ஏசு கிறிஸ்துலகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன்.
“உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார்”
ஆமென்… உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்த்தரை நேசியுங்கள். உங்கள் பாவங்களை உடனடியாக மன்னிப்பார். இறுதியாக உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் வாழ்வில் கஷ்டம் நீங்கி ஒளி பிறக்கும்” என
பிரசங்கம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, எழுந்து வெளியே சென்று பார்த்த போது எனது வீட்டின் முன் பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. சுமார் 10 பேர் கையில் பிரசுரம், புத்தகம், சாக்லேட், என அனைவருக்கும் வீடு வீடாக சென்று கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நானும் அவர்கள் அருகில் சென்றேன். எனக்கும் ஒரு புத்தகம், சாக்லேட் கொடுத்தார்கள். அங்கே மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருந்தவரிடம் சென்று,
“ஐயா ஒரு நிமிடம்” என்றேன்.
“ம்….. சொல்லுங்கள்” என்றார்.
“பிரச்சனை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் என்று கூறினீர்கள், அதான் வந்தேன்” என்றேன்.
அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு,
“ம்…! வாங்க! வாங்க! என்ன பிரச்சனை” என்று ஆவலாக கேட்டார்.
“ஐயா போன வாரம் கரண்டு பில் விலைய ஏத்திட்டாங்க. அத கொஞ்சம் குறைக்க முடியுமா” என்றேன்.
அவருடைய மகிழ்ச்சியான முகம் சற்று சுருங்கியது. சிறிது நேரம் யோசித்து விட்டு,
“ம்…! கண்டிப்பாக, ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தங்களின் ஜபத்தால் மனமுருகி அந்த அதிகாரத்தை கொண்ட மனிதரிடம் நெருங்கி தங்களின் கஷ்டத்தை வெளிப்படுத்தி….”
இடையே நான் குறுக்கிட்டு, தன்மையாக “ஐயா கொஞ்சம் நில்லுங்க. கரண்ட் பில்ல குறைக்க முடியுமா? முடியாதா?” எனக் கேட்டேன்.
அதற்கு அவர் “கண்டிப்பா முடியும்பா, அதுக்கு நீங்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் விலை குறையும்” என்றார்.
“நான் இங்கே ஜெபித்தால் தமிழக அரசு எப்படி விலைய குறைக்கும்?”
“நீங்கள் ஜெபிக்கும் போது அந்த அதிகாரம் கொண்ட நபரிடம் யேசு சென்று உங்கள் கஷ்டங்களை எடுத்து கூறுவார். உடனே அவரும் மனமிறங்கி விலையை குறைத்து விடுவார்.”
“நீங்க சொல்றபடி, ஒ.பன்னீர்செல்வத்திட்ட இயேசு சொல்லி, அவரு விலைய குறைச்சுருவாரா?”
(பதில் கூறாமல் சிரித்து மழுப்புகிறார்).
“ஐயா, கூடங்குளம் மக்கள் இன்னைக்கில்ல, 3 வருஷமா ஆண்டவரை ஜெபித்துக்கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் அந்த அணுவுலைய மூட முடியலையே. இப்ப மேலும் ரெண்டு அணு உலைய வேற புதுசா வைக்க போராங்காளாமே!”
அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறிய போது, அவருடன் வந்திருந்த இன்னொருவர் எனது கையை இருக பிடித்து,“ஐயா எனக்கு மூனு பிள்ளைங்க. நான் எந்த வேலைக்கும் போகல. இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன்” என்றார்.
“ஐயா நீங்க நல்லா இருக்கிங்க. ஆனா என் பிரச்சன இன்னும் தீரலையே. இந்த தெருவுக்கு நான் குடி வந்து 6 வருசத்துக்கு மேல ஆகுது. இந்த ரோடு மழ பெஞ்சா தண்ணியும், சேறுமா வந்து நிக்குது. வீட்டுக்குள்ள வரைக்கும் சாக்கடை கலந்த மழை தண்ணி வருது! நாங்க குடிக்கிற தண்ணி தினந்தோறும் வருவதில்ல! இருக்கிற பிரச்சனைல, இப்ப வேற கேஸ் வாங்கனும்னா, அக்கோண்ட் வேணுமாம்! எதோ பாம் எழுதி தரணுமா… இதெல்லாத்துக்கும் மேல விலவாசி ஏறிக்கிட்டே போகுது. ஆனா கம்பெனில, எங்க சம்பளத்த மட்டும் யேத்த மாட்டேங்குறாங்க. இத எங்க போய் சொல்றது?”
(என்னுடைய பதிலை கேட்டவுடன் அவரை பின்தள்ளிவிட்டு மீண்டும் பழைய நபரே பதிலை கூற ஆரம்பித்தார்.)
“ரோடு சரியில்ல, தண்ணி வரல, கரண்டு பில் யேறி போச்சுனா! இதுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவருங்க இருப்பாங்க. அவங்க கிட்ட போய் மனு கொடுங்க!”
“அதெல்லாம், பல தடவ கொடுத்துப் பாத்தாச்சு. ஒன்னும் நடக்கலீங்க!”
“ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!”
(இப்படி நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடன் வந்திருந்த மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக வண்டியில் ஏறிக்கொண்டு, ஐயா, வாங்க! வாங்க! என்று அழைத்தனர். அவரும் கிளம்ப தயாரானார்.)
“நீங்க எல்லாரும் மக்கள் நல்லா இருக்கனும்னு தானே ஜெபிக்கிறீங்க! அப்போ வாங்க போராடலாம்” என்றதும்,
“நீங்க பெரிய ஆளய்யா! எங்கள ஆள வுடுங்க. எங்களுக்கு வேற வேலை இருக்குது!” எனக் கூறி வேனில் ஏறி சிட்டாக பறந்து விட்டனர்.
—————————————————————————————
யேசு நாதரே போராடாமல் எதுவும் கிடைக்காது என்று சொல்லிவிட்டார் என நினைத்துக்கொண்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் மீண்டும் ஒரு குரல், எனது செவியை கிழித்தது.
“சார்…. சார்….!”
தன்னார்வ அரசியல்
“2015-க்குள் பட்டினியை குறைக்க வேண்டும் – ஆயிரத்தாண்டு வளர்ச்சி இலக்கு” “எனக்கும் அதே நோக்கம்தான்”
யார் என்று எழுந்து பார்த்தால் சுமார் 15 பேர் இருப்பார்கள். வெள்ளை நிற தொப்பியுடன் கலக்கலான சட்டை பேண்டுடன் காலில் ஷூ (shoe)வுடன் நின்று கொண்டிருந்தனர். எனது, ஹவுஸ் ஓனர் எச்.டி.எஸ்.சி பேங்கில் இந்த வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கியிருந்தார். திருப்பி கட்டாததால், ஜப்தி செய்ய வந்திருக்கிறார்களோ என திகைத்து போனேன்.
“என்ன வேணும் சார்?”
“உங்க வீட்டில் பாத்ரூம் இருக்குதா?”
“ங்….இருக்குதே”
“உங்களுக்கு ரோடு வசதி தண்ணி ஒழுங்கா வருதா?”
“ரோடு சரியில்ல. மழை பேஞ்சா சேறும் சகதியும்தான் மிஞ்சும். தண்ணி எடுக்க தினந்தோறும் சண்டதான் வரும்.”
“இல்ல சார். நாங்க உங்களுக்கு ஒரு இலவசமான பயிற்சி தந்து வேலையும் தருகிறோம். அதுக்கு 8-வது படித்திருந்தால் மட்டும் போதும். நீங்க, உங்க தம்பி தங்கச்சி யாரா இருந்தாலும் பரவாயில்ல.”
“நீங்க யாருங்க?”
“நாங்க வேல வாங்கி கொடுக்கிற ஒரு இன்ஸ்டியூட் வச்சிருக்கோம்.”
“அது கவர்மெண்டா? தனியாரா?”
“இது தனியார்தான். ஆனா கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் அனுப்புவோம்.  நீங்க ஏன் இந்த வேலைய செய்றீங்க. இதனால உங்களுக்கு என்ன இலாபம்?”
“இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”
“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”
“சார் அரசியல் எல்லாம் பேசாதீங்க? நோ பாலிடிக்ஸ், பிளீஸ். ஏதோ எங்களால முடிஞ்சத செய்றோம்.”
“சரிங்க சார். நீங்க வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கறதா சொல்றீங்க. அதுக்கு ஏன் இப்படி தெருத்தெருவா சுத்தறீங்க. இப்பதான் நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் 15,000 பேருக்கு மேல வேல இல்லாம போச்சு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே.”
“இல்ல சார். அவங்கெல்லாம் ஐ.டி. பீல்ட சேந்தவங்க. நாங்க வந்து பிட்டரு, டர்னரு, வெல்டரு ட்ரெயின்ங் மட்டும்தான் கொடுக்கிறோம்.”
“பரவால்ல சார். நீங்க தான் ட்ரெயினிங் கொடுக்கிறீங்கல்ல. அவங்களும் கத்துப்பாங்க.”
“இல்ல சார். அவங்க காண்டக்ட் நம்பர் எங்கிட்ட இல்ல.”
“நான் வாங்கித்தரவா?”
“அவர். இல்ல சார். அவங்க வேற ஊரு. நாங்க இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் சொல்லித்தறோம். ஏன்னா எங்க இன்ஸ்டியுட் இங்க தான் இருக்குது. நாங்க தேட்ற ஆளுங்களுக்கு வயசு 30க்குள்ள இருக்கனும் சார். அவங்களுக்கு எல்லாம் வயசு அதிகமா இருக்கும்.”
“வேல எப்படி சார். ஈ.எஸ்.ஐ, பி.எஃப், சம்பளம், நிரந்தரம் (PERMANENT) என எல்லா இருக்கும்தானே?”
“அதெல்லாம் அவங்க கம்பெனி ரூல். அதுல நாங்க தலையிட மாட்டோம். எங்க வேலயே உங்களுக்கு வேல வாங்கி தர்றதோட முடிஞ்சிடும் சார்.”
“அப்ப நீங்க ஆள மட்டும் கொண்டு போய் தள்ளிடுவீங்க. அதன்பிறகு என்ன ஆனாலும் நீங்க கண்டுக்க மாட்டிங்கதானே. கொறஞ்சது ஒருத்தருக்காவது, நிரந்தர வேலை உங்களால் வாங்கித்தர முடியுமா?”
“இல்ல சார். அங்க அவங்களோட பெர்பாமன்ஸ் படி நிரந்தரம் பண்ணுவாங்க.”
“அப்படின்னா நீங்க ட்ரெயினிங் கொடுக்கிறேன்னு சொல்ற பிர்லா கம்பெனியிலேயே 20 வருசமா கான்ட்ராக்டிலதானே வேல செய்றாங்க.”
“இப்பல்லாம் வேல கிடைக்கறதே பெரிய விசயம். இதுல நீங்க பர்மெனட்ன்னு பேசுறீங்களே சார். எதோ எங்களால் முடிஞ்சது வேல வாங்கித்தறோம். அதுவே பெரிய விசயம்.”
“பர்மெனன்ட் இல்லனா கூட பரவால்ல சார். தொடர்ச்சியா அங்கயே வேல கொடுப்பாங்கல்ல.”
“அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது சார். அப்படியே உங்கள வேலைய விட்டு தூக்கிட்டா எங்க கிட்ட வாங்க. உங்களுக்கு வேற வேல வாங்கித்தாறோம்.”
“அப்ப இப்படியே ஒவ்வொரு கம்பெனியா சுத்திக்கிட்டே இருந்தா எப்பதான் சார் நாங்க செட்டில் ஆகுரது” என்று கேட்டவுடன், பதில் சொல்ல முடியாமல் ரொம்ப நேரம் யோசித்து விட்டு
“ஓகே சார் உங்களுக்கு வாய்ப்பிருந்தா யாரையாவது அனுப்புங்க” என கூறிவிட்டு ( இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போதே கூட வந்த அனைவரும் ஒவ்வொருத்தராக சென்றுவிட்டனர் ) வந்த வழியே அவர்கள் சென்று விட்டனர்.
சமீபத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தியதையும், மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம் அரசு தனியாரிடம் மின்கொள்முதல் செய்வது தான் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒத்துக்கொள்ள வைத்ததையும் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் போராட்டம் தான் மக்களிடம் அம்பலப்படுத்தியது.
மின்கட்டண உயர்வு மட்டுமல்ல மற்ற எல்லா பொருள்களின் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை என மக்களின் கழுத்தை நெறிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் அரசின் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தான்.
மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அதை விடுத்து, பிரச்சனைக்கான காரணத்தை உணராத வகையில் திசை திருப்பி எதிர்த்து கேள்வி கேட்காத வண்ணம் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து அடிமைகளாக்கும் வேலையை இது போன்ற பல்வேறு மத நிறுவனங்களும், என்.ஜி.ஓ.க்களும் செய்து வருகின்றன. வினவு.com
- புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கும்மிடிப் பூண்டி.