![]() |
M R Stalin Gnanam : காலத்தே வாழும் கருணாம்மானின் கேள்விகள் (21 வருட நினைவுகள்)
தமிழ் அரசியல் சூழலில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல் எதுவெனக் கேட்டால் அது 'துரோகி' என்பதேயாகும். துரையப்பா தொடங்கி அது இன்றுவரை தொடருகின்றது.
இந்த தொடர்ச்சியில் கருணாம்மானின் பெயரும் சுமார் இருபது வருடங்களாக படாத பாடுபட்டு வந்திருக்கின்றது.
அண்மையில் உதயமான 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின்' உருவாக்கத்தையும் அதில் கருணாம்மானின் வகிபாகத்தையும் தொடர்ந்து மீண்டும் அவர் மீதான துரோக சேறடிப்புகளை பரவலாக காண முடிகின்றது.
கருணாம்மானை துரோகி என்பதற்கு அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதே அடிப்படைக்கு காரணமாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமிகளால் உருவாக்கப்பட்ட ஊடகங்களே தமிழ் சூழலில் பெரும்பாலும் இன்றுவரை செல்வாக்குச் செலுத்தி வருவதனால் சுமார் 6800 கிழக்குப் போராளிகளை பலிகொடுத்து இருபது வருடங்களாக போராட்ட களத்தில் நின்ற கருணாம்மானும் அவருடனிருந்த 6000 கிழக்குப் போராளிகளும் ஏன் பிரிந்தார்கள் என்பது முற்றுமுழுதாக மறைக்கப்பட்டு துரோகி என்னும் ஒற்றைச் சொல்லாடலில் இன்றைய இளம் சமூகத்தினரின் சிந்தனைகள் காயடிக்கப்பட்டு வருகின்றன.
இற்றைக்கு 21 வருடங்களுக்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் 'கிழக்கு பிளவு' பொது வெளியில் அறிவிக்கப்பட்டதும் கருணாம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். ஆனால் அக்கடிதத்தில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்தோ தமிழ்த்தேசிய முலாம் கொண்டு கருணாம்மானை துரோகி என விழிக்கும் அரசியல் சக்திகளின் தரப்பிலிருந்தோ இன்றுவரை எவ்வித பதிலும் முன்வைக்கப்பட வில்லை என்பதோடு அவரது குற்றச்சாட்டுக்கள் ஆதார பூர்வமாக மறுக்கப்படவுமில்லை.
அக்கடிதத்தில் அவர் மிகத்தெளிவாக புலிகளின் கட்டமைப்பில் காணப்படும் யாழ் மேலாதிக்க அணுகுமுறை பற்றி பிரஸ்தாபித்ததோடு வடக்கு கிழக்கு மாகாணங்களிடையே இணைந்த நிர்வாகம் இனியொருபோதும் சாத்தியமில்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். அதற்கு ஆதாரமாக பதின்னான்கு முக்கிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
*எமது போரில் வரலாற்றில் எங்கள் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவருமே மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அது மட்டும் அல்ல பல படுகொலைகளையும் அழிவுகளையும் எங்கள் மாவட்டங்கள் சந்தித்துள்ளன.
*இதுவரை நடந்த போராட்டத்தில் 6800 மட்-அம்பாறை போராளிகள் களத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள். இவர்களில் கிட்டதட்ட 4000 வீரர்கள் உங்களின் கட்டளையை ஏற்று வந்து யாழ் வன்னி மண்ணில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
*நாங்கள் வன்னி களமுனையில் போரிட்டு கொண்டிருந்த போதெல்லாம் பல பல பிரதேசவாத கருத்துக்களையும் சிக்கல்களையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு வந்திருக்கிறோம். இவைகள் யாவும் உங்களுக்கு தெரிந்த விடயங்கள் இருந்தாலும் உங்கள் மீதுள்ள பக்தியின் காரணமாக எல்லா விடயங்களையும் சமாளித்தே வந்திருக்கிறோம்.
*தற்போது இந்த பிரச்சினை பெரிதாகி விட்டுள்ளது. இதற்காக காரணத்தையும் உங்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
இதுவரை 32 தமிழீழ பொறுப்பாளர்கள் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எவருமே மட்- அம்பாறையை சேர்ந்தவர்கள் கிடையாது.
*போர் மிக உக்கிரமான நடைபெற்ற காலங்களில் இங்குள்ள மக்களும் போராளிகளும் இதை உணர்ந்து கொள்ள விட்டாலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதியான சமாதான சூழ்நிலையில் இதை அனைவரும் அவதானித்து பல கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்கு நாங்கள் பதில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
*அதுமட்டுமல்ல இதுபோன்ற வெளி மாவட்ட தமிழீழத் துறை பொறுப்பாளர்கள் இங்கு வேலை செய்வதால் பல சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்களால் எங்களின் மக்களின் உணர்வுகளையோ போராளிகளின் உணர்வுகளையோ புரிந்து கொள்ள முடியாதுள்ளது.
*இதை விட வேதனையான விடயம் என்னவென்றால் வடக்கிலிருந்து வந்த தமிழீழ நிர்வாக துறை பொறுப்பாளர்கள் இங்கு சொகுசு வாகனங்களில் உலா வரும்போது 400 க்கும் மேற்பட்ட மட்-அம்பாறையைச் சேர்ந்த ஜெயந்தன் படையணிப் போராளிகள் வன்னி களமுனைக் காவலரண்களில் இன்னும் கடமை பார்க்கிறார்கள். இது எந்தவகையில் நீதியாகும்?.
*இந்த சமாதான காலங்களில் எந்தவொரு வீரனும் தனது சொந்த இடத்தில் இருப்பதையும் தனது உறவுகளோடு இருப்பதையுமே விரும்புவான் இதைப்பற்றி அங்குள்ள பொறுப்பாளர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை.
*இதுவரை 32 தமிழீழ பொறுப்பாளர்கள் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எவருமே மட்- அம்பாறையை சேர்ந்தவர்கள் கிடையாது.
*என்னை பொறுத்தவரை இதுவரை காலமும் வட தமிழீழ மக்களுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களையும் கொடுத்து திருப்திகரமாக கடமை செய்துள்ளதாகவே உணர்கின்றேன். தற்போது இந்த வாய்ப்பான காலகட்டத்தில் கிழக்கு மக்களுக்கு கடமை செய்வதையே விரும்புகின்றேன்.
*இந்த விடயத்தில் எவரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை. தமிழீழ நிர்வாக பொறுப்பாளர்களை தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகிறேன்.
*இதனால்தான் இங்கு புலனாய்வுத்துறையும் இடை நிறுத்தியுள்ளேன்.
*நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லவோ உங்களை வெறுக்கவோ இல்லை மாறாக உங்களை எங்களின் கடவுளாகதான் பார்க்கிறோம். சிலவேளை இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இதற்காக உங்களிடம் மன்னிப்பும் கேட்கின்றேன். ஏனெனில் இங்குள்ள மக்களினதும் போராளிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியாமல் அவர்களின் அபிலாசைகளை சுட்டிக்காட்டாமல் இருந்த வரலாற்று தவறை நான் விட விரும்பவில்லை.
*இங்குள்ள மக்களை நீங்கள் நேசித்தால் இங்குள்ள போராளிகள் பொறுப்பாளர்கள் மீது நம்பிக்கை இருந்தால் எங்களை உங்களின் தலைமையின் கீழ் நேரடியாக சுதந்திரமாக செயற்பட விடுங்கள்.
மேற்படி கடிதமானது பிரசுர வடிவில் கிழக்கு மாகாணமெங்கும் விநியோகிக்கப்பட்டபோதிலும் செய்தி ஊடகங்கள் எதிலும் வெளிவரவில்லை.
நான்காம் ஐந்தாம் திகதிகள் முழுக்க தமிழ் ஊடகங்கள் கள்ள மெளனம் காத்தன.
ஆனால் கிழக்கு மாகாணத்தின் சார்பில் கருணாம்மான் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை பல தளபதிகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஆதரித்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் மாகாணமெங்கும் நடாத்தினர். தெருக்களெல்லாம் தமக்கான அரசியல் தலைமையொன்று உருவாகி விட்டதென்கின்ற மகிழ்ச்சியில் விழாக்கோலம் பூண்டிருந்தது. அதுவரைகாலமும் தமது குழந்தைகளை இழுத்துச்சென்று பலியிட்டு வந்த ஒரு இருண்டகாலத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்ட உணர்வு சாமானிய மக்களிடம் மேலோங்கியிருந்தது. பிரபாகரனை சுற்றியிருந்த மேதகு,தேசியத் தலைவர்,ஏகபிரதிநிதி என்கின்ற ஒளிவட்டங்கள் எல்லாம் வீதி வீதியாகப் பந்தாடப்பட்டன. பிரபாகரனின் உருவப் பொம்மைகள் கூட படுவான்கரை வீதிகளில் கொளுத்தப்பட்டன.
இந்த வேளைகளில் கருணாம்மானோ மட்/ஈரலக்குளம் காட்டுப்பகுதியிலுள்ள தனது மீனகம் முகாமில் இருந்து கொண்டு கையிலே ஓரஞ் ஜூஸ் கிளாஸுடன் தன் படையணிகள் புடைசூழ சாவகாசமாக பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். ஒரு வெளிநாட்டு நிருபர் இப்படிக்கேட்டார் 'பிரபாகரனுக்கு இதுவரைகாலமும் இப்படியொரு சவாலை யாரும் விட்டதில்லை. அப்படியிருக்க அவரது ஆளுமை, அதிகாரம்,இரும்புக்கரம் என்பவற்றை உடனிருந்து அறிந்தவர்கள் நீங்கள். உங்களால் அவரை வெற்றிகொள்வதென்பது எவ்வளவு தூரம் சாத்தியம்'? இந்தக்கேள்விக்கு கருணாம்மான் அதுவெல்லாம் அவரைப்பற்றி நீங்கள் அறிந்தவை, ஆனால் அவரது உண்மை முகம் எனக்குத்தெரியும் என்று அநாயசமாக சிரித்துக்கொண்டு பதிலளித்தார். இந்தப் பதிலை பிரபாகரன் வெறும் கோழை, கொலைகளை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர், அவரை விட நானே இராணுவ வித்தகன் என்று பலவறாகப் புரிந்துகொள்ளலாம்.
அதனால்தான் அவர் வன்னிக்கு வருமாறு வந்த அழைப்பை நிராகரித்து சுதாகரித்துக்கொண்டார். பிரபாகரனுக்கு சவால் விட முயன்றவர்கள் யாரும் உயிரோடு மீண்டதில்லை என்பதை கருணாம்மான் தெரியாதவரல்ல. பிரபாகரனை நோக்கி கேள்வியெழுப்புவதானால் இடைவெளியை பேணிக்கொள்ளவேண்டும் என்பதை அறியாதவரல்ல. தனக்கு பாதுகாப்பான சூழல் மட்டு-அம்பாறையில் மட்டுமே உள்ளது என்பதை அவர் நன்கே அறிந்திருந்தார். தலைவர் வன்னிக்கு அழைப்பது 'அன்பாக பேசுவதற்கு' அல்ல என்பதையும் அறிந்தேயிருந்தார் அவர்.எனவே அவர் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக