நீங்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயில் சென்றிருந்த நேரம். ஊரெல்லாம் மக்கள் முதல்வராக உங்களை அறிவித்துக்கொண்டிருந்தது நம் கட்சி. பெரியகுளத்தில் உங்கள் பெயரால் ஏகப்பட்ட ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துக்கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஊர் முழுக்க தோரணங்களும், போஸ்டர்களும், பேனர்களும் அலங்கரித்துக்கொண்டிருந்தது. அது அவருடைய சொந்த ஊர். தாய் மண். அந்த சமயத்தில் அவர்தான் முதல்வராக இருந்தார். ஆனால் எந்த போஸ்டரிலும், எந்த பேனரிலும் தன்னுடைய பெயருக்கு கீழே முதல்வர் என்று போட்டுக்கொள்ளவில்லை. முதல்வர் நாற்காலியில் இருந்தபோதும் அதன் நுனியில் கூட அமராமல் ஆட்சி செய்த அடக்கமான தலைவன் எங்கள் ஓபிஎஸ்.
எந்த சாதாரண மனிதரையும் உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்துபார்க்கிற அற்புதமான கட்சிதான் அதிமுக. இங்கே அமைச்சராக ஆவதற்கோ அல்லது மந்திரி பதவி வகிப்பதற்கோ எந்தவித தகுதியும் தேவையில்லை. நன்றாக குனியவும் கூழைகும்பிடு போடவும் தெரிந்திருந்தாலே போதும். அப்படிப்பட்ட கட்சியில், கும்பிடு போடவே பிறந்த அவருடைய விசுவாசத்தை, நீங்கள் சந்தேகிக்கலாமா அம்மா...?
அவர் உங்களுக்காக நீங்கள் சிறையில் இருந்த காலத்தில் வளர்த்தாரே தாடி, அது என்ன ஒட்டுதாடியா? முதல்வராக பதவியேற்கும்போது தேம்பி தேம்பி அழுது வடித்தாரே அரைப்படி கண்ணீர்... அது என்ன கார்ப்பரேஷன் பம்பில் வரும் அழுக்கு தண்ணீரா? அதற்கெல்லாம் ஒரு மரியாதை இல்லையா?
என்ன செய்துவிட்டார் எங்கள் தலைவர். உங்களுக்கு எதிராக அணி திரட்டினாரா? தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி சதித் திட்டம் தீட்டினாரா? ஒழுங்காக ஸ்டிக்கர் ஒட்டவில்லையா? அல்லது பேனரில் தன்னுடைய படத்தை போட்டுக்கொண்டாரா? அதை விளக்க வேண்டிய கட்டாயம் கழகத்திற்கு இருக்கிறதுதானே? நீங்கள் நினைத்தால் அவரை முதல்வராக்குவீர்கள், இல்லையென்றால் டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிவீர்கள் என்றால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற அப்பாவி தொண்டன் என்ன தக்காளி தொக்கா...? அவர் என்ன உங்களுக்கு தெரியாமல் ஹோட்டல், மால், தியேட்டர் என கூட்டணி சேர்த்து ஆட்டையை போட்டாரா? ஐவர் ஆதரவுக் குழு என்று ஏதாவது உருவாக்கி உங்களுக்கு எதிராக கூட்டம் கூட்டினரா?
சொல்வீர்களா... நீங்கள் சொல்வீர்களா?
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக