செவ்வாய், 13 ஜூன், 2017

ஜனநாயகப் போர்க்களத்தை தி.மு.க. தலைமையேற்று வழிநடத்தும்.

M.K.Stalin :  தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல என வாக்களித்த மக்களே அதிருப்தியும் வேதனையும் அடைந்துள்ள நிலையில், பணத்திற்கும் பதவிக்கும்தான் பேரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் ஆதாரப்பூர்வமான காட்சிகளை ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஒளிபரப்பியதன் மூலம், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவில் சீரழித்திருக்கிறார்கள். மறைந்த ஜெயலலிதா அம்மையார் மறைவுக்குப் பிறகு ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க.வின் அணிகளுக்கிடையே நடந்த போட்டியும் பேரமும் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.
கூவத்தூர் சொகுசு விடுதியில் ஓர் அணியின் எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டு, ரிமாண்டுக்கு கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது போல, காரில் அடைத்து நேராக சட்டமன்றத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டபோதே இதனை எதிர்க்கட்சி என்ற முறையில் அவையில் சுட்டிக்காட்டினோம்.
நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வையுங்கள் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடுங்கள் என்ற போதும் நிராகரித்தார் பேரவை தலைவர். ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று போராடினோம். சட்டமன்றத்தில் காவல்துறையை ஏவி விட்டு என்னை குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்டு ஜனநாயக படுகொலை செய்தார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் அரசு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றது ஊழல் பணத்தில் செய்த "கொள்முதல்" என்பது ஏற்கெனவே வெளியான செய்தி உண்மை என்று இப்போது உறுதியாகியுள்ளது. இதை முன் கூட்டியே உணர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மான வெற்றி என்பது மிகப்பெரிய மோசடி என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே திமுக பல்வேறு தளங்களில் புகார் கூறிவந்திருக்கிறது . தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களை மும்பையிலும், குடியரசுத் தலைவர்அவர்களை டெல்லியிலும் சந்தித்து முறையிட்டோம். உயர் நீதிமன்றத்திலும் நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.
பேரவைத் தலைவர் அவர்கள் நியாயமற்ற முறையில் வாக்கெடுப்பு நடத்தி, ஆட்சியாளர்களைக் காப்பாற்றி வந்த நிலையில், இன்றைக்கு அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்களே ஊடகத்தின் ரகசிய கேமராவை அறியாமல் உண்மைகளை உளறியிருக்கிறார்கள். கூவத்தூருக்கு பஸ்ஸில் ஏற்றும் போது தலைக்கு 2 கோடி என பேரம் பேசப்பட்டு, பஸ் போய்க் கொண்டிருக்கும்போதே 4 கோடி என பேரம் அதிகமாகி, கூவத்தூர் விடுதியில் இறங்கும்போது 6 கோடி என பேரம் உயர்ந்ததாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பதுடன், அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஆட்டுமந்தைகள் என்று சொல்லியிருப்பதன் மூலம் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
யார் யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது, சொன்னது எவ்வளவு, தந்தது எவ்வளவு, தராமல் போனது எவ்வளவு, இரு அணிகள் தரப்பிலும் நடத்தப்பட்ட பேரம், அணி மாறி வந்தால் அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தைகள் இவை அனைத்தும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்பட்டிருப்பதன் மூலம், ஆட்சியில் இருக்கும் அணியும், ஆட்சியை இழந்த அணியும் எந்தளவுக்கு ஜனநாயகத்தை விலை பேசியிருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. ஊரார் பார்வைக்கு உத்தமர்கள் போல வேடம் போட்டுக்கொண்டு ஆன்மா, தியானம், தர்மயுத்தம் என வார்த்தைக்கு வார்த்தை வண்ணம் பூசியவர்களும், சமாதியில் சபதம் செய்தவர்களும் எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அவர்களுக்குள் அணிகள் பிரிந்து அதிகாரத்திற்கு போட்டியிடும்போது பணத்தால் எம்.எல்.ஏ க்களையும் எம்.பி.க்களையும் பேரம் பேசி, விலை வைத்து வலை விரிப்பது புதியதல்ல. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஜா அணி, ஜெ அணி என இரண்டு அணிகளாக பிரிந்து நின்றபோது, ஜெ அணி சார்பில் தனக்கு விலை பேசப்பட்டதை நாடாளுமன்றத்திலேயே பணப்பெட்டியை திறந்து காட்டி அம்பலப்படுத்திய அ.தி.மு.க. எம்.பி.யின் கதை நாடறிந்ததுதான்.
அதே வழியில்தான் 30 ஆண்டுகள் கழித்தும் அ.தி.மு.க. அணிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பணத்தால் எதையும் விலை பேசிவிடலாம் என்ற அ.தி.மு.க.வின் முறைகேடான வழிமுறைக்கு ஜனநாயகம் பலியாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்யாமல், தங்கள் சுயநலத்துக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தவும், அந்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பணத்தை வைத்து விலை பேசுவதும் தமிழக மக்களுக்கு செய்துள்ள நம்பிக்கை துரோகமாகும்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ள மக்கள் விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். இது குறித்து நீதிமன்றத்திலும் விரைவில் கூடவுள்ள சட்டமன்றத்திலும் மக்களின் நம்பிக்கை பெற்ற எதிர்க்கட்சியான தி.மு.கழகம் தன் பங்களிப்பை செய்யும். ஆளுநர் முதல் குடியரசுத்தலைவர் வரை இந்திய அரசியல் அமைப்புக்குட்பட்ட அனைத்து உயர் பொறுப்புகளில் உள்ளோரிடமும் இது குறித்து முறையிடப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மன்றத்தில் இவர்களை அம்பலப்படுத்தி, மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போர்க்களத்தை தி.மு.க. தலைமையேற்று வழிநடத்தும்.

கருத்துகள் இல்லை: