சனி, 14 மார்ச், 2015

புதிய தலைமை செயலக வழக்கில் கலைஞரிடம் 72 கேள்விகள்! ரகுபதி கமிஷன் !

புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்கும் நீதிபதி ரகுபதி கமிஷன், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 72 கேள்விகளை எழுப்பியுள்ளது.சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.அது குறித்து விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், பல்வேறு கட்டங்களாக நீதிபதி ரகுபதி ஆய்வு நடத்தினார். இந்த திட்டம், தொடர்பாக எழுந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக, இதுவரை, பொதுப்பணித்துறை, சி.எம்.டி.ஏ., ஒப்பந்த நிறுவனங்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் என, 24 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரிக்கப்பட்டனர். கஞ்சா கேஸ் போட்டாவது கலைஞரை நடுராத்திரி கைது... ? வேறென்ன பண்ண முடியும் மைக்கல் குன்ஹாவின் ஆப்புதான் இறுகி கெடக்கே! ஆத்திரம் வராதா?  
இவர்களுக்கு அடுத்தபடியாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால், இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், பதில் பெற, 72 கேள்விகளை அனுப்ப, பிப்., 17ம் தேதி நீதிபதி ரகுபதி உத்தரவிட்டார்.
கேள்விகள் என்ன?



அந்த, 72 கேள்விகளில் குறிப்பிட்ட சில கேள்விகள் இங்கே:
1. புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் திட்ட மதிப்பீட்டில் இல்லாத, தற்காலிக, 'டூம்' அமைக்கும் பணிக்காக, ஒப்பந்தப்புள்ளிகள் கோராமல், ஒரு ஒப்பந்த நிறுவனத்துக்கு கூடுதலாக, 3.28 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.இதற்கு கலந்தாலோசனை செலவாக, 18.26 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. 'தற்காலிக, 'டூம்' அமைக்கும் வகையில், 3.46 கோடி ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது' என, தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?
2. கட்டுமான பணியில், தவறான கணக்கீடுகள் அடிப்படையில்,'பைல் பவுண்டேஷன்' அமைக்கப்பட்டதற்காக, ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்ட, 2.46 கோடி ரூபாய் வீண் செலவு என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?
3. திருத்தப்பட்ட குறிப்புகளை பின்பற்றாமல் இருப்பதை அனுமதித்ததால், கூடுதல் சிமென்ட் பயன்படுத்திய வகையில், 3.54 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?
4. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள நிலம் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்ட உகந்ததா, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, 1971ம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் கலந்தாலோசிக்காதது ஏன்? இதற்கு உங்கள் பதில் என்ன?

கால அவகாசத்தில்...:

5. உயர் தகுதி மிக்க மூத்த பொறியாளர்கள் பொதுப்பணித்துறையில் உள்ள நிலையில், வெளியில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்களை, 3 லட்சம் ரூபாய் செலவில் பயன்படுத்த பொதுப்பணித்துறையை அனுமதித்தது ஏன்? இதற்கு உங்கள் பதில் என்ன?
6. ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகம் புதிய தலைமைச் செயலகம் கட்ட, போக்குவரத்து நோக்கில் உகந்ததா என்று ஆய்வு செய்யப்படவில்லை. மேலும், போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில், இப்பகுதியை சுற்றி செல்லும் வாகனங்களின் நெரிசல் குறித்தும், சட்டசபை கூட்டம் நடக்கும் சமயங்களில் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசல் குறித்தும், எதிர்கால விரிவாக்கத்துக்கு உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யாதது ஏன்? இதற்கு உங்கள் பதில் என்ன?
7. இத்திட்ட வடிவமைப்பை தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஜி.எம்.பி., இன்டர்நேஷனல் ஜெர்மனி நிறுவனம் டெண்டர் அறிவிப்பில், குறிப்பிட்டபடி தகுதிக்கான சான்று ஆவணங்களை மதிப்பீட்டு குழுவிடம், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. அந்நிறுவனம் தகுதி சான்று ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் வேண்டும் என்றே நீட்டிக்கப்பட்டது ஏன்? இதற்கு உங்கள் பதில் என்ன?
தொகை அதிகரித்தது ஏன்?

8. புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டும் திட்டத்துக்கு வழக்கமான அரசு திட்டங்களுக்கு பின்பற்றப்படும் கட்டுமான பொருட்களுக்கான விலைப்பட்டியல் பின்பற்றப்படவில்லை.மேலும், இந்த வளாகத்தில், 'ஏ' பிரிவு கட்டுமான திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு, 200 கோடியில் இருந்து, 425 கோடி ரூபாயாக தன்னிச்சையாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு மதிப்பீட்டை உயர்த்தியதில் குறிப்பிட்ட சில வகை பொருட்களுக்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதற்கு உங்கள் பதில் என்ன?
9. திராவிட கட்டட கலை, கோவில் கட்டட கலையில் பயன்படுத்தப்படாததும், வெளிநாடுகளில் ஆடம்பர கட்டடங்களில் பயன்படுத்தப்படும் வடிவமைப்புகளும், பொருட்களும் இக்கட்டடத்துக்கு, கட்டடகலை வல்லுனர் கூறியதற்காக அனுமதிக்கப்பட்டது ஏன்? இதற்கு உங்கள் பதில் என்ன?
10. புதிய தலைமைச் செயலக கட்டடத்துக்கு, வட்ட வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டதால், கட்டுமான செலவு, 35 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?

பாரம்பரிய கட்டடம்:

11. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த 'அட்மிரால்டி' கட்டடம் இடிக்கப்பட்டது. இது பாரம்பரிய கட்டடம் என உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கட்டடத்தை இடிக்க, சென்னை மாநகராட்சியிடமிருந்து உரிய அனுமதி பெறப்படவில்லை. இதற்கு உங்கள் பதில் என்ன?
12. ஆரம்ப நிலையிலேயே, இத்திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது குறித்து உங்கள் பதில் என்ன?
13. ஓமந்தூரார் வளாகத்தில், 30 கட்டடங்கள், 65 லட்ச ரூபாய் செலவில் இடிக்கப்பட்டது வீண் செலவு என தெரிய வந்துள்ளது குறித்து உங்கள் பதில் என்ன?
14. திறமையான பேச்சு வார்த்தை நடத்தப்படாததால், ஒப்பந்ததாரருக்கு,'டெண்டர்' தொகை, 29.89 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அந்த, 'டெண்டரை' ரத்து செய்து புதிய,'டெண்டர்' கோர வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படாதது குறித்து உங்கள் பதில் என்ன?

பி.ஆர்.பி., கிரானைட்ஸ்:

15. 2010 மார்ச் 13ம் தேதி திறக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு இதற்காக அவசரகதியில், 18 மாதங்களுக்குள் பணிகளை முடிப்பதில் அரசு ஆர்வம் காட்டியது குறித்து உங்கள் பதில் என்ன?
16. அரசு நிறுவனமான, 'டாமின்' நிறுவனத்திற்கு சொந்தமாக கிரானைட் ஆலைக்கு பதிலாக, மதுரை, மேலூரில் உள்ள பி.ஆர்.பி., எக்ஸ்போர்ட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களை கிரானைட் வெட்டுதல், பாலீஷ் போடுதல் பணிக்கு பயன்படுத்தியதால், 14.54 கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்பட்டது குறித்து உங்கள் பதில் என்ன?
17. புதிய தலைமைச் செயலக வளாகத்தில், 'ஏ' பிரிவு கட்டடத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி விதிகளின் படியான பாதுகாப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாதது, குறித்து உங்கள் கருத்து என்ன?
18. கட்டுமான பணியில், கூடுதல் மற்றும் சார்பு பொருட்கள் வகையில், அளவுக்கதிகமான பொருட்களை பயன்படுத்தியதால், 56.39 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

ரெடிமிக்ஸ் கான்கிரீட்:


19. புதிய தலைமைச் செயலக கட்டுமான பணியில்,'ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக் ஷன்' நிறுவனத்தால், கட்டுமான செலவில், 36.41 சதவீதம் அதிகமாகியுள்ள நிலையில், இதற்கு மாற்றாக வேறு நிறுவனங்களை கருத்தில் கொள்ளாதது குறித்து உங்கள் பதில் என்ன?
20. கட்டுமான பணிக்கு, ரெடிமிக்ஸ் கான்கிரீட் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் கூறுகள் குறித்த புள்ளி விவரங்கள் தொகுக்கப்படாதது குறித்து உங்கள் பதில் என்ன?
21. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துக்கு, இதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களை தவிர்த்து விட்டு, செராமிக் கற்கள் விற்பனை செய்யும் டீலர் ஒருவரிடம் இருந்து ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுக்கான விலைப்புள்ளிகள் பெறப்பட்டது குறித்து உங்கள் பதில் என்ன?
22. முக்கியத்துவம் மிக்க இந்த திட்டத்துக்கான செலவு மதிப்பீடு குறித்து, முன் தணிக்கை செய்யாதது ஏன்?
23. கட்டுமான பொருட்கள் விலைப்பட்டியலில் வராத பொருட்களை வாங்கும்போது, பிரதான டெண்டருடன், பொதுப்பணித்துறை தனியாக வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து விலைப்பட்டியல் பெற்று பிரதான நிறுவனங்கள் குறிப்பிடும் தொகையின் உண்மை நிலை சரிபார்க்கப்படாதது ஏன்?

சந்தேகம்:


24. ஒப்பந்ததாரர்கள், கட்டடக்கலை நிறுவனங்கள் குறிப்பிட்ட, 'டெண்டர்' தொகையில் உள்நோக்கம் இருக்கிறது என்பது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
25. இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் பெறுவதற்காக, இ.சி.சி., மற்றும், எல் அண்டு டி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.ஒரு நிறுவனம் டைப் செய்த ஆவணத்தையும் இன்னொரு நிறுவனம், எழுதப்பட்ட ஆவணத்தையும் தாக்கல் செய்துள்ளது.
இவ்விரு நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகைக்கு இடையே, பெரிய வேறுபாடுகள் இல்லாத நிலையில், இவர்கள் கட்டுமான செலவு மதிப்பில் அளிக்க முன்வந்த தள்ளுபடி தொகையை குறிப்பிட்டதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.ஒரு நிறுவனத்தின் ஆவணத்தில், முக்கியமான கடைசி பக்கம் காணாமல் போனதும், இன்னொரு நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் பொதுப்பணித்துறை உயரதிகாரியின் சான்றொப்பம் இல்லாததும் சந்தேகங்களுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது இதுகுறித்து உங்கள் பதில் என்ன?இவை உட்பட மொத்தம், 72 கேள்விகளை, நீதிபதி ரகுபதி கமிஷன் எழுப்பியுள்ளது.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: