செவ்வாய், 13 ஜூன், 2017

இந்தியா மத வெறியில் இஸ்லாமிய நாடுகளுடன் போட்டி ?

langovan.balakrishnan. மதங்களின் அடிப்படையே சக மனிதர்களின் மீதான வெறுப்பு உணர்வே. உலகில் சுமார் 4200 மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் "தலையெழுத்தாய்" அந்தந்த மதத்தில் ஒருவராய் பிறந்து விட்ட "பாவத்திற்காக" மிச்ச 4199 மதங்கள் சொல்லும் கடவுள்கள் எல்லாம் பொய் என்றும் தனது மதம் சொல்லும் கடவுள் மட்டுமே மெய் என்றும் நம்பிக்கொண்டும் மற்றவர்களை வெறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
மதம் என்பது - மதம் காட்டும் கடவுள் என்பது பிடித்த ஸ்வீட் மாதிரியோ, பாடல் மாதிரியோ, பிக்னிக் ஸ்பாட் மாதிரியோ எளிமையான விசியம் அல்ல. மனிதன் தன் உயிரையும் விட உயர்வாய் முக்கியத்துவம் கொடுத்து மரியாதை செலுத்தி ஆகவேண்டிய சங்கதியாக மூளைச் சலவை செய்யப்பட்டு விடுகிறது. எனவே சக மனிதர்களின் உயிர்களை தத்தம் மதத்தின் காரணமாய் அலட்சியப்படுத்தும், துன்புறுத்தும், கொல்லும் போக்கு எளிதாய் அவனுக்கு சாத்தியப்பட்டு விடுகிறது.
எனவேதான் உலக வரலாற்றில் பாதிக்கும் மேலான மனித உயிர்கள் மதத்தின் பெயரில் கொல்லப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் பாதிக்கும் மேலான மனித உயிர்கள் மதங்களின் பெயரால் கொல்லப்படுகிறார்கள்.

எனவே மத வெறியால் அடித்துக் கொள்வதற்கு இன்னொரு நாட்டினரின் அவசியம் என்று தனியே எதுவும் தேவைப்படுவதில்லை. தமிழகத்தில் சைவமும், வைணவமும் அடித்துக் கொண்டு செத்தததற்கும், சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றதற்கும் சர்ச்சில்களும், அட்லிகளும் அவசியப்பட்டிருக்கவில்லை. அப்படியே இந்து முஸ்லீம் மதவெறிகளுக்கும், ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாவதற்கும் பிரிட்டனின் தேவை அவசியப்பட்டிருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்துக்கு தனக்கான தேவைகளைக் கவனிப்பதே பெரும்பாடாய் இருந்தது. ஆக்கிரமித்த நாடுகளை எல்லாம் உள்ளது உள்ளபடியே விட்டுவிட்டு ஓடும் உத்தேசத்தில்தான் இருந்தது. அதற்கு பிரிவினையிலோ, இந்திய சுய ஆட்சியிலோ ஆகப்பெறும் அக்கறை எதுவும் இருந்ததில்லை.
சுதந்திரம் பெற்றுக் கொள்ளுங்கள் - உங்கள் நாட்டுக்கான பொறுப்பினை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மௌன்ட்பேட்டன் சொன்ன பிறகும் இந்தியப் பிரதி நிதிகள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார்கள். அடுத்தடுத்த அறிவிப்புகளுக்குப் பின்னும் இந்தியா தனக்கான சுதந்திரத்தை தான் பெற்றுக் கொள்ள தயங்கிய படி காலம் தாழ்த்தியபடி இருந்தது என்பதே வரலாறு காட்டும் உண்மை.
கடைசியாக மௌன்ட் பேட்டன் " நீங்கள் உங்கள் தேசத்திற்கான ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு தயங்கிக்கொண்டும், கால தாமதப்படுத்திக் கொண்டும் இருக்கிறீர்கள். இதைத் தொடர்ந்து எங்களால் அனுமதிக்க முடியாது. இந்தியாவைத் தொடர்ந்து ஆள எங்களால் முடியாது. இன்ன தேதிக்குள் நீங்கள் உங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், நாங்கள் அதைப் பற்றிக் கவலைப் படாமல் இந்தியாவை இப்படியே விட்டுவிட்டு எங்கள் நாட்டுக்குப் போய்விடுவோம்" - என்று அல்ட்டிமேட்டம் கொடுத்த சம்பவமும் இந்திய "விடுதலைப் போர்(?)" வரலாற்றில் உண்டு.
எனவே பிரிவினையில் இங்கிலாந்த்து மிகத்தீவிரமாய் இருந்தது என்றோ, பாசமாய் இருந்த - பிரிய விரும்பாத நம்மை வற்புறுத்தி இங்கிலாந்துதான் பிரித்தது என்பதும் சரியான கணிப்பாய் அமையாது.
சக மனிதர்களை வெறுக்க, துன்புறுத்த, ரத்தம் சொட்டக் கொலை செய்ய மதம் மட்டுமே போதுமான வன்மத்தை தனக்குள் வைத்திருக்கிறது. அந்தக்காரியத்துக்கு மூன்றாவது மனிதர்களின் பங்களிப்பு அவசியப்பட்டிருக்கவில்லை.
அப்படியே அரசியல்ரீதியான சதிகள் நடைபெறுகிறது என்றால் அது ஏற்கெனவே மதவெறி கொண்ட தேசத்திலும் சமூகத்திலும் மட்டுமே சாத்தியப்படுமே ஒழிய, மதம் ஒழித்து மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் சமூகங்களில் அச்சதிகள் சாத்தியப்படாது.
உதாரணமாக அமெரிக்கா தாலிபன், அல்கொய்தா, ஐ எஸ் ஐ எஸ் போன்ற மதவெறிக்கூட்டங்களை உருவாக்கி கொலை, வன்முறை என்ற பயங்கரவாதங்களை உருவாக்குகிறது என்றால் அந்த தேசங்களும், மக்களும் ஏற்கெனவே மதவெறி கொண்டவர்கள்கள் என்பதால் சாத்தியப்படுகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்காவால் ஸ்கேன்டினேவியன் நாடுகளில் உருவாக்கிவிட முடியுமா என்று யோசித்தாலே இந்த எளிய உண்மை புரிந்து இப்புதிருக்கு விடைகிடைக்கும்.
இந்தியாவின் இன்றைய சவால் ஸ்கான்டினேவியன் நாடுகளைப்போல வளர்ச்சியை நோக்கி மாறப்போகிறோமா? அரபு நாடுகளைப் போல வன்முறையை நோக்கி மாறப்போகிறோமா என்பதில் இருக்கிறது. அமெரிக்க அதிபருக்கு இந்து மதம் 'பிடித்திருப்பதாக' வந்திருக்கும் அறிவிப்பும் இந்தியாவில் இந்து மதத்தீவிர்வாதத்தை வளர்க்க அமெரிக்கா தயாராய் இருக்கும் என்ற உத்திரவாத சமிக்கையினையே கொடுக்கிறது.
எனவே தீதும் நன்றும் பிறர் தரவாரா என்பதன் அடிப்படையில் நாம் நம்மை எந்த அளவிற்கு மதபோதையில் ஆழ்த்திக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமது அழிவினைத் தூக்கி தலையில் போட்டுக் கொள்கிறோம் என்ற படிப்பினை இன்றைய இந்தியாவுக்கு அவசியமாகவும், அவசரமாகவும் தேவையானதாகும்.

கருத்துகள் இல்லை: