வியாழன், 8 ஜனவரி, 2015

மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்

பெங்களூரு:ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதி குமாரசுவாமி கோபமடைந்து, அன்பழகன் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது வழக்கறிஞர் மறுத்து விட்டார்.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், நீதிமன்ற பணிகள் துவங்கியது.
தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வழக்கறிஞர் சரவணா: இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, அவர் ஆஜராவதற்கு, தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி: உங்கள் பெயர் என்ன?

வக்கீல்: சரவணா.
நீதிபதி: உச்சநீதிமன்ற உத்தரவை காண்பிக்கவும்.
வழக்கறிஞர் சரவணா: (உச்சநீதிமன்ற உத்தரவை, நீதிபதியிடம் கொடுத்தார்) அரசு வழக்கறிஞர், கர்நாடகா அரசு, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பவானி சிங்கை, தமிழக அரசு, ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர். இது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: கர்நாடகா அரசு, தவறு செய்திருந்தால், அதற்கு எதிராக, வழக்கு தொடருங்கள். என்னிடம் ஏன் வந்தீர்கள்?
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து), உங்களை நியமித்தது யார்?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: தமிழக ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர்.
நீதிபதி: (சரவணாவை பார்த்து) நீங்கள், அரசு வழக்கறிஞரை நியமிக்கப் போகிறீர்களா? இதில் அரசியலை ஏன் கலக்குகிறீர்கள்? இந்த வழக்கின் மனுதாரர் யார்?
வழக்கறிஞர் சரவணா: அன்பழகன்.
நீதிபதி: அவர் எங்குள்ளார். அவரை, ஆஜராக சொல்லுங்கள்

வழக்கறிஞர் சரவணா: அவருக்கு, 92 வயதாகிவிட்டது. இங்கு, அவர் ஆஜராக முடியாது. அவர் தரப்பில், நான் ஆஜராகியுள்ளேன். வழக்கில் வாதிட, பவானி சிங்குக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு மனு செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: மனு செய்ய அனுமதிக்க முடியாது. நீங்கள், செக் ஷனில் (பதிவாளர் அலுவலகத்தில்) மனு செய்யலாம்.
அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கில், எங்களை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனுவை, அன்பழகன் சமர்ப்பித்துள்ளார். உடனே, விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் வருவாரா?
வழக்கறிஞர் நாகேஷ்: அவர், என்ன குற்றம்சாட்டப்பட்டவரா? எதற்காக வர வேண்டும்? அவர் சார்பாக வாதிட நான் வந்துள்ளேன்.
நீதிபதி: எனது அனுபவத்தில், வழக்கு ஒன்றில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, யாரும் கேட்டதில்லை. அரசுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் வழக்கு, இதில், மூன்றாவது பார்ட்டிக்கு, என்ன வேலை?
வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கு, பெங்களூருவில் நடப்பதற்கு காரணமே, உச்சநீதிமன்றத்தில், அன்பழகன் பெற்ற உத்தரவு தான். ஆரம்பத்திலிருந்தே, நீதி கிடைக்க வேண்டும் என்று, போராடி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், மூன்றாவது பார்ட்டியாக ஏற்றுக் கொண்டனர். எனவே, எங்களை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: (பவானி சிங், குமாரை பார்த்து), நீங்கள் எப்போது, பதில் மனு சமர்ப்பிக்கப்போகிறீர்கள்?
அரசு வழக்கறிஞர், ஜெ., வழக்கறிஞர்: 13ம் தேதி, தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: அன்றைய தினம், பதில் மனு தாக்கல் செய்தவுடன், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். தினமலர்.com

கருத்துகள் இல்லை: