புதன், 14 ஜூன், 2017

BBC : லண்டன் தீவிபத்து கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவரகள் மீட்கப்படுகிறார்கள்


மேற்கு லண்டனில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். லண்டன் நகர தீயணைப்பு படை சுமார் 40 தீயணைப்பு வண்டிகளை அனுப்பியுள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டிடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ''நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,'' என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,'' என்றார் அவர். ''அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்துள்ளது,'' என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ''அந்த கட்டிடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,'' என்றார் அவர். ''நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய தீ விபத்து சம்பவம். முழு கட்டிடமும் நொறுங்கிப் போகிறது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,'' என்றார் டௌனி.

கருத்துகள் இல்லை: