வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அதிமுகவில் மின்னல் வேகத்தில் மாறும் காட்சிகள் ..மோடியின் கனவுக்கு ஆப்பு வைக்க தினகரன் சூழுரை?

அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் ஓ.பி.எஸ்.சின் கையில் ஒப்படைக்கப்பட்டு, அதை தங்களின் இஷ்டம் போல் ஆட்டுவிக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அதற்கு இடந்தர மறுக்கிறார் தினகரன். ""சித்தியைப் போல நானும் சிறைக்குப் போனாலும் பரவாயில்லை; மோடியின் திட்டம் மட்டும் நிறைவேறக்கூடாது'' என கங்கணம் கட்டியிருக்கும் தினகரன், அதற்கேற்ப காய்களை நகர்த்துவதால் அ.தி.மு.க.வில் மீண்டும் மீண்டும் பரபரப்புகள் அரங்கேறியபடி இருக்கின்றன.>மீண்டும் ரெய்டு மிரட்டல்!>அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ""கட்சியை கட்டுப்படுத்தும் அதிகாரத்திலிருந்து தினகரனை எப்படி அப்புறப்படுத்துவதுங்கிற விவாதம் வந்தப்போ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் தினகரனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அதனை கட் பண்ணினால் போதும் எல்லாம் தானாக நடக்கும் எனவும் டெல்லிக்கு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.


சமீபத்தில், மோடியை சந்தித்தார் தம்பிதுரை. அப்போது மோடி, எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் எவ்வளவு சொத்துச் சேர்த்திருக்கிறார்கள்? எப்படி சேர்த்துள்ளனர்?  அவர்களது பினாமிகள் யார், யார்? என்பதையெல்லாம் சொல்லி, ""சசிகலா மற்றும் தினகரனின் சொல் கேட்பதிலிருந்து முதல்வர்  விலகி நிற்க வேண்டும், கட்சியிலும், ஆட்சியிலும் தலையிடுவதிலிருந்து தினகரனை விலக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் தொடர் ரெய்டுகள் நடத்தி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டியதிருக்கும். அதில் ஆட்சிக்கு சிக்கல் வரலாம். முதல்வரிடம் இதனை சொல்லுங்கள்' என்கிற ரீதியில் அட்வைஸ் செய்திருக்கிறார்'' என்றனர். 

பன்னீரின் பேரம்!

""இந்த தகவலை டெல்லியிலிருந்தபடியே எடப்பாடிக்கு பாஸ் செய்தார் தம்பிதுரை.  அதன்பிறகே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கேரள கவர்னர் சதாசிவம் மூலம் முயற்சித்தார் எடப்பாடி. அப்போதும் இதே குரலை உயர்த்திய டெல்லி, இரு தரப்பும் இணைய வேண்டும் என்பதை அழுத்தமான நிபந்தனையாக வைத்தது. இதனையடுத்துதான், தினகரனை அமைச்சர்கள் சந்தித்து காரசார விவாதத்தை நடத்தியதோடு, "கட்சியிலிருந்து விலகிவிடுங்கள்' என வலியுறுத்தியதெல்லாம் நடந்தது'' என்று சுட்டிக்காட்டிவிட்டு, அதன் பிறகு நடந்ததையும் விவரித்தனர் நம்மிடம். 


""அதிகாரப்பூர்வமாக குழு எதையும் அறிவிக்காமலே பன்னீர் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தம்பிதுரை, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஐவரை நியமித்தார் எடப்பாடி. அதேசமயம், இணைவதற்கு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த தயார் என்பதாக பன்னீர் சொல்ல, அவரிடம் ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர் முன்வைத்த கருத்துகளுடன் கோட்டையில் இருந்த முதல்வர் எடப்பாடியை சந்தித்து விவாதித்தார் தம்பிதுரை. அந்த சந்திப்பில், "அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானபோது பன்னீர் தலைமையில் எப்படி அமைச்சரவை இருந்ததோ அதேபோல இப்போது வேண்டுமென எதிர்பார்க்கிறார் ஓ.பி.எஸ்.! மேலும் அவரை நம்பி வந்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டி அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றும் பன்னீர் கோரிக்கை வைப்பதாக விவரித்திருக்கிறார் தம்பிதுரை. 

நோ சொன்ன அமைச்சர்கள்!

இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரையும் கூட்டி எடப்பாடி விவாதிக்க, அதில், "முதல்வர் பதவியை பன்னீருக்கு விட்டுத்தருவதுங்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. துணைமுதல்வர் பதவியுடன் நிதி இலாகா மட்டுமே அவருக்கு ஒதுக்கலாம். மற்றபடி அவர்களோடு இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சம்மதிக்கக்கூடாது' என கறாராக வலியுறுத்தினர். இதனையடுத்து தம்பிதுரையை கோட்டைக்கு அழைத்த எடப்பாடி, அவரிடம் அமைச்சர்களின் எண்ணங்களை தெரியப்படுத்தினார். "தினகரனை அப்புறப்படுத்துவதைக் காட்டிலும் இது பெரிய இடியாப்பச் சிக்கலாக இருக்குமே' என கமெண்ட் பண்ணிட்டு கிளம்பினார் தம்பிதுரை'' என விவரிக்கின்றனர். 

சீனியர்கள் சந்தேகம்!
கூட இருப்பவர்களுக்கே தெரியாமல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த பன்னீர் தரப்பின் சீனியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களோ, ""நிபந்தனையற்ற ஆதரவு என்றால் என்ன அர்த்தம்? தினகரன் இருந்தாலும் பரவாயில்லை. கட்சியில் இணைகிறோம் என்கிற முடிவை எடுக்கிறாரா? சின்னம் கிடைக்க வேண்டி லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது டெல்லி போலீசார்  வழக்கு பதிவு செய்ததை பத்தி பன்னீரிடம் கேள்வி வந்தபோதும் அது பற்றி மழுப்பி விட்டார். அப்படியானால் தினகரனை ஏற்றுக்கொண்டாரோ? ஜெ. மர்ம மரணத்துக்கு விசாரணை வேண்டாம் என்கிறாரா'' என தங்களுக்குள் விவாதித்துக்கொண்டதுடன்  பன்னீர் மீது சந்தேகப்பட்டனர் அவரது தரப்பின் சீனியர்கள். 

எடை போட்ட எடப்பாடி!

அதேசமயம், "தினகரனை விலக்கிவிட்டு ஒருநாள் கூட ஆட்சியில் நீங்கள் இருக்க முடியாது; நாங்கள் கவிழ்ப்போம்' என அமைச்சர் விஜயபாஸ்கர் சூளுரைக்க, அதிர்ந்துபோன எடப்பாடி, உண்மையில் தினகரனுக்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என அவர்களின் கருத்தறிய நினைத்தவர், கடற்படையின் ஐ.என்.எஸ். கப்பலை சுற்றிப்பார்க்க சென்னைக்கு வருமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவித்தார். 

இந்த நிலையில்தான், இணைப்பு குறித்து  17-ந்தேதி இரவு திடீரென அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் பலரும் கூடி விவாதித்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படியே இந்த விவாதம் நடந்தது. இதில், தினகரனின் ஆதரவாளரான மந்திரி விஜயபாஸ்கரும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் குறித்து நாம் விசாரித்தபோது, ""மத்திய அரசு நமக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுக்குது. சின்னம் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நிச்சயம் கைது செய்வார்கள். அது கட்சிக்குத்தான் கெட்டபெயர். இந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டுமென தினகரன் விரும்புவது உண்மையெனில், அவராகவே விலகி கட்சி ஒன்றிணைய உதவ வேண்டும்'' என எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் சொல்ல, "கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த ஒரு நபர் தேவை. அது தினகரன் மட்டும்தான். பன்னீரை இணைக்க வேண்டுமென்பதற்காகவே அவரை விலக்கினால் கட்சியையும் ஆட்சியையும் யார் வழி நடத்துவது?' என செங்கோட்டையனும் விஜயபாஸ்கரும் மறுப்பு தெரிவித்தனர்'' என்கிறார்கள். 

இரண்டு ஆலோசனை!

இதனையடுத்து, இணைப்பு முயற்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் விவரித்தனர். அதேசமயம், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லத்தில் காமராஜ், ஓ.எஸ்.மணியன், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஆலோசித்தனர். அதில், "பெங்களூரு சென்றிருக்கும் தினகரன் இரவுக்குள் சென்னை வந்துவிடுவார். அவர் வந்ததும் சீரியசாக சில விசயங்களை சொல்லிவிட வேண்டும்' என முடிவு எடுத்தனர். மேலும், எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் போன் போட்டு பேசியபடியே இருந்தனர். 18-ந்தேதி காலையில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு படையெடுத்தனர் அவரது ஆதரவு அமைச்சர்கள். மாவட்ட செயலாளர் வெற்றிவேலும் தினகரன் வீட்டுக்கு வந்திருந்தார். 

தில் தினகரன்!

தினகரன் நடத்திய ஆலோசனையில், ""எடப்பாடி உள்பட ஊழல் செய்து சம்பாதித்தவர்கள்தான்  மோடியை கண்டு பயப்படுகிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆட்சி, கட்சி, சின்னம், ஒற்றுமை என்றெல்லாம் ப்ரைன்வாஷ் செய்கிறார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சின் குடுமியும் மோடியின் கையிலிருப்பதால் அவரும் பயப்படுகிறார். இவர்களின் ஆசைக்கும் மோடியின் திட்டத்துக்கும் உங்களை பலிகடாவாக்க பார்க்கிறார்கள். இதற்கு சம்மதிக்கக்கூடாது. மத்திய அரசின் கைதிலிருந்து தப்பிக்கவும் தங்களது சொத்துகளை பாதுகாத்துக்கொள்ளவும்  எடப்பாடி ட்ராமா போடுகிறார். அவர்களுக்கு நாம் உதவுவதை விட இந்த ஆட்சி இல்லாமல் போவதே மேல். எந்தச் சூழலிலும் உங்களை விட்டுத்தர முடியாது'' என அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், மா.செ.வெற்றிவேல் என பலரும் அழுத்தமாக சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார்  தினகரன். அப்போது அவர் கொடுத்த துணிச்சலில் வெளியே வந்த வெற்றிவேல், ""எடப்பாடி கூட்டிய கூட்டத்தை பற்றியும் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை பற்றியும் கடுமையாக விமர்சிக்க, பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதற்கு பதிலாக இன்னொரு பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழுமோ'' என்கிற நிலைக்குப் போனது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். 

ஆழம் பார்த்த ஜெயக்குமார்!

தினகரன் ஆலோசித்த அதேநேரம் சசி ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் கப்பலில் சங்கமித்திருந்தனர். அவர்களை அமைச்சர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர். உள்ளே பரந்து விரிந்திருந்த தளத்தில் அவர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ""ஆட்சியை கவிழ்ப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்குது. ஆனா, ஆட்சியை தக்க வைக்க முதல்வர் போராடிக்கொண்டிருக்கிறார். தினகரனோ சூழலை புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால், உங்கள் உதவி இல்லாமல் ஆட்சியை தக்க வைக்க முடியாது. உங்கள் ஆதரவு முதல்வருக்கு முழுமையாக வேண்டும்'' என சொல்ல, சிலர் மௌனமாகவே அமர்ந்திருந்தனர். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது எடப்பாடி தரப்பு. 

பன்னீர் அடித்த பல்டி!

இதற்கிடையே, எந்த நிபந்தனையுமின்றி இணைய பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததில் அதிருப்தியடைந்த கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் ஆலோசித்தனர். இதனையடுத்து இணைப்பு முயற்சி குறித்து பேசிய கே.பி.முனுசாமி, ‘""அம்மாவின் மரணம் குறித்த நீதி விசாரணையிலிருந்து பின் வாங்கமாட்டோம். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை வெளியேற்றினால் மட்டுமே இணைவோம்'' என்று போட்டுத்தாக்க, தேனியிலிருந்தபடி இதனையறிந்த பன்னீர்செல்வம்,’""சசிகலா குடும்பம் அ.தி.மு.க.வில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஒரு குடும்பத்தின் கையில் கட்சி போகக்கூடாது. அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்'' என தன்னை ஆதரித்த சீனியர்களை இழந்துவிடக்கூடாது என யோசித்து தனது நிலையைச் சட்டென்று மாற்றிக்கொண்டார். 

ஆட்டம் ஜோர்!

அ.தி.மு.க.வின் உள்விவகாரம் பரபரப்பு குறையாமல் பிரேக்கிங் நியூஸ்களை அள்ளி வழங்க, ஏப்ரல் 18 மாலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் ஒவ்வொருவராக அவரது இல்லத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அன்று இரவு முதல்வர் எடப்பாடி வீட்டில் நடந்த தீவிர ஆலோசனைக்குப் பின், பெரும்பாலான அமைச்சர்கள் புடைசூழ வெளியே வந்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். ""ஒரு குடும்பத்தின் (சசிகலா பெயரைச் சொல்லாமல்) பிடிக்குள் கட்சியும் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறோம். இரட்டை இலையை மீட்க ஓ.பி.எஸ்.சுடன் பேசத் தயாராக இருக்கிறோம்'' என பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிரடி கிளப்பினார் ஜெயக்குமார்.

அதே நேரத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன் ஆகியோரின் பொறுப்பில் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் பக்கம் அந்த 40 பேரும் போய்விடக் கூடாதே என்ற தவிப்பு 3 அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் கூடிக்கொண்டே போனது. அதை எதிர்கொள்ளும் வியூகமும் வகுக்கப்பட்டது.

திவாகரனின் ஆளான அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.பி.வைத்திலிங்கம் போன்ற மன்னார்குடி ஆட்கள் எடப்பாடி பின்னால் இருப்பது குடும்ப உறவு ரீதியாக தினகரனுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது.

நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி அ.தி.மு.க. கேம்பில் புதுப்புது திருப்பங்களுடன் ஆட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால், விரைவில் ஆட்சி கவிழும் என்றே சொல்கின்றனர் அ.தி.மு.க. அரசியலை கவனித்து வரும் அரசின் உயரதிகாரிகள். 

-இரா.இளையசெல்வன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: