புதன், 19 ஏப்ரல், 2017

அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்: தினகரன்

அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்: தினகரன்
அதிமுகவிலிருந்து தான் நேற்றே ஒதுங்கிவிட்டதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்,அந்நிய செலாவணி வழக்கு என ஒருபுறம் வழக்குகள் தினகரனைத் துரத்திக்கொண்டிருக்க, மறுபுறம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தினகரனுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, அதிமுக கட்சியைக் காப்பாற்ற சசிகலா, தினகரன் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கிவைக்க முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி (இன்று) மாலை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குழுக் கூட்டம் நடைபெறுவதாக தினகரன் அறிவித்திருந்தார். தினகரனுக்கு கட்சியில் தங்க.தமிழ்செல்வன், ஜக்கையன், வெற்றிவேல் உள்பட 6 எம்.எல்.ஏகளின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகச் செல்வதற்கு முன், தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,' கட்சியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை,யாரும் என்னை ஒதுக்கவுமில்லை. கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த எது சிறப்பான முடிவோ அதை நான் எடுப்பேன்.என்ன முடிவெடுக்க வேண்டுமென எனக்கு நன்றாகத் தெரியும். ஏப்ரல் 19ஆம் தேதி மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் என்னுடன்தான் உள்ளனர். அதனால் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அமைச்சர்கள் என்ன முடிவேடுத்துள்ளர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்று தெரிவித்தார்.
பின்னர் திடீர் திருப்பமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு மறுபடியும் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,' இன்று ராயப்பேட்டையில் நடக்கவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யபடுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன். எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சில நாட்களிலேயே அமைச்சர்கள் என்னை திடீரென நீக்க எதோ ஒரு பயம்தான் காரணமாக உள்ளது.அது என்ன எனத் தெரியவில்லை. யாரோ சிலருக்கு உள்ள பயத்தால் என்னை ஒதுக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை நீக்குவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நன்மை என்றால் நான் விலகி இருக்கவே தயார். போட்டிக் கூட்டம் நடத்தி அவர்களுக்கு சரிக்கு சரியாக பலம் காட்ட நான் விரும்பவில்லை. நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் கண்டிப்பாக நானும் கலந்துகொண்டிருப்பேன். அவசரகதியில் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.ஆனால் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, அது பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு தந்தது. எனவே அவரிடம் ஆலோசனை நடத்தியபிறகு ராஜினாமா பற்றி கூறுவேன். இரு அணியினரும் இணைந்து செயல்படுவது குறித்து எந்த பிரச்னையுமில்லை. நான் நீதிமன்ற வழக்குகளுக்கு பயந்து வெளிநாடு செல்ல உள்ளதாக வருகின்ற தகவல் வெறும் வதந்தியே. என்னிடம் பாஸ்போர்டே இல்லாத பொது எப்படி வெளிநாடு செல்ல முடியும் என்று தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வரும் இவ்வேளையில், தினகரன் இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: