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். எது உங்களுக்குத் தனிப்பட்ட வகையில் பிடித்தது?
அவரோட சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’. பல சமயங்கள்ல அவர் சொல்லும்போது கண்ணீர் வந்துடும். எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கார்! மறக்க முடியாத இன்னொரு அனுபவம், 1971-ல் கண் சிகிச்சைக் காக அமெரிக்கா போனப்போ, ஆர்லந்தோ ஏரிக்கரையிலேயே உட்கார்ந்து அங்கே பார்த்த நீரூற்றைப் பத்தி ஒரு கவிதை எழுதினார். அதை என்னிடம் போனில் டிக்டேட் செஞ்சார். பத்துத் தடவை திருப்பித் திருப்பிப் படிச்சிக் காட்டச் சொல்லி அதை ‘முரசொலி’யில் போட்டார். பர்ஃபெக்ஷனுக்கு அவர் கொடுக்குற உழைப்பு ஒப்பிடவே முடியாதது. 1989-ல ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கத்துக்கிட்டேன். அதுல அவருக்குக் கூடுதல் சந்தோஷம்.
அவர் பேசிய கூட்டங்களில் எது பிடித்தமானது?
அய்யய்யோ, அது நிறைய இருக்கே! அந்த அனுபவங்களே தனி! தேர்தல் நேரத்தில் ஒசூரில் சாயந்திரம் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்; காலையில் கிருஷ்ணகிரியில் வந்து, “அதோ உதித்துவிட்டான் உதய சூரியன்!”னு முடிப்பார். இப்போ மாதிரி நேரக் கட்டுப்பாடெல்லாம் அப்போ கிடையாதுல்ல! திருச்சியில ஆரம்பிச்சி, கன்னியாகுமரியில முடிப்போம். இடையில 100 இடங்கள்ல எல்லாம் பேசி யிருக்கார். வண்டியில ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையில ரெண்டு ரெண்டு நிமிஷம் தூங்கி முழிப்பார். பல சமயம் அதுவும் கிடையாது. சுவாரஸ்யமா பேச்சுக் கொடுத்துக்கிட்டே வருவார். ஊர் வந்ததும் தூங்கிக்கிட்டு இருந்தோம்னா தலையில குட்டு விழும். “நாம தூங்கிட்டா நாடும் தூங்கிடும்யா”ம்பார். 1991-லன்னு நெனைக்கிறேன்... அலகாபாத்துலேயும் பாட்னாவுலேயும் பேசினார். “நான் ஒரு தேச விரோதி. உங்களைச் சந்திக்க வந்திருக்கிறே”னு ஆரம்பிக்கிறார். அடுத்து ராமரைப் பத்தி. நான் அரண்டுபோன கூட்டங்கள் அவை.
இந்திரா காந்தியில் தொடங்கி மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களில் அவருக்கு நெருக்கமாக இருந்த பிரதமர் யார்?
நெருக்கடி நிலைக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தபோது இந்திராவே தலைவர் சொல்றதுக்கு நிறைய மதிப்பளிச்சு செஞ்சுருக்கார். ஏனைய எல்லாத் தலைவர்களையும் வரவேற்பறையில சந்திக்குற பழக்கம் கொண்ட மன்மோகன் சிங் இவரை மட்டும் வாசலிலேயே வந்து வரவேற்பார்; வழியனுப்புவார். அப்படி ஒரு மரியாதை எல்லோர்கிட்டேயும் இருந்துச்சுன்னாலும், அவருக்கு இதயத்துக்கு நெருக்கமா இருந்தவர் வி.பி.சிங். ஒரு ராஜ பரம்பரையில பிறந்திருந்தும் சாதி ஒழிப்புலேயும் சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கியமான காரணம். ரெண்டு பேருமே அவ்வளவு நெருக்கமா இருந்தாங்க.
கருணாநிதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான ஒருவராக இருந்தவர் யார் - உங்கள் பார்வையில்?
மாறன்! ஏதோ உறவு சார்ந்து மட்டுமான நெருக்கம் இல்ல அது. கட்சி, ஆட்சின்னு எல்லாத்துலேயும் பக்க பலமா இருந்தவர் மாறன். ‘மாமா, மாமா’ன்னு உயிரை விடுவார். தனக்கு மனசுல என்ன பட்டுச்சோ அதைச் சொல்லிடுவார்; தலைவர் கருத்தைப் பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டார். கடுமை யான வாசிப்பாளி. தேசிய அரசியல் போற போக்குகளையும் கட்சி எடுக்க வேண்டிய முடிவுகளையும் பத்தி ரொம்ப நுட்பமா கவனிச்சு தலைவர்கிட்ட விவாதிப்பார்.
எதிர்க்கட்சியா இருக்கும்போது ஆளுங்கட்சியோட ஊழல்கள் கையில சிக்கும்போது அந்த ஆவணங்களெல்லாம் நூத்துக்கணக்கான பக்கங்கள்ல இருக்கும் - அதையெல்லாம் படிச்சு விலாவரியா விளக்குவார். கட்சியோட டெல்லி முகமாகவும் சித்தாந்த முகமாகவும் ஒரு காலகட்டம் முழுக்க அவர் இருந்திருக்கார். ‘மாநில சுயாட்சி’யில ரொம்பப் பிடிமானம் உள்ளவர். தப்பு பண்ணுற கட்சிக்காரங்களை உள்கட்சிக் கூட்டங்கள்ல பிடிபிடின்னு பிடிச்சுடுவார். என் மேலேயும் ரொம்பப் பிரியமா இருப்பார். மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில சமயத்துல முட்டல் மோதல் வந்துரும். போறபோக்குல என்னைத் திட்டிட்டுப் போவார் மாறன்.
“பாத்தியாய்யா, உன்னைத் திட்டுற மாதிரி அவன் என்னைத் திட்டிட்டுப் போறான்”னு சொல்வார் தலைவர். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க. மாறனோட மனைவிகிட்ட ஒருமுறை தலைவர் சொன்னது ஞாபகத்துக்கு வருது: “உனக்கு 35 வருஷமாத்தான் மாறனைத் தெரியும். எனக்கு அவன் பிறந்ததில் இருந்தே தெரியும்!”ன்னார். மாறனோட மரணம் தலைவரோட வாழ்க்கையில பெரிய இழப்பு. “அவன் போயிருக்கக் கூடாது; அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கணும்யா”னு சொல்வார். அதே மாதிரி அண்ணா மேல அவருக்கிருந்த மதிப்பு ரொம்ப உணர்ச்சிபூர்வமானது.
அண்ணா இருக்கும்போது அவரோடு நிறைய முரண்பாடுகளும் இவருக்கு இருந்தது இல்லையா?
அடிப்படையில பெரியார்கிட்டேயிருந்து உருவான ஆறு தான் தலைவர். அண்ணாவும் பெரியாரோடு வந்து கலந்த ஆறுன்னாலும் அவருக்குன்னு தனித்த பார்வை ஆரம்பத்துலேர்ந்தே இருந்துருக்கு. திமுக உருவானப்போ பெரியாரை யும் தாண்டி அண்ணாகூட தலைவர் நின்னார்னா அதுக்குப் பின்னிருந்த விஷயங்களை நாம பார்க்கணும். அண்ணாவை ஒரு அண்ணனாவேதான் தலைவர் பார்த்துருக்கார். பல விஷயங்கள்ல அண்ணா முடிவெடுக்குற தருணங்கள்ல பக்கபலமா இருந்துருக்கார்.
சம்பத், கண்ணதாசனுக்கெல்லாம் ஏற்பட்ட கோபமே தலைவரோட பேச்சுக்கு அண்ணா பெரிய மதிப்பு கொடுக்குறார்ங்கிறதாதானே இருந்துருக்கு! அதேசமயம், சில சமயங்கள்ல முரண்படவும் செஞ்சுருக்கார். சண்டையெல்லாமும் போட்டுருக்கார். வெளிக்காட்டிக்க மாட்டார்.
1959 சென்னை மாநகராட்சித் தேர்தல்ல, ‘30 இடங்கள்ல போட்டியிட்டால் போதும்’னு நெனைக்குற அண்ணாகிட்ட ‘90 இடங்கள்ல போட்டியிடுவோம்’னு சொல்லி 45 இடங்களையும் ஜெயிக்கவெச்சு மாநகராட்சியை முதல் முறையா கைப்பற்றுகிற முடிவுக்கு இவர்தானே காரணமா இருந்திருக்கார்! ஆனா, தான் சொல்லி அண்ணா செஞ்சதையும் சரி, அண்ணாவோட முரண்பட்ட தருணங்களையும் சரி; வெளிக்காட்டிக்குற குணம் அவர்கிட்ட என்னிக்கும் இருந்தது கிடையாது.
எனக்கே இதெல்லாம் அப்போ கூட இருந்தவங்க சொல்லித் தான் தெரியும்.
என் அனுபவத்துல அண்ணாங்கிற பெயரே அவரோட உயிரோட உணர்வுபூர்வமா பிணைஞ்சது. அண்ணா மேம்பாலம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூலகம் இப்படி அண்ணா பெயரிலான கட்டிடங்கள்கூட விதிவிலக்கு இல்லை. அண்ணாவை நினைவுகூராத நாளை நான் பார்த்ததில்லை.
கட்சி அளவில் அவரைப் பெரிதாக உலுக்கிய நிகழ்வு எது?
மூணு காலகட்டங்களைச் சொல்லலாம். முதலாவது, நெருக்கடிநிலைக் காலகட்டம். கட்சிக்காரங்களைக் கொத்துக் கொத்தா போலீஸ் சிறைக்கு அள்ளிக்கிட்டுப் போனதும் அவங்களைச் சித்திரவதைக்குள்ளாக்குனதும் கட்சியை முடக்குறதுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அவரை ரொம்பப் பாதிச்சுச்சு. இரண்டாவது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும், இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப்போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார்.
‘இல்லை; இப்போ பதவி யிலேயும் கூட்டணியிலேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆள் இல்லாமப் போய்டும்’னு சொல்லி பலர் அதைத் தடுத்தாங்க. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டு பேரும் உறுதியா பேசுனதாலதான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனா, எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை யும் பார்த்தப்போ துடிச்சுப் போனார். பிரபாகரன் இறந்த செய்தி வந்த அன்னிக்கெல்லாம் உடைஞ்சுட்டார்.
மூணாவது, அலைக்கற்றை விவகாரம்.
அவருக்குத் தெரியாம பல விஷயங்கள் இதுல நடந்துட்டாலும், ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி முறைகேடுன்னு அபாண்டமா சுமத்தப்பட்ட பழியை எல்லோரும் திரும்பத் திரும்பப் பேசிப் பெரிசாக்கி, திமுகவை முடக்குறதுக்கான பெரிய சூழ்ச்சியா இதைக் கையாண்டப்போ கடுமையா பாதிக்கப்பட்டார்.
நெருக்கடிநிலையின்போது உங்களையும் குறிவைத்தார்கள் இல்லையா?
கடுமையான நெருக்கடி கொடுத்தாங்க. வீட்டுக்கே போலீஸ்காரங்களை அனுப்பி வைப்பாங்க. திடீர்னு வீட்டுல புகுந்து, தலையணையெல்லாம் எடுத்து, “இதுக்குள்ளதான் பணத்தை ஒளிச்சி வெச்சிருந்தீங்களா?”ன்னு கேட்பாங்க. சோதனைங்கிற பேருல சித்திரவதை. அடிக்கடி வதந்தியைக் கிளப்பி உளவியல் நெருக்கடி. இப்படிப் பலதையும் செஞ்சாங்க. அதேசமயம், மத்தவங்களோட ஒப்பிடும்போது எனக்குக் குடைச்சல் கம்மின்னு சொல்லணும்.
தலைவருக்கு உதவியா இருந்த பலரைப் பிடிச்சுட்டுப் போய் அடிஅடின்னு அடிச்சுத் துவைச்சாங்க. கட்சிக்காரங்க பலரைச் சிறையில வெச்சு வதைச்சாங்க. போலீஸ் அடி உதையிலேயே சிட்டிபாபு செத்துப்போனார். தலைவர் கூட இருந்த பலர் அப்போ பயந்துக்கிட்டு வேலையை விட்டு ஓடிட்டாங்க. அப்போதான் அவருகூட இன்னும் உறுதுணையா இருக்கணும்னு எனக்குத் தோணுச்சு.
சரி, உங்கள் வீட்டில் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
என் வீட்டுக்காரங்க பெயர் யோகம். காரைக்குடி. என்னை மாதிரி அவங்களும் கஷ்டப்படுற குடும்பத்துலேர்ந்து வந்தவங்கதான். 1971-ல் எங்க கல்யாணம் நடந்துச்சு. பெங்களூர் போய்ட்டு காரில் திரும்பி வந்துக்கிட்டிருக்கோம். தலைவர் பேச்சுவாக்குல சொல்றாரு, “அடுத்த வாரம் இந்நேரம் சண்முகநாதன் பொண்டாட்டியோட இருப்பான்.” எனக்குத் திகைப்பாயிப் போச்சு. கிருஷ்ணகிரி பக்கம் ஒரு இடத்துல தலைவர் காபி குடிக்கிறதுக்காக இறங்கினாரு.
அப்ப நான் நைஸா சின்னம்மாகிட்ட கேட்டேன், “ஏம்மா, தலைவரு ஏதோ கல்யாணம்னு சொன்னாரே, என்னதும்மா?” அவங்கதான் பத்திரிகை முதற்கொண்டு அடிச்சு வெச்சிட்ட தகவலைச் சொன்னாங்க. தலைவர் சொல்லி கருணானந் தம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தார். கல்யாணத்து அன்னிக்கு எனக்கு, அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி டிரஸ். சின்னம்மாவோட நகைகளை எல்லாம் பொண்ணுக்குப் போட்டு சிங்காரிச்சிருந்தாங்க. அப்போ ஆரம்பிச்சு என் குடும்பத்துல எல்லாத்துக்கும் அவர் முன்னாடி நின்னுருக்கார்.
எங்கப்பா ஆஸ்பத்திரியில இருந்தப்போ ‘ஏன் இன்னும் போய்ப் பார்க்கலை?’னு மொத்த குடும்பத்தையும் சத்தம் போட்டு அனுப்பிச்சார். அப்பா இறந்தப்போ முழு நாளும் கூடவே நின்னார். இப்படிப்பட்ட தலைவரோட ஏன் நிக்குறன்னு எப்படி ஒரு குடும்பம் கேட்கும்?
காலையில 7 மணிக்கு வருவேன், ராத்திரி 11 மணிக்குப் போவேன். மனைவிக்கும் பழகிடுச்சு, எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. அவங்களுக்கும் பழகிடுச்சு! ஆட்சியில இருந்தப்போதான் ரெண்டு பசங்களும் பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சாங்க. அவங்க விரும்பின படிப்பு கிடைக்கலை. அதைக்கூட தலைவர்கிட்டே எடுத்துக்கிட்டுப் போகலை. “நீங்க எடுத்த மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்குதோ அதையே படிங்க”ன்னு சொல்லிட்டேன்.
ரெண்டு பேருமே இன்னிக்குத் தனியார் நிறுவனத்துலதான் வேலையில இருக்காங்க. சொந்த பந்தத்துலேயேகூட “சண்முகநாதன் மிலிட்ரிமேன் மாதிரி. கடமைதான் அவனுக்கு முக்கியம்!”னு பேசுவாங்க. சனி, ஞாயிறு லீவு எடுத்தது இல்லை. ஒரு நல்லது கெட்டதுக்குப் போனதில்லை, ஊருக்குப் போக முடிஞ்சதில்லை. அக்கா, தங்கச்சி கல்யாணமா இருந்தாலும் - தலைவர் தலைமையில நடக்கும் - அதுக்கும் தலைவர் கூடவே போயிட்டு, தலைவர் கூடவே வந்துடுவேன்.
சென்னை வந்த புதுசுல சினிமா பார்க்குறதுல ஆர்வம் வந்துச்சு. ராஜ்கபூர் படம் ஒண்ணு பார்த்தேன். அதோட அதுவும் போயிடுச்சு. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இப்போதான் ஒரு வாரம் ஊருக்குப் போய்ட்டு வந்தேன். அதுவும் “ஊருக்குக் குடும்பத்தோட போயி ஒரு வாரம் தங்கிட்டு வாய்யா; எப்போதான் ரெஸ்ட் எடுக்கப்போற”ன்னு ஸ்டாலின் ரொம்ப வற்புறுத்தி, சொல்லி அனுப்பினதால! இப்போ எனக்கு மாச பென்ஷன் 48 ஆயிரம் ரூபா வருது.
என் மூணு தம்பிகள்ல ரெண்டு பேர் கஷ்ட சூழல்ல இருக்காங்கங்கிறதால, அவங்களுக்கு மாசம் 10 ஆயிரம் ரூபா, தங்கைக்கு 10 ஆயிரம் ரூபா கொடுத்துடுவேன். அப்புறம் எங்க தெருவுல இருக்குற ஒரு ஆட்டோ டிரைவர், இங்கே இருக்குற தம்பிகள் இவங்களுக்கு அப்பப்போ முடிஞ்ச உதவிகளைச் செய்வேன். மிச்ச பணம் எனக்குத் தாராளமா போதும். வீட்டுலேயே கிடக்கலாம். ஆனா, என்னால முடியாது!
இரண்டு முறை நீங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டீர்கள் அல்லவா?
அதெல்லாம் என்ன சார், சின்னச் சின்ன வருத்தங்கள்தானே! பொதுவா எனக்கு அவரோட கோபம் நிமிஷங்களைத் தாண்டாதுங்கிறது நல்லாப் புரியும். ஒரே விஷயம் என்னன்னா, செய்யாத தப்புக்குத் திட்டிட்டா என்னால தாங்க முடியாது. அவர் என்னை நிறையத் திட்டுவார். ஒருமுறை ரயிலில் போகும்போது திட்டிட்டார். அதுவும் நான் செய்யாத தப்புக்கு. சேர்ந்த புதுசுல அப்படி ஒரு நாள் ஆயிடுச்சு. ரயில்ல போய்க்கிட்டு இருக்கோம்.
நான் தனியா உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கேன். தலைவர்கூட அன்பில் தர்மலிங்கம் மாமா இருக்கார். அவர்கிட்ட சொல்லி, “யோவ் தப்பா திட்டிட்டேன். அவன் தாங்க மாட்டான். அழுதுக் கிட்டிருப்பான். நீ போய் சமாதானப்படுத்திக் கூட்டி வாய்யா!”ன்னு சொல்லி அனுப்பியிருந்தார். அன்பில் மாமா என்கிட்ட வந்து சொன்னார், “மாப்பிளை, இன்னிக்கு இல்லை; என்னிக்கும் இதை ஞாபகத்துல வெச்சிக்க. நாம விரும்பி தாலி கட்டிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி தலைவர். இப்படி ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர்கிட்டேயும் சில குறைகள் இருக்கலாம். ஆனா, இப்பேர்ப்பட்ட மனுஷனை நாம பாதியில விட்டுட்டுப் போயிட முடியாது”ன்னார். அதைத்தான் நான் எப்பவும் நெனைச்சுக்குறது.
அழகிரி, ஸ்டாலின், தமிழரசு எல்லாருமே ஒண்ணோட ஒண்ணா பழகிட்டோம். அதனால, உரிமையா பதிலுக்குப் பதிலு பேசிட்டுச் சமாதானமாயிடுவோம். ரெண்டு முறை கோவிச்சுக்கிட்டு போனபோதும் யாரோ எதுவோ சொல்லி தலைவரும் அதை நம்பிட்டார்ங்கிற சூழல்லதான் போய்ட்டேன். அப்புறம் ஆள் விட்டு அனுப்புவார். ஓடியாந்துருவேன். அவர்கூட இருந்துட்டு பிரிஞ்சு இருக்க முடியாது சார். இதோ, அவர் பேசிப் பல மாதங்கள் ஆகுது. இங்கே எனக்குப் பெரிசா எந்த வேலையும் இல்ல. ஓடியாந்துர்றேனே, எதுக்காக? நேத்திக்கூட அவரோட அறைக்குப் போய்ப் பார்த்தேன்.
மௌனமா இருந்தார். “ஐயா, ஒரு நாளைக்கு நூறு வாட்டிக் கூப்பிடுவீங்களே, ஒரு வாட்டி திட்டவாவது செய்யுங்களேன்”னேன். அவர் ஏதோ பேச வர்றாரு. ஆனா வார்த்தை வரலை. “நீங்க இருந்தா போதுமய்யா. நான் இருந்து என்ன பிரயோஜனம்?”னு கேட்டுக் கதறிட்டு வந்தேன். எத்தனை லட்சம் பேர் காத்துக் கிடக்குறோம், ஒரு வார்த்தைக்காக. என்னோட இந்தப் பிறவி தலைவருக்கானது சார். அவர் இல்லாம நான் இல்லை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக