புதன், 19 ஏப்ரல், 2017

டெல்லி.. தமிழக விவசாயிகள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு ! 37 நாட்களாக ...

புதுடெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 37-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைசியாக நேற்று பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்ற போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று சட்டையை கிழித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகளுடன் போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களது போராட்டத்தை 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கும் போது, எங்களது போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. மாறாக 2 நாட்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என்றார். அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: