சனி, 14 மார்ச், 2015

Instant மேதைகளின் டிவி ஷோக்களை விட தூரதர்ஷனின் Naad Bhed (நாத பேதம்?) நிகழ்ச்சி,,,

போன மாதம் ஊரெங்கும் சூப்பர் சிங்கர் பரபரப்பு பற்றியிருந்த நேரம்.
தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் -
‘அந்தக் குழந்தை பிரமாதமா பாடறா. விக்கு விநாயகராம் கேட்டு அசந்து போய் அப்படியே கட்டிண்டுட்டார். நித்யஸ்ரீ பிரமிச்சுப் போய் இருந்தாங்க்.இந்த வயசிலேயே பெரிய பெரிய பாடகிகள் மாதிரி பாடறான்னு பாராட்டினாங்க். சங்கீதத்தையே கரைகண்டுட்டா’.
பெருவாரியான ரசிகர்கள் மட்டுமில்லாமல், அந்தக் குழந்தையின் பெற்றோரே இப்படித்தான் நம்பியிருக்கக் கூடும். அந்தக் குழந்தை கூட அப்படியே நினைத்திருக்கலாம்.
சினிமாவில் வரும் பாடலை, அது கர்னாடக இசையா, மெல்லிசையா என்று பேதம் இல்லை, அப்படியே பின்னணிப் பாடகர் பாடிய மாதிரி அச்சு அசலாகப் பாடுவதே மேதமை என்று ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் நாடெங்கும் நினைக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

கர்னாடக இசையோ, இந்துஸ்தானியோ, சோபான சங்கீதமோ, பண்ணிசையோ, பரப்பிலும் ஆழத்திலும் கடல் போன்றவை. இவற்றில் தேர்ந்த குருவைச் சார்ந்து நீண்ட காலப் பயிற்சியும், கடினமான சாதகமும் இருந்தாலே இவ்விசை வடிவங்களில் கொஞ்சம் போலவாவது தேர்ச்சி கண்டதாக நினைக்கலாம்.
அதுவும் முழு மன நிறைவாகாது. ஒரு எம்.எஸ், பீம்சென் ஜோஷி, பர்வீன் சுல்தானா, சஞ்சய் சுப்ரமணியமாகக் கடின உழைப்பும் பயிற்சியும் அவசியம்.
சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு இந்த நுட்பம் தெரியாது. நிகழ்ச்சிகளுக்குத் தேர்வாளராக வரும் இசைப் பிரபலங்களும் இதையெல்லாம் சொல்லி சுருதி பேதம் உண்டாக்க வேண்டாமென்று நினைத்து, பங்கு பெறுகிறவர்களைப் பற்றி மிக உயர்வாகவே சொல்லிச் செல்கிறார்கள்.
தமிழ், மலையாளம், தெலுங்கு – எந்த மொழியை எடுத்தாலும் இந்த மாதிரி இன்ஸ்டண்ட் மேதைகளை உருவாக்கி வரும் நேரத்தில், தூர்தர்ஷன் வழக்கம் போல் விளம்பரமே இல்லாமல் சிறப்பான இசைத் தேர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
SPIC MACAY (Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth) ஆதரவோடு தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் நடத்தி வரும் Naad Bhed (நாத பேதம்?) நிகழ்ச்சி தவற விடக்கூடாதது.
இங்கும் போட்டி, தேர்வாளர்கள், குரலிசை, கருவியிசை தான். தேர்ந்த இசைக் கலைஞர்கள் தேர்வாளர்கள். நுணுக்கமான கேள்விகள். கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி இரண்டும் பிரதான இடம் பெறுகின்றன.
நேற்றைய நிகழ்ச்சியில் (வெள்ளிக்கிழமை மாலை 5 மணி) தப்பா இசையென்ற இந்துஸ்தானி பாரம்பரியம் சார்ந்த வேகமான பாட்டு முறையில் இளம்பெண் ஒருவர் அற்புதமாகப் பாடினார். நடுவராக வந்தவர் (கிரிஜா தேவியென்று நினைக்கிறேன்) குவாலியர் பந்ததிக்கும் (குவாலியர் கரானா) ஆக்ரா பந்ததிக்கும் உள்ள வேற்றுமைகளைக் குறிப்பிட்டு அவற்றையும் பயில வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பங்கு பெறுகிறவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பயனளிக்கும் நிகழ்ச்சி என்றால் இப்படியன்றோ இருக்க வேண்டும்!  .eramurukan.in/

கருத்துகள் இல்லை: