வெள்ளி, 16 ஜூன், 2017

எய்ம்ஸ் மருத்துவமனை ... மாநில மக்களை மோதவிட மத்திய அரசு சதி?

கே.குணசீலன் என்.ஜி.மணிகண்டன்,செ.சல்மான்: ஒரு மரணத்துக்குப் பிறகு கட்சியை மூன்றாக உடைப்பது சாத்தியம்’ என நிரூபித்த டெல்லி அரசியல்வாதிகள், ‘ஒரு மருத்துவமனையைக் காரணமாக வைத்து ஒரு மாநிலத்தை இரண்டாக உடைக்கலாம்’ என்ற பரிசோதனையையும் செய்து முடித்துள்ளார்கள். ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு நிறுவுவது’ என்ற விவகாரம்  சூடு பிடித்துள்ளது. ஆளுங்கட்சியையே அசைத்துப் பார்க்கும் இந்தப் பிரச்னை, தஞ்சைக்கும் மதுரைக்கும் மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவி விலகுவேன்” என்று ஆவேசப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, “ஜெயலலிதா விரும்பிய இடத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும்” என்றார். அதற்கு மறுநாள், ஓ.பன்னீர்செல்வம், “எய்ம்ஸ், மதுரையில் அமைய வேண்டும் என்றுதான் ஜெயலலிதா விரும்பினார்” என்று பேட்டியளித்தார். ‘‘தஞ்சையில் எய்ம்ஸ் நிறுவப்படாவிட்டால், நெடுவாசல் போல தஞ்சை மக்களும் போராடுவார்கள்’’ எனத் தி.மு.க எம்.பி-யான திருச்சி சிவா  திரி கொளுத்திப் போட்டார்.
‘டெல்லியில் இருப்பது போலவே தமிழகத்திலும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட வேண்டும்’ என்பது நீண்டகாலக் கோரிக்கை. இது மதுரையில் அமைய வேண்டும் என மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இதுபற்றி மதுரை எம்.பி-யாக இருந்த மோகன், நாடாளுமன்றத்தில் பல முறை குரல் எழுப்பியுள்ளார். இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைத் தேர்வு செய்ய 2015-ம் ஆண்டு மதுரை, தஞ்சை, ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தோப்பூர் என்ற இடத்தை மத்திய மருத்துவக்குழுவினர் தேர்வுசெய்தனர். நான்குவழிச் சாலை, விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற வசதிகள் இருப்பதை சிறப்பம்சமாகக் கருதினர்.

இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர், எய்ம்ஸ் மருத்துவமனையைத் தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்குக் கொண்டுசெல்ல முயன்றார். சசிகலா குடும்பத்தினரோ, தங்களுடைய சொந்த மாவட்டமான தஞ்சாவூருக்குக் கொண்டுசெல்ல நினைத்தனர். அதனால், எய்ம்ஸ் மருத்துவமனையைத் தஞ்சாவூருக்குக் கொண்டு  செல்வதற்கான வேலைகள் தீவிரமாகின. அதை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், மதுரையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் களத்தில் இறங்கி, தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பேசினோம். “மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே வருகிறது. உயர் சிகிச்சைக்குச் சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் நிறுவுவதுதான் நியாயமானதாக இருக்கும். தஞ்சையிலும் திருச்சியிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறைய உள்ளன. இவை தவிர, ஜிப்மர் மருத்துவமனையின் கிளை காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக சில தவறான தகவல்களை அளித்து, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். இது நியாயமல்ல. மதுரைக்கு எய்ம்ஸ் வரும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார் மணிமாறன்.

‘தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும்’ எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணனிடம் பேசினோம். “தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் அமைவதற்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள 206 ஏக்கர் நிலம், அரசுக்குச் சொந்தமானது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி லிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கோ, அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னையை யாரும் அரசியலாக்கக் கூடாது” என்றார்.

இதுகுறித்து, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், பிரபல மூளை நரம்பியல் மருத்துவருமான டாக்டர் அலீமிடம் பேசினோம். “எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனை அமைக்கப்படும்போது அது, மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விரைவாக வந்துசெல்லக் கூடிய வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மையப் பகுதியாக செங்கிப்பட்டி உள்ளது. திருச்சியையொட்டி, கிட்டத்தட்ட ஆறு தேசிய நெடுஞ்சாலைகளும், 10-க்கும் மேற்பட்ட மாநிலச் சாலைகளும் உள்ளன. திருச்சி பன்னாட்டு விமான நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்கள் எனப் பல வசதிகள் உள்ளன. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைக்கப்பட்டால், 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

மதுரையில் மருத்துவ வசதிகள் நிறைய உள்ளன. மதுரை பனகல் சாலையில் பி.எம்.எஸ்.எஸ்.ஒய் எனும் திட்டத்தின் கீழ், எய்ம்ஸ்க்கு நிகராக 404 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரை நகரில் இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளன. தென்மாவட்டங்களில் ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. எனவே, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைவது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் உபயதுல்லாவிடம் பேசினோம். “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான பல்நோக்கு மருத்துவமனையைத் திருச்சியில் அமைக்க 2004-ல் முடிவு செய்யப்பட்டது. அந்த மருத்துவமனையை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்துக்குக் கொண்டுச் சென்றார். பிறகு, மீண்டும் திருச்சியில் மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்க 2009-ல் மத்திய அரசு முடிவுசெய்து. அதை, அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி மதுரைக்குக் கொண்டுசென்றார். இப்போதும் எய்ம்ஸ் வராவிட்டால், இந்தப்பகுதி கொந்தளிக்கும். ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைத் திணிக்க முயலும் மத்திய அரசு, எய்ம்ஸை இங்கே கொண்டுவந்தால் என்ன?” என்றார் காட்டமாக.
‘மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராவிட்டால் ராஜினாமா செய்யவும் தயார்’ என்று அறிவித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், ‘‘மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால், மாவட்டத்தில் அத்தனை எம்.எல்.ஏ-க்களும் பதவி விலகுவோம். தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்களையும் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம்’’ என்று சூட்டைக் கிளப்பினார்.

ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம். “மதுரையில் எய்ம்ஸ் அமைவது தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும். தஞ்சாவூரோ, மற்ற எந்த மாவட்டத்துக்கும் எய்ம்ஸ் வரலாம். ஆனால், முதலில் மதுரைக்கு வரட்டும். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், புதிய திட்டங்களைக் கொண்டு வரவும்தான் அமைச்சராக இருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அமைச்சர் பதவியையும் இழக்கத் தயார்” என்றார்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பிரதமரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எய்ம்ஸ் மருத்துவமனையைச் செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும்’ என மனு கொடுத்தார். இதை அடிப்படையாக வைத்து, தமிழக அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதமும் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் மக்கள் நலன் சார்ந்து உரிய முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசியல்வாதிகள் தங்களின் சுய அரசியல் நலனுக்காக நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

- செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார், ஏ.ராம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன், வீ.சதீஷ்குமார்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: