வியாழன், 14 பிப்ரவரி, 2013

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

vinavu.com  நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது.
“குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான்.
“ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது.
எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள்.
அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது.

கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன.
மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன்.
சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று.
கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.
அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார்.
ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான்.
அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார்.
உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார்.
கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி.
இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல.
தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?”
‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம்.
கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.
எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார்.
கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை.
கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள்.
இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும்.
இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார்.
ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம்.
ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.
அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம்.
இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன்.
தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன்.
“ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது.
என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.
“சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை.
“முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும்.
முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன.
“கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது,
“ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
“ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்”
ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன். நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை.
“இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார்.
“அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம்.
“அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார்.
“அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.
“உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார்.
“ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?”
“குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?”
“ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!”
ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு.
“குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன்.
இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது.
ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது.
இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது.
-மாடசாமி

கருத்துகள் இல்லை: