வெள்ளி, 13 மார்ச், 2015

மன்மோகனுக்கு ஆதரவாக சோனியா தலைமையில் பேரணி நிலக்கரிச் சுரங்க வழக்கில் சம்மன் விவகாரம்:

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்து, தில்லியில் அவரது இல்லம் நோக்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வியாழக்கிழமை பேரணியாகச் சென்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், சோனியா காந்தி தலைமையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, வீரப்ப மொய்லி, ரகுமான்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு அவர்கள் அனைவரும் பேரணியாகச் சென்றனர்.
அவர்களை மன்மோகன் சிங்கும், அவரது மனைவியும் வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றனர்.

பின்னர், காங்கிரஸ் தலைவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, சோனியா காந்தி கூறியதாவது:
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, மன்மோகன் சிங்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது, என்னை கோபமடையச் செய்துள்ளது. அவர், நேர்மையானவர் என்பது, இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளும் அறிந்த விஷயமாகும்.
இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும். மேலும், இந்த வழக்கில், அனைத்து வழிகளிலும் சட்ட ரீதியில் போராடுவோம் என்றார் சோனியா காந்தி.
ப.சிதம்பரம்: இதைத் தொடர்ந்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மன்மோகன் சிங் உள்பட பலருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் மீது சிபிஐ எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்கவில்லை.
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திரம் இல்லை என்றும் சிபிஐ ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசு மெளனம் காக்காமல், தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். சிபிஐ சுதந்திரமான அமைப்பு என்பதை மத்திய அரசு நம்பினால், சிபிஐ அறிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
ஆனந்த் சர்மா: "மன்மோகன் சிங் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் சரியானவை, வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை. அவரிடம் விசாரணை நடத்தும்போது, அனைத்து உண்மைகளும் வெளிவரும்' என்றார் ஆனந்த் சர்மா.
வீரப்ப மொய்லி: "பொது வாழ்வில் மதிப்புமிக்க தலைவரான மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களுடன் இங்கு வந்திருக்கிறோம். அவரை நீதிமன்ற வாசலுக்கு வரவழைத்தால், நாட்டில் நீதி இல்லை என்றாகிவிடும். மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பியதால், நீதி முற்றிலும் பிறழ்ந்துவிட்டது' என்றார் வீரப்ப மொய்லி.
குலாம் நபி ஆஸாத்: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அவரிடம் சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். எனவே, தான் தனியாக இருப்பதாக அவர் கவலைப்படத் தேவையில்லை என்றார் குலாம் நபி ஆஸாத்.
மன்மோகன் சிங்கின் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வருவதால் மட்டும், இந்த வழக்கில் எப்படி உதவ முடியும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
மன்மோகன் சிங் நன்றி: இதையடுத்து, தனக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு மன்மோகன் சிங் நன்றி தெரிவித்தார். அவர்களுக்கு தான் நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே, ரேணுகா செளத்ரி, மணிசங்கர் அய்யர், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, அஸ்வனி குமார் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.ஜே.குரியன், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், பேரணியில் பங்கேற்கவில்லை.
விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
2005ஆம் ஆண்டில் நிலக்கரித் துறையைக் கவனித்து வந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ஒடிஸா மாநிலம், தலபிராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை விதிமுறைகளை மீறி, ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்க dinamani.com

கருத்துகள் இல்லை: