புதன், 7 ஜனவரி, 2015

செல்வி விடுவிப்பு !கலைஞர் டி.வி ரூ.200 கோடி விவகார CBI நீதிமன்றம்......

கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் சாட்சிகள் பட்டியலில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி விடுவிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தரும் வகையில் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அமலாக்கப்பிரிவு தரப்பில் மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க அனுமதி கோரி ஒரு பட்டியல் தாக்கல் செய்தது. இதன்படி தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை ஒரு சாட்சியாக ஆஜராகுமாறு சி.பி.ஐ தனிநீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதே போல கலைஞர் டி.வி. நிறுவனத்தின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் மற்றொரு சாட்சியமாக சேர்க்கப்பட்டிருந்தார். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் அமலாக்கப்பிரிவு தரப்பு வழக்கறிஞர் என்.கே.மட்டா, செல்வி மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை அரசுத் தரப்பில் சாட்சியமளிக்க சம்மன் அனுப்பியிருந்தாலும் அவர்களை விசாரிக்கத் தேவையில்லை என்றும் அவர்களை சாட்சியங்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, அரசுத்தரப்பு சாட்சியமாக செல்வி மற்றும் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோரை விடுவிக்கலாம் என்றும் மற்ற சாட்சியங்களிடம் விசாரணை தொடரும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், இளைய மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது./tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: