புதன், 11 மார்ச், 2015

தொல்காப்பியர் விருது' பெறுகிறார் 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகள், கடந்த பிப்., 21ம் தேதி மத்திய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2011-12, 2012-13ம் ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும் நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட உள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம். செம்மொழி தமிழை மேம்படுத்தும் வகையில், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அடிப்படையாக கொண்டு, 10 செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.2004 செப்டம்பரில் மத்திய அரசு, 'செம்மொழிகள்' என்ற ஒரு சிறப்பு பிரிவை தோற்றுவித்து, தமிழை 'செம்மொழி' என அறிவித்தது. விருதுகள், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய நான்கு உட்பிரிவுகளைக் கொண்ட மத்திய அரசின், செம்மொழி தமிழ் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் 2005 இறுதியில் ஒப்படைக்கப்பட்டது.  இந்த ஆட்சியில் சென்னையில் செம்மொழி அலுவலகம் மோசமாக இருக்கும் அவலத்தையும் கொஞ்சம் எழுதுங்க
இப்புதிய திட்டத்தின் கீழ் செவ்வியல் கால (கி.பி., 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட) தமிழ் இலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுக்கள், நாணயங்கள் ஆகியவை குறித்த ஆய்வுகளில் பெருங்கவனம் செலுத்துவது என, வல்லுனர் குழுவால் முடிவு செய்யப்பட்டது கி.பி., 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுக்களும், 37 வட்டெழுத்து கல்வெட்டுக்களும், 'எச்.டி., வீடியோ அண்டு ஹை ரெசல்யூஷன் ஸ்டில் இமேஜ்' எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஜார்ஜ் எல் ஹார்ட் எனும் தமிழ் அறிஞர் 2000ல், 'செம்மொழிகள்' என்று உலகம் எங்கும் பேசப்பட்டு வந்த பெர்சியன், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம் மற்றும் அரபி மொழிகளுக்கு ஈடாகவும், இணையாகவும், தொன்மையாகவும், இலக்கண இலக்கியத்தையும் தமிழ் கொண்டிருப்பதால், இதற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவருக்கு முன் இதே கருத்தை, கால்டுவெல் (1814-1891), பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் வலியுறுத்தி போராடி வந்தனர். இயக்கமாக, சைவ சித்தாந்த சமாஜம், 1918ல் இந்தக் கோரிக்கையை வைத்தது. 2004 ஜூன் 7ல் நடந்த பார்லிமென்டில், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் தமிழ் செம்மொழி என அறிவித்தார்.2004 செப்டம்பரில், செம்மொழி தகுதி ஒரு மொழிக்கு வழங்க தேவையான அம்சங்களை, மத்திய அரசின் குழு வரையறை செய்தது. பின் 2004, அக்., 12ல், இந்திய அரசு தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டது.இந்நிறுவனம், 2008 மே 19ம் தேதி முதல், சென்னையில் இயங்கி வருகிறது. இதற்கு முன் 2006 மார்ச் முதல் 2008 மே 18ம் தேதி வரை, மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் எனும் பெயரில் செயல்பட்டு வந்தது.


திட்டங்களும் செயற்பாடுகளும்:



* பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு
* பழந்தமிழ் நூல்களை மொழி பெயர்த்தல்
* வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்
* தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு
* தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்
* தமிழும் பிற மொழிகளும்
* பழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்
* இணையவழி செம்மொழியைக் கற்பித்தல்
* பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்
* பழந்தமிழ் குறுங்காட்சி படங்கள்
* முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை
* முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகை
* குறுகிய காலத்திட்ட பணிகள்
* செம்மொழி தமிழ் விருதுகள்
* தொல்காப்பியர் விருது
* குறள் பீடம் விருது
* இளம் அறிஞர் விருது

கடந்த, 2011-12, 2012-13 ஆண்டுகளுக்கான இந்த விருதுகள், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.
2011-12 தொல்காப்பியர் விருது - பேராசிரியர் செ.வை.சண்முகம்.
குறள் பீடம் விருது - டாக்டர் ஈவா மரியா வில்டன்
இளம் அறிஞர் விருது - டாக்டர் கா.அய்யப்பன், முனைவர் இ.எழில் வசந்தன், டாக்டர் க.ஜவகர்

2012-13ம் ஆண்டுதொல்காப்பியர் விருது - டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி (நாணயவியல்)
இளம் அறிஞர் விருது - டாக்டர் அ.சதீஷ், முனைவர் இரா.வெங்கடேசன், டாக்டர் பா.ஜெய்கணேஷ், டாக்டர் எம்.ஆர்.தேவகி, டாக்டர் உ.அலிபாவா
இவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜனாதிபதி மாளிகையில் விரைவில் நடக்க உள்ளது.

தொல்காப்பியர் விருதை இதற்கு முன், 2005-06ல், பேராசிரியர் அடிகளாசிரியரும் (தொல்காப்பியம் பதிப்பித்தல்), 2009 -10ல், ஐராவதம் மகாதேவனும் (கல்வெட்டு), 2010-11ல்,
ராம.தமிழண்ணல் பெரியகருப்பனும் (இலக்கியம்) பெற்றுள்ளனர்.



தொடரும் ஆசிரியரின் ஆராய்ச்சி பணிகள்:
'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்தி, தமிழ் எழுத்து சீர்திருத்தம் தேவை என்று உணர்ந்து, 1970ம் ஆண்டு, தமிழின் தொன்மையான எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தார். 'தமிழ் பிராமி, தமிழ் வட்டெழுத்து, சேரகால வட்டெழுத்து, பிற்கால வட்டெழுத்து' என்ற நூல்களை எழுதினார். கடந்த, 1982ம் ஆண்டு கம்ப்யூட்டர் பயன்படுத்தி, தமிழை அச்சு கோர்க்கும் பணியில் உதவி செய்தார். 'தினமலர்' நாளிதழில் தான் முதன் முதலில், தமிழ் அச்சு கோர்ப்பு வந்தது. கடந்த, 1985ம் ஆண்டு, மதுரையில், ஒரு நாணய சேகரிப்பாளரிடம் இருந்து வாங்கிய நாணயத்தில், 'பெருவழுதி' என்ற பெயர், தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தில் நாணயங்கள் இருந்தது, அதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை, சங்ககால மன்னர்கள், சிறிய குறுநில மன்னர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள குறிப்பிட்டு இருந்தனர். இந்த கண்டுபிடிப்பு அவர்கள் மனநிலையை மாற்றியது. அதன்பின், 'சங்ககால சோழர் நாணயங்கள்' என்ற நூலை வெளியிட்டார். தொடர்ந்து, 'திருக்கோவிலூர் மலையமான் நாணயங்கள்' நூலையும் வெளியிட்டார். கடந்த, 1987ல், கரூர் பகுதியில், ஏராளமான பழங்கால நாணயங்கள் கிடைப்பதை கேள்விப்பட்டு அங்கு சென்று நாணயங்களை வாங்கி ஆய்வு செய்தார். அதில், ஒரு புறம் பிராமி எழுத்துக்களும் மறுபுறம், வில் அம்பு உருவம் இருந்தது. இந்த நாணயங்களை ஆய்வு செய்து, ஆங்கிலத்தில், SANGAM AGE TAMIL COINS' என்ற நூலை வெளியிட்டார்.இந்த நூல் பல பகுதிகளிலும் அதிகளவில் விற்பனை ஆனது. தற்போது, கொற்கையில் கிடைத்த, 'செழிய செழியன்' எழுத்து பொறிக்கப்பட்ட நாணயங்களை கொண்டு, 'சங்ககால கொற்கை பாண்டியர்களின் செழிய, செழியன் நாணயங்கள்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். அவரின் ஆராய்ச்சி தொடர்கிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: