வியாழன், 14 பிப்ரவரி, 2013

Helicopter.. Software பிசினஸ் மூலம் இந்தியர்களுக்கு கைமாறிய லஞ்சம்

 புதுடெல்லி: சாப்ட்வேர் ஏற்றுமதி என்ற வகையில் கணக்கு காட்டப்பட்டு ஹெலிகாப்டர் லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறியிருக்கிறது என்ற பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த ‘பின்மெக்கனிகா’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’. இந்நிறுவனம் ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விஐபிக்களுக்கு இந்நிறுவனத்திடம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய ராணுவம் 2010ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது. இதுவரை 3 ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்யப்பட்டன. மீதி அடுத்த ஆண்டுக்குள் அனுப்பப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில், இந்திய ராணுவத்திடம் இந்த ஆர்டரை பெறுவதற்காக அகஸ்டா நிறுவனம் மோசடி வேலையில் இறங்கியதாகவும் இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாகவும் இத்தாலியில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஓராண்டாக விசாரணை நடந்து வந்த நிலையில், பின்மெக்கனிகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜியூசெப் ஆர்சி நேற்று முன்தினம் இத்தாலியில் கைது செய்யப்பட்டார். ஹெலிகாப்டர் வாங்கும் விவகாரத்தில் இந்தியர்கள் லஞ்சம் வாங்கிய விவகாரம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியின் உறவினர்கள் ஜுலி, டாக்சா, சந்தீப் தியாகி ஆகிய 3 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இன்னொரு போபர்ஸ் ஊழல் என்று வர்ணித்திருக்கும் பா.ஜ. கட்சி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்னையை கிளப்பப்போவதாக கூறியிருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இத்தாலியில் நடந்த வழக்கு விசாரணை மற்றும் கோர்ட் ஆவணங்களில் இருந்து ஹெலிகாப்டர் ஊழல் பற்றி மேலும் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக சாப்ட்வேர் ஏற்றுமதி நடக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சாப்ட்வேர் ஏற்றுமதிக்கான செட்டில்மென்ட் என்ற பெயரில் இந்த லஞ்ச பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இதற்கான கமிஷன் தொகைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சில அரசு அதிகாரிகளுக்கு ஐடிஎஸ் துனிசியா, ஐடிஎஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மூலமாக லஞ்ச பணம் கைமாறியிருக்கிறது. சராசரியாக மாதம்தோறும் ரூ.3.72 கோடி பணம் எந்த வரியும் செலுத்தப்படாமல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இத்தாலி கோர்ட் ஆவணங்கள் மற்றும் வழக்கு விசாரணை மூலம் தெரியவருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: