திங்கள், 25 செப்டம்பர், 2017

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை!

தினேஷ் ராமையா விகடன் :  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கையைப் போன்றே சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்ற 74 நாள்கள் குறித்தும் பல்வேறு ஊகங்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருந்தன. அவர் கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும், அதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அதுபோலவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் எதுவும் வெளியாகாதது, அந்த சந்தேகங்களுக்கு வலுசேர்ப்பதாகவே ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கருதினர். இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஜெயலலிதா மரணம்! விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Rtd Justice Arumugamasy to enquire Former CM Jayalalitha death controversy

கோவையில் கடந்த 1952-ம் ஆண்டில் அர்த்தநாரிசுவாமி-மாரியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர், 1971-ல் இளங்கலைப் பட்டபடிப்பை முடித்தார். பின்னர், 1974-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த அவர், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மயில்சாமி என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 1986-ம் ஆண்டில் மாவட்ட முன்சீப்பாகப் பதவியேற்ற அவர், 1998-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராகக் கடந்த 2009-ம் ஆண்டில் பதவியேற்ற அவர், 2010-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

 உயர் நீதிமன்ற நீதிபதியாக 4 ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி ஆறுமுகசாமி, கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னர், பல்வேறு அமைப்புகளின் உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கடைசியாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக 2016-ம் ஆண்டு வரை இருந்தார். இவரது பதவிக்காலத்தில் சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜை நிலம் தொடர்பான வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

 ''ஜார்ஜ் ஒன்றும் ஜார்ஜ் கோட்டைக்கு சக்கரவர்த்தி அல்ல'' என்று இவர் கூறிய வார்த்தைகள், நீதித்துறை, காவல்துறை வட்டாரங்களைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் ஜார்ஜும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை; நீதிபதியும் விடுப்பில் சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை: