புதன், 7 ஜனவரி, 2015

9ஆம் தேதி ‘சென்னை புத்தகக் காட்சி’ தொடங்குகிறது

சென்னை,ஜன.06 (டி.என்.எஸ்) பப்பாசியின் 38வது ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பப்பாசி) தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் ஆகியோர் நேற்று பத்திரியாளர்களிடம் கூறியதாவது:புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி  தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காட்சியைத் துவக்கி வைக்கிறார். அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.30 ஆயிரம் புதிய புத்தகங்கள்: இந்தக் கண்காட்சிக்காகவே பல்வேறு பதிப்பாளர்கள் புதிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் புதிய புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் விற்பனைக்கு வர உள்ளன. கலை, இலக்கியம், விஞ்ஞானம் என அனைத்துப் பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறும்.


வாசகர்களுக்கான வசதிகள்: கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் கண்காட்சிக்கு வந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சென்னை நந்தனம் கல்லூரியில் கார்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து வாசகர்களை இலவசமாகக் கண்காட்சிக்கு வேன்களில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 வேன்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளன.

கண்காட்சியில் ஏடிஎம் வசதியும் செய்து தரப்படும். புத்தகங்களை வாங்கி, அவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல விரும்பாவிட்டால், கூரியர் மூலம் அனுப்பி வைக்கும் வசதியும் உள்ளது. உணவு விடுதி அமைக்கப்படும். கழிப்பறை வசதிகள் உண்டு.

புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. பலர் தினமும் புத்தகக் காட்சிக்கு வருவர். அவர்கள் ரூ.50 கொடுத்து சீசன் டிக்கெட் போல வாங்கிக் கொள்ளும் வசதியும் இந்த முறை செய்துள்ளோம்.

கண்காட்சிக்கு வருபவரின் நுழைவுச் சீட்டுகளில் குலுக்கல் முறையில் தினமும் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும். கண்காட்சியின் பொதுமேடையில் தினமும் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் நடைபெறும்.

குறும்பட அரங்கு அமைத்து, குறும்படப் போட்டிகள் நடத்தப்படுவதுடன், குறும்படங்களும் திரையிடப்படும்.

புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது. மேலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு என்றே அரசு ஒரு நிரந்தர இடத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்  tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: