செவ்வாய், 15 மார்ச், 2016

ரூ.300 கோடி தொழில் முதலீட்டு ஒப்பந்தம் 'அம்போ'

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது போடப்பட்ட, 300 கோடி ரூபாய் ஒப்பந்தம், துவங்கப்படாமலேயே முடங்கிப் போனது தெரிய வந்துள்ளது.
'தமிழகத்தில், சிறு மற்றும் குறுந்தொழில் துறையில், ஐந்து ஆண்டுகளில், 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது' என, அரசு அறிவித்துள்ளது. அதில், 2015ல் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது போடப்பட்ட, 16 ஆயிரத்து, 532 கோடி ரூபாய் ஒப்பந்தங்களும் அடக்கம்.ஆனால், எதிர்க்கட்சிகளோ முதலீட்டாளர் மாநாட்டின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள், ஏட்டளவில் மட்டும் இருப்பதாக புகார் கூறி வருகின்றன. இந்நிலையில், சென்னை அருகே,
300 கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில் துறை ஒப்பந்தம், எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பது தெரிய வந்துள்ளது.  ஸ்டிக்கர் ஒட்டுறவங்க, ஃ ப்ளெக்ஸ் பேனர் போடுறவங்க ஓஹோன்னு வளந்துட்டாங்க....பறக்கும் குதிரை வடிவத்தை பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும்... .


இது குறித்து, தமிழ்நாடு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலச்சங்கங்களின் தலைவர் வி.நித்தியானந்தம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை அருகே, தனியார் தொழிற்பேட்டையை உருவாக்க நாங்கள் திட்டமிட்டோம். இதற்காக, பல குறுந்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இணைந்து, ஒரு சங்கத்தை உருவாக்கி, 40 ஏக்கரில் தொழிற்பேட்டையை உருவாக்கினோம்.

அப்போது, முதலீட்டாளர் மாநாட்டுக்காக, தீவிர ஏற்பாடுகளை செய்து வந்த அதிகாரிகள் எங்களை அவசர அவசரமாக அழைத்து பேசினர். ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், சிறுதொழில்கள் துறை அமைச்சர் மோகன் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. எங்கள் தொழிற்பேட்டையில், 213 நிறுவனங்கள் துவங்கப்படுவதாக இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் மற்றும் வாங்க திட்டமிட்டிருந்த உபகரணங்களின் உத்தேச மதிப்பு அனைத்தையும் கூட்டி, 300 கோடி ரூபாய் முதலீடு வரப்போவதாக அறிவித்தனர்.ஆனால், மழை, வெள்ளத்துக்கு பின், நலிந்து போன நிறுவன உரிமையாளர்கள் அங்கு ஆலைகளை துவக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை அறிந்தும் அரசு உதவவில்லை. அதனால், '300 கோடி ரூபாய்' என, அரசு பறைசாற்றிய திட்டம் முடங்கிபோய் கிடக்கிறது. இதுபோல, பல ஒப்பந்தங்கள் பெயரளவிலேயே உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: