புதன், 11 மார்ச், 2015

காந்திதான் அரசியலில் மதத்தை புகுத்தி கலவரத்திற்கு வித்திட்டார்! நீதிபதி மார்கண்டேய கட்ஜு

புதுடெல்லி பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ‘காந்தி–ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை சற்று நேரத்தில் 1,300–க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதில், மார்கண்டேய கட்ஜு எழுதி இருப்பதாவது:–
இந்த கட்டுரை எனக்கு கண்டனத்தைப் பெற்றுத் தரலாம். ஆனால், நாட்டு நலனுக்காக இதை சொல்ல வேண்டும் என்று கருதுகிறோம். மகாத்மா காந்தி, வெள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்தார். நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இந்தியா, பல்வேறு சாதி, மொழி, மதங்களைக் கொண்ட நாடு. இதை உணர்ந்த வெள்ளையர்கள், பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர். காந்தியும் தன் பங்குக்கு பல ஆண்டுகளாக, அரசியலில் மதத்தை புகுத்தியதன் மூலம், வெள்ளையர் கொள்கைக்கு உரம் சேர்த்தார்.

அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 1915–ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 1948–ம் ஆண்டுவரை, அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் ‘ராமராஜ்யம், பசு பாதுகாப்பு, பிரம்மச்சர்யம், வர்ணாசிரமம்’ போன்ற இந்துமத தத்துவங்களை வலியுறுத்தி வந்தார். தன்னை ஒரு சனாதனி இந்து என்றும், வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றும் அவர் எழுதி வந்தார். அவரது கூட்டங்களில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற இந்து பஜன் ஒலிக்கும்.
இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, வெள்ளையர்களின் ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள் தானே?
பகத்சிங் போன்றவர்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சி இயக்கம் தொடங்கினர். ஆனால், காந்தி, சத்யாகிரக பாதைக்கு விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பினார். இதுவும், வெள்ளையர்களுக்கு உதவியது.
இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின்போது, கலவரத்தை தணிக்க காந்தி நவகாளி யாத்திரை சென்றதை பலரும் துணிச்சலான செயல் என புகழ்கிறார்கள். ஆனால், அவர்தான் அரசியலில் மதத்தை புகுத்தி, இந்த கலவரத்துக்கே வித்திட்டவர். முதலில் வீட்டை கொளுத்தி விட்டு, பிறகு தீயை அணைக்க முயற்சிப்பதுபோல் நாடகமாடுவது சரிதானா?
இவ்வாறு அவர் எழுதி உள்ளார். dailythanthi.in

கருத்துகள் இல்லை: