
நாட்டிலும் காட்டிலும் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த உண்மைகளை வெளிப்படுத்தியதால் வாசகர்களின் மனதை வென்ற நக்கீரனுக்கு ஆட்சியாளர்கள் தந்த ‘வெகுமதி’கள் ஏராளம். அவதூறு வழக்குகள், அடக்குமுறைகள், அராஜகத் தாக்குதல்கள், கைது நடவடிக்கை, பொடா சிறைவாசம் என 30 ஆண்டுகளில் பாதிக்கும் மேலான காலகட்டத்தை நெருப்பாற்றில் நீந்திக் கடந்தது நக்கீரன்.
இன்றளவும் விமர்சனக் கணைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றை எதிர்கொள்வதை நக்கீரன் எப்போதுமே விரும்புகிறது. ஏனென்றால் பாராட்டுகளை எதிர்பார்த்து, நடுநிலை என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு பம்முவதில்லை. உண்மையான திராவிட இயக்கக் கோட்பாடுகளின் வழி நின்று, ஆரியத்தின் பீடத்தை அசைத்துத் தள்ளி, அடித்தட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிப்பதே நக்கீரனின் பாதையும் பயணமும் ஆகும். தமிழுணர்வு என்பது பயணத்தில் களைப்படையாமல் இருக்கச் செய்யும் ரத்த ஓட்டம்.
பூண்டி புஷ்பம் கல்லூரியில் பயின்ற காலத்தில் நாள்தோறும் 47 கி.மீ. (+47 கி.மீ) ரயில் பயணத்தைப் பயனுள்ளதாக்கிய இதழ்களில், அப்போது வெளிவரத் தொடங்கிய (1988) நக்கீரனும் உண்டு. 5 ஆண்டுகள் கழித்து (1993) அதே நக்கீரனில் பணியில் சேர்ந்தேன். 25 ஆண்டுகளைத் தொடுகிறது நக்கீரனுடனான என் பயணம்.
அனைத்துத் தரப்பையும் அச்சுறுத்திய ஜெயலலிதா கும்பலை உறுதியாக எதிர்த்து நிற்கும் நக்கீரனின் துணிவும், எந்த சூழலிலும் ‘கலைஞர்’ என்றே எழுதுகிற உணர்வும் நக்கீரனுடனான என் பயணம் தொடர்வதற்கு கூடுதல் சிறப்பம்சங்கள்.
இந்தியாவில் வேறெந்த பத்திரிகையும் எதிர்கொள்ளாத அடக்குமுறைகளை சந்தித்த நக்கீரன்தான், இந்திய ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை சட்டரீதியாகப் பாதுகாக்கும் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற்றுத்தந்தது. ஆட்டோ சங்கர் தொடரைத் தடுக்க முயன்ற தமிழக (ஜெயலலிதா) அரசுக்கு எதிரான வழக்கில் நக்கீரன் பெற்ற இந்த வெற்றி, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஊடக சுதந்தரம் தொடர்பான பாடமாகவும் உள்ளது.
நக்கீரனின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்.
சவால்களை சாதனைகளாக்கிப் பழகிய நக்கீரன் இப்போதும் அதிகார வர்க்கத்தின் வழக்குகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தியபடி, விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படாமல், உழைக்கும் மக்கள்-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஆகியோரின் உரிமைக்குரலை இதழிலும் இணையத்திலும் பதிவு செய்து தமிழக மக்களின் பேராதரவுடன் பயணத்தைத் தொடர்கிறது.
தி.பி.2048 சித்திரை 7< முகநூல் பதிவு Govi lenin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக