திங்கள், 5 ஜனவரி, 2015

ஸ்டாலின் ராஜினாமா ? என்னதான் நடக்கிறது? திமுகவை இன்னொரு அதிமுகவாக மாற்ற ஒற்றை காலில் ...

கட்சியின் பொதுச் செயலர் பதவியை பெறுவதற்காக, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய ராஜினாமா நாடகம், கருணாநிதியின் உறுதியான முடிவால், எடுபடாமல் போய்விட்டது' என, அந்த கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.தி.மு.க., உட்கட்சி தேர்தல் முடிவடைந்து, வரும், 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில், தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உட்பட, கட்சியின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், வரும், 7ம் தேதி, கட்சித் தலைமையிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.;இந்த சூழ்நிலையில், 'தி.மு.க., பொருளாளர் பதவியிலிருந்து ஸ்டாலின் ராஜினாமா' என்ற தகவல், நேற்று காலை வேகமாக பரவியது. இதனால், அவரின் வீட்டை கட்சியினர் முற்றுகையிட்டனர்.


பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், 'நான் ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி வெறும் வதந்தி' எனக்கூறி முடித்தார்.ஆனால், 'ஸ்டாலின் ராஜினாமா என, நேற்று வெளியான தகவல் ஒரு நாடகம். கட்சியின் பொதுச்செயலர் பதவிக்காக போடப்பட்டது. ஆனாலும், கருணாநிதியின் உறுதியான முடிவால், ஸ்டாலின் முயற்சி பலிக்கவில்லை' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூபம் போட்டனர்:இது தொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது, தி.மு.க., வின் பொருளாளராக இருக்கும் ஸ்டாலின், கட்சியில் தன் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க, பொதுச்செயலர் பதவியை பெற வேண்டும் என, நினைத்தார். அவரின் இந்த நினைப்புக்கு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலர், தூபம் போட்டனர்.

ஆசை வார்த்தை: இதையடுத்து, ஸ்டாலி னின் ஏற்பாட்டின் படி, அவரின் தூதர்கள் இருவர், பொதுச்செயலர் அன்பழகனை சந்தித்து, அவரின் ராஜினாமா கடிதத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன், அன்பழகனின் பேரனுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவதாகவும், அன்பழகனுக்கு துணைத் தலைவர் பதவி வழங்குவதாகவும், ஆசை வார்த்தை கூறினர். தூதர்கள் இருவரின் பேச்சில் மயங்காத அன்பழகன், 'கருணாநிதியும், நானும், 43 ஆண்டுகால நண்பர்கள். இன்பம், துன்பம் இரண்டிலும், ஒன்றாகவே பங்கு பெற்று உள்ளோம். பதவியை ராஜினாமா செய்ய கருணாநிதி உத்தரவிட்டால், உடனே விலகி விடுவேன்' எனச் சொல்லி, அவர்களை அதிர வைத்து அனுப்பி உள்ளார்.தூதர்கள் வந்த விவரத்தை, அவர் கருணாநிதியிடமும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும், கடும் எரிச்சல் அடைந்த கருணாநிதி, 'கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கும் உன் ஆதரவாளர்களை நீக்கப் போகிறேன்' என, ஸ்டாலினை கூப்பிட்டு திட்டி உள்ளார்.

ராசாவுக்கு...: இதற்கிடையில், இன்று பிறந்த நாள் கொண்டாட உள்ள, 'கனிமொழிக்கு துணை பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும்' என, ஸ்டாலினிடம் கருணாநிதி தெரிவித்து உள்ளார். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், 'முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு, அப்பதவியை வழங்கலாம்; கனிமொழிக்கு மகளிர் அணி செயலர் பொறுப்பை வழங்கலாம்' என, பதில் அளித்துள்ளார்.இருப்பினும், கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதில், உறுதியாக உள்ள கருணாநிதி, அதுகுறித்து கட்சியின் முன்னணி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

அதே நேரத்தில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்த பேச்சும், கோபாலபுரத்தில் தீவிரமாக நடைபெற்றது. இந்த பேச்சின்படி, நேற்று கருணாநிதியை அழகிரி சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டப்படியே, மதுரையில் இருந்து அழகிரி, நேற்று சென்னை வந்தார்.முட்டுக்கட்டை:ஆனால், கனிமொழிக்கும், அழகிரிக்கும் கட்சியில் அடுத்தடுத்து முக்கியத்துவம் கொடுக்க கருணாநிதி ஆசைப்படுவதை விரும்பாத ஸ்டாலினும், அவரின் குடும்பத்தினரும், அவரின் இணையதள கவனிப்பாளர்களும் சேர்ந்து, கருணாநிதியின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட தீர்மானித்தனர்.அந்த திட்டத்தின் செயல் வடிவமே, பொருளாளர் பதவி மற்றும் இளைஞர் அணி மாநில செயலர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக, நேற்று வெளிவந்த தகவல். இதன் பின்னும், கருணாநிதி அசராததால், 'ராஜினாமா செய்தியை வதந்தி' என அறிவித்து, பரப்பப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

அழகிரி - கனிமொழி இன்று சந்திப்பு? தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் பிறந்த நாளை, மனிதநேய தினமாக, அவரின் ஆதரவாளர்கள் இன்று கொண்டாடுகின்றனர். நேற்று சென்னை வந்துள்ள அழகிரி, இன்று கனிமொழியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார். கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னையில், அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களுடன், நேற்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஒட்டியுள்ள போஸ்டரில், 'தமிழ் இன முதல்வரின் காவிய புதல்வி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.இதை ஸ்டாலின் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. அதனால், அவரின் ஆதரவு மாவட்டச் செயலர் ஒருவரின் உத்தரவுப்படி, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இத்தகவல் அறிந்ததும், கருணாநிதி கடும் கோபம் அடைந்து, அந்த மாவட்டச் செயலரை எச்சரித்துள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: