திங்கள், 12 ஜூன், 2017

விவசாயக் கடன் தள்ளுபடி ..மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்: அருண் ஜேட்லி

விவசாயக் கடன் தள்ளுபடி முடிவை எடுக்கும் மாநில அரசுகள் தங்கள் சொந்த ஆதாரங்களிலிருந்துதான் நிதி திரட்ட வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கடனில் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கித் தலைவர்களைச் சந்தித்த அருண் ஜேட்லி கூட்டம் முடிந்த போது இவ்வாறு தெரிவித்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் (பாஜக ஆட்சி மாநிலங்கள்) விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அருண் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடிக் குரல்கள் வலுத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டாவது முறையாக அருண் ஜேட்லி இவ்வாறு பேசியுள்ளார். முதல் முறை கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் ஜேட்லி பேசும்போது, “இந்தக் விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் பல மாநிலங்களிலும் எழுந்துள்ளன. வேளாண் துறைக்கு மத்திய அரசு கொள்கைகளை வகுத்துள்ளது. இதன் படி வட்டி குறைப்பு மற்றும் சில ஆதரவுகளை அளிப்பதாக முடிவெடுத்துள்ளோம்.


ஆனால் மாநிலங்கள் இந்த விஷயத்தில் தாங்கள் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தால் அவை தனது நிதி ஆதாரங்கள் மூலமே இதனைச் செய்ய வேண்டும். ஒரு மாநிலத்துக்கு மத்திய அரசு உதவுவதும் இன்னொரு மாநிலத்துக்கு உதவமுடியாத நிலையும் நிச்சயமாக ஏற்படாது” என்றார்.

வங்கிகள் வாராக்கடன் பற்றி ஜேட்லி கூறும்போது, மத்திய ரிசர்வ் வங்கி கடன்காரர்களின் பட்டியலை தயாரித்து வருகிறது, எனவே விரைவில் திவால் நடைமுறைகளின் படி இவை கையாளப்படும். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

இந்த நடைமுறைகளின் படி ஏற்கெனவே 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 வழக்குகள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் முன் உள்ளது. செயலில் இல்லாத சொத்துக்கள் அல்லது வாராக்கடன்களில் 70% வங்கிகள் கூட்டமைப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளின் ஏற்பாட்டில் உள்ளது. இது குறித்து விரைவு கதி தீர்வு அவசியம், என்றார்.

ஆர்பிஐ உதவி கவர்னர் முந்த்ரா கூறும்போது, வாராக்கடன் விவகாரங்களை வங்கிகளுடன் ஆர்பிஐ விவாதித்து வருகிறது. இம்மாதிரி கணக்குகள் குறித்த விவரங்களை ஆர்பிஐ சேகரித்துள்ளது .இது திவால் நடைமுறைகளின் படி தீர்த்து வைக்கப்படும், என்றார்.

இந்தக் கூட்டத்தில் எழுந்த இன்னொரு விஷயம், 2017 நிதியாண்டில் வங்கிகள் ரூ.1.5 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. நிகர லாபம் ரூ.574 கோடி. tamilthehindu

கருத்துகள் இல்லை: