ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அதிமுக இரு அணிகளும் இணைவதற்கு பன்னீர் - பழனி ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. அணிகள் இணைய எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் பேச்சுவார்த்தை: தினகரன் பதவி விலக வற்புறுத்தல்அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரனை நீக்க முடிவு செய்துள்ளனர். சென்னை: ஜெயலலிதாவின் திடீர் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை பெற்ற சசிகலா, முதல்-அமைச்சர் பதவியில் அமரவும் விரும்பினார். இதற்காக அவர் வலுக்கட்டாயமாக முதல்- அமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக வைத்தார். இதனால் அ.தி.மு.க. இரண்டாக பிளவானது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. அ.தி.மு.க.வில் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 122 பேர் சசிகலாவை ஆதரித்ததால் அந்த அணியின் கை ஓங்கியது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதல்-அமைச்சர் ஆக முடியாமல் சிறை சென்றுள்ளார்.
இதனால் சசிகலா தன் அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. அதில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிட்டதால் “இரட்டை இலை” சின்னம் முடக்கப்பட்டது.

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டார். அவர் முதல்-அமைச்சர் பதவிக்கு குறிவைத்தே களம் இறங்கி இருப்பதாக கொங்கு மண்டல அ.தி.மு.க.வினர் கருதினார்கள். இந்த நிலையில் ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்தானது.

ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா விவகாரம், அ.தி.மு.க. மீது மக்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை உணர்ந்துள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் தினகரன் மீது அதிருப்தியில் உள்ளனர். முதலில் சசிகலாவாலும், பிறகு தினகரனாலும் சர்ச்சைகள் ஏற்பட்டதால் அவர்களுக்கு எதிரான மனநிலைக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை குறிவைத்து மத்திய அரசு எடுத்து வரும் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளும் அ.தி.மு.க.வினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வின் ஆணி வேரையே அசைத்து விடும் வகையில் மாறி இருப்பதாக அ.தி.மு.க.வில் உள்ள நடுநிலையாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

அ.தி.மு.க.வில் நடந்து வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கும், கட்சிக்கும் கடும் நெருக்கடியாக மாறி இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். மத்திய அரசின் அதிரடிகளில் இருந்து ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டுமானால் புதிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொங்கு மண்டல மந்திரிகள் போர்க்கொடி உயர்த்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடியும் அதற்கு சம்மதித்தார். அ.தி.மு.க. (அம்மா)வில் உள்ள நடுநிலையாளர்களும் அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைத்தனர்.

ஆனால் விஜயபாஸ்கரை விலக்க தினகரன் சம்மதிக்கவில்லை. இது தினகரன் மீது மூத்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தினகரனை பொறுப்பில் இருந்து விலக்கி விட்டு ஆட்சியைத் தொடர அவர்கள் ஆலோசித்தனர்.

தினகரனை காமராஜ், உதயகுமார், ஓ.எஸ்.மணியன் உள்பட சில மந்திரிகளும், சில எம்.எல்.ஏ.க்களும் ஆதரிப்பதால் ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் முதலில் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை மீண்டும் இணைத்து விட்டால் தற்போதைய இத்தகைய நெருக்கடிகள் அனைத்துக்கும் சுலபமாக தீர்வு காண முடியும் என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா அணி தலைவர்கள் ஓ.பி.எஸ். அணியினருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சசிகலா குடும்பத்தினர் இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்கலாம் என்ற ஒற்றைவரி தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்ததால், அது வெற்றி பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை 100 சதவீதம் வெற்றி பெற செய்வதற்காக அ.தி.மு.க. அம்மா அணியினர் ஐவர் குழுவை உருவாக்கியுள்ளனர். தம்பித்துரை, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் அந்த அணியில் உள்ளனர்.



முதல் கட்டமாக இவர்கள் தினகரனை அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். தினகரனிடமே அவர்கள் தங்கள் கோரிக்கையை நேரடியாக தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது அ.தி.மு.க. அம்மா அணியில் தினகரனுக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிர்ப்பாக மற்றொரு குழுவும் தோன்றியுள்ளது.

தினகரன் குழுவில் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். ஆனால் தினகரனை எதிர்க்கும் குழுவில் கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம் அ.தி.மு.க.வினர் உள்ளனர். இதனால் தினகரனின் எதிர்ப்பாளர்கள் கை ஓங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தினகரனை ஓரம் கட்டி வரும் அவர்கள் ஓ.பி.எஸ். அணியுடனான இணைப்பு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஐவர் குழுவுடன் ஓ.பி.எஸ். அணியினர் மனம் விட்டு பேசி வருகிறார்கள். இரு தரப்பினரும் தங்களது விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.



ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், முதல்-அமைச்சர் பொறுப்பை ஓ.பி.எஸ்.சுக்கு விட்டுத்தர கோரிக்கை வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராக இருக்கலாம் என்றும் மதுசூதனனை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்றும் யோசனை கூறினார்கள்.

அ.தி.மு.க. அம்மா அணியினர் அதை ஏற்கவில்லை. அவர்கள் கூறுகையில், எடப்பாடி முதல்வர் பதவியில் நீடிக்கட்டும் பொதுச்செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கலாம் என்று யோசனை கூறியுள்ளனர். அதாவது ஆட்சியை எடப்பாடியும் கட்சியை ஓ.பி.எஸ்.சும் வழி நடத்தட்டும் என்பது அவர்களது திட்டமாக உள்ளது.

இதற்கிடையே 7 பேர் கொண்ட வழி காட்டும் குழு அமைப்பது பற்றியும் இரு அணியினரும் பேசி வருகிறார்கள். வழி காட்டுதல் குழு அமைக்க இரு அணியினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியினருடன் ஓ.பி.எஸ். அணி இணைவதை தினகரனும் அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லை. எனவே அவர்கள் இரு அணி இணைப்பு தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்கள் அடுத்த கட்டமாக சசிகலாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு செயல்பட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் புதிய திட்டம் ஒன்றை இரு அணியினரிடமும் வெளியிட்டுள்ளார். “சசிகலா, தினகரன் இருவரும் கட்சி பதவிகளில் இருந்து விலக வேண்டும். 7 பேர் நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும்” என்று திவாகரன் கூறியுள்ளார்.

இதை இரு அணியினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சமரச முயற்சிகளுக்கு திவாகரனும் ஒத்துழைப்பு கொடுத்து இருப்பதாக ஐவர் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் டி.டி.வி.தினகரன் பிடிவாதமாக விலக மறுத்துள்ளார்.

இதையடுத்து வரும் 18-ந்தேதிக்குள் அதாவது செவ்வாய்க்கிழமைக்குள் விலகல் முடிவை வெளியிட வேண்டும் என்று தினகரனுக்கு ஐவர் குழு “கெடு” விதித்துள்ளது. எனவே அடுத்த வாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் எப்படியும் இணைந்து விடும். அதன் பிறகு பாருங்கள், அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்  maalaimalar

கருத்துகள் இல்லை: