திங்கள், 17 ஏப்ரல், 2017

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை! 21 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சருக்கு சிறை! ...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் கோவையைச் சேர்ந்த செ.அரங்கநாயகம். இவர் அமைச்சராக இருந்தபோது இவருடைய மனைவி, மகன்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 1.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி, கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இவருடைய சில சொத்துக்களும் முடக்கப்பட்டது. பிறகு அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி அரங்கநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, 18 வருடங்களாக தொடர்ந்து நடந்துவந்த இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 17ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன்படி, அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தற்போது அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: