வெள்ளி, 13 மார்ச், 2015

ஸ்டாலின் : டிராபிக் ராமசாமி மீது பழிவாங்கல் நடவடிக்கை

ஜெயலலிதா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய பேனர்களையெல்லாம் தைரியமாக, அகற்றுகிற காரியத்தில் டிராபிக் ராமசாமி ஈடுபட்டிருந்த நேரத்தில் பழிவாங்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்டாலின் டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்துப் பேசி, உடல் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''டிராபிக் ராமசாமியை பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி பொதுநல நோக்கத்தோடு பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பவர். அவர் ஏதோ அ.தி.மு.க-வினுடைய பேனர்களை மட்டுமல்ல, தி.மு.க-வின் பேனர்கள், எந்த கட்சியினுடைய பேனர்களாக இருந்தாலும் சட்டப்படி அகற்றப்படவேண்டும் என்று அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவர். குறிப்பாக நீதிமன்றத்தின் மூலமாகவே அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்.
போயஸ் தோட்டத்துக்கு பக்கத்தில், ஜெயலலிதா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய பேனர்களையெல்லாம் தைரியமாக, அவரே முன்னின்று அகற்றுகிற காரியத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவர் பழிவாங்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்த ஆட்சி தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஏற்கெனவே ஒரு அமைச்சர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்தவித வழக்கும் போடவில்லை, அந்த அமைச்சர் கைது செய்யப்படவும் இல்லை. இதுபோன்று தொடர்ந்து தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கிறது.''என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: