வியாழன், 8 ஜனவரி, 2015

விபத்தில் சிக்கிய காரில் கட்டு கட்டாக பணம் : பொதுமக்கள் அள்ளி சென்றனர் தீவிரவாதிகளுக்காக கடத்தி செல்லப்பட்டதா?

கோவை அருகே பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளான காரில் சுமார் ரூ.2.55 கோடி பணம் பதுக்கப்பட்டு இருந்தது. பணக்கட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பணம் தீவிரவாதிகளுக்காக கடத்தப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். கோவை அருகே சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போடிபாளையம் உள்ளது. இந்த ரோட்டில் இன்று காலை இன்னோவா காரும், எதிரே வந்த ஒரு அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த 3 பேரில் டிரைவரும், மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர். காரின் கதவு உடைந்ததில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் வெளியே சிதறி விழுந்தன. இதை பார்த்த பஸ் டிரைவரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து காரை சோதனை செய்த போது, பக்கவாட்டு பகுதி, சீட்டின் அடிப்பகுதி, பின்பகுதியில் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டு இருந்தன. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு போலீசார் தெரிவித்தனர்.


உடனடியாக கோவை வருமான வரி அதிகாரிகள் மனோஜ், பிரசாத், கனகராஜ் ஆகியோர் அங்கு விரைந்தனர். கார் முழுவதும் இருந்த பணத்தை கைப்பற்றினர். மொத்தம் 490 கட்டுகளாக ரூ.2 கோடியே 55 லட்சம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.விபத்தில் காயமின்றி தப்பியவரிடம் விசாரித்தனர். அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாலத்தூரை சேர்ந்த ஜலீல் (40) என்றும், காரில் தன்னுடன் கோட்டயத்தை சேர்ந்த ஜாபர் வந்ததாகவும், கோழிக்கோட்டை சேர்ந்த டிரைவர் யாசர் அபுபக்கர் (25) காரை ஓட்டியதாகவும் தெரிவித்தார். ஈரோட்டில் ரயில்வே கேட்டரிங் நடத்தி வரும் முஸ்தபா என்பவர் இந்த பணத்தை தங்களிடம் கொடுத்தனுப்பியதாகவும், அவரது சொந்த ஊரான மலப்புரத்துக்கு இதை கொண்டு சென்றதாகவும், மொத்தம் எவ்வளவு பணம் என்பது தெரியாது என்றும்அவர் தெரிவித்தார்.

இது ஹவாலா பணமா, அல்லது தீவிரவாதிகளுக்காக கொண்டு செல்லப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். முஸ்தபாவிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் ஈரோடு விரைந்துள்ளனர். பணத்தை அள்ளிய மக்கள்விபத்து நடந்த காரில் பணக்கட்டு சிதறியதை பார்த்த அப்பகுதி மக்களும், பயணிகளும் ஆளாளுக்கு பணத்தை எடுக்க துவங்கினர். தாங்கள் கொண்டு வந்த பைகளிலும், பேண்ட் பாக்கெட், சேலைகளிலும் மறைத்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆயினர். தகவல் காட்டுத் தீ போல் பரவியதும், அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் பலர் படையெடுத்தனர். சிலர் ஆட்டோவில் வந்து பணக்கட்டுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு சென்றதாக போலீசாரிடம் ஜலீல் தெரிவித்தார். எனவே, காரில் கொண்டு வந்த தொகை ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் கார் டிரைவர் யாசர் அபுபக்கர் கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழக-கேரள எல்லையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதேபோல் அங்குள்ள அரசு அலுவலகத்தையும் தீவிரவாதிகள் சூறையாடி அங்குள்ள முக்கிய ஆவணங்களை அழித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கேரள, தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அவற்றையும் மீறி, காரில் பணம் கடத்தி செல்லப்பட்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது தீவிரவாதிகள் பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது - See more at:tamilmurasu.org

கருத்துகள் இல்லை: