புதன், 13 பிப்ரவரி, 2013

நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்

சென்ற ஞாயிறு அன்று காட்டப்பட்ட நீயா, நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.

http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&list=ELCGfx6tAff04&index=46

கல்லூரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள் ஒருபக்கம். பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசியல்வாதி(கள்) மறுபக்கம். இன்றைய மாணவர்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர், அவர்களுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான விவாதம்.

இளைய மாணவர்கள் யாரும் ஆழமான புரிதலைக் காண்பிக்கவில்லை. இதில் வியப்பு ஏதும் இல்லை. மாணவர்களின் பேச்சிலிருந்து கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்தன.
  1. அவர்கள் தமிழ் தினசரி, வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை.
  2. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள் எவற்றையும் படிப்பதில்லை. தமிழ் எம்.ஏ படிக்கும் ஒரு மாணவர் மு.வரதராசனார் தாண்டி யாரையும் சொல்லவில்லை.
  3. இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவோர்கூட அதுகுறித்த தாழ்வு மனப்பான்மையையே கொண்டிருக்கிறார்கள்.
  4. அரசியல் என்றால் சாக்கடை என்ற பொதுவான கருத்து அவர்களிடம் நிலவுகிறது.
  5. தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதாக்கும் விஷயங்களைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
  6. அடிப்படை விஷயங்கள் தெரியாத காரணத்தால் கொஞ்சம் தீவிரமாகக் கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது என்று பின்வாங்கிவிடுகின்றனர்.
  7. அரசியல் தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை, அல்லது அவர்களுக்கு எந்தக் கருத்துமே இல்லை.
மறுபக்கம் களப்பணியாளர்கள் மிகவும் அதீதமான முகபாவங்களைக் காட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு சில களப்பணியாளர்களாவது, தாம்தாம் மாணவர்களிடம் சென்று சேராமல் ஒரு சிறு குழுவாக இருந்துவிட்டோமோ என்ற தம் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

களப்பணியாளர்களாக அங்கு வந்திருந்த அனைவருமே திராவிட அல்லது இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள். பிற களப்பணியாளர்களே தமிழகத்தில் ஒருவேளை இல்லை போலிருக்கிறது. எனவே இவர்கள் அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கருத்துகள்தான் நிலவின.

இளைஞர்கள் எம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த பரிந்துரை கீழே:
இளைஞர்கள் எம்மாதிரியான புரிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த அறிவுரைகள் இதோ:
  1. பல இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுச்சாலை, இப்போது தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களாவது அது பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.
  2. சாலையோரக் கழிப்பறைகள், பெண்கள் எவ்வாறு இதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  3. மேற்குத் தமிழகத்தில் பல இடங்களில் இரண்டு டம்ளர்கள் அல்ல, நான்கு டம்ளர்கள்வரை டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
  4. வீட்டின் பக்கத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். உதாரணமாக வட சென்னைக்குச் செல்லுங்கள்.
  5. அரசு மருத்துவமனை சென்று பாருங்கள்.
  6. (அரசியல்ரீதியாக) உங்கள் சுயசரிதையை எழுதுங்கள்.
இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பான என் கருத்துகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை: