அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்
தமிழகத்தின் பல்வேறு சிறுதொழில்களின் உற்பத்தியும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும் அடியோடு முடங்கிப் போயுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வேலையிழந்துள்ளனர். மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தினமும் 12 மணிநேர மின்தடையால் அச்சுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தினமும் 15 கோடி ரூபா அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டறைகளுக்குப் பூட்டு போட்டு சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை என்கின்றனர், நவீன விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர். கோவை – திருப்பூர் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 மணிநேர மின்வெட்டினால் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், என்ஜினியரிங் ஆலைகள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கிறார்கள். 3 ஷிப்ட்டுக்குப் பதிலாக ஒரு ஷிப்ட்டில்தான் ஆலைகள் இயங்குவதாகவும், உற்பத்தி பாதிப்பால் தமிழகம் ஜவுளிச் சந்தையை இழந்து நிற்கிறது என்றும் புலம்புகிறார்,தென்னிந்திய மில் உரிமையாளர் சங்கத் தலைவர்.
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சார சப்ளை ஒரு மணி நேரம்தான் கிடைப்பதால் தண்ணீர் இறைக்க முடியாமல் சம்பா பயிருக்கு நாற்று விடக்கூட முடியவில்லை. கருகும் பயிர்களைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மின்விசிறி இல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் தீக்காயமடைந்தோரும் வேதனையில் துடிக்கிறார்கள். பிணவறைகளுக்கு மின்சாரம் இல்லாமல் துர்நாற்றம் தெருவரை வீசுகிறது. விவசாயம் செய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு, சிறுதொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நட்டம், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, குழந்தைகளும் முதியோரும் நோயாளிகளும் தூக்கமின்மையாலும் கொசுக்கடியாலும் பாதிப்பு – என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெயா அரசு, மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் மக்கள் மீதும் போலீசை ஏவி ஒடுக்கும் பேயாட்சியாக மாறிவிட்டது.
கடும் மின்வெட்டால் விவசாயம் அழிந்து உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவிய போதிலும், அரசாங்கமோ பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஷாப்பிங் மால்களுக்கும் வாசல் முதல் கழிப்பறை வரை தடையில்லா மின்சாரத்தை அள்ளி வழங்குகிறது. கரண்டு தர முடியாத கையாலாகாத அரசு என்று சாடும் மக்கள், இந்த நிலை தொடர்ந்தால் இனி ஊரெங்கும் கஞ்சித் தொட்டி திறக்க வேண்டியதாகிவிடும் என்கின்றனர்.
ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டைப் போக்குவேன் என்று வாக்குறுதி தந்த ஜெயா ஆட்சியில், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய முடியவில்லை. ஜெயா ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தின் மின் உற்பத்தி 2300 மெகாவாட் குறைந்ததுதான் மிச்சம். மின்சாரம் எப்போது வரும் , மின்தடை எப்போது நீங்கும் என்பதற்கு எவ்விதமான பொறுப்பான பதிலும் அரசிடம் இல்லை. மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, எடுக்கப் போகிறது என்பது சிறீரங்க நாயகிக்கே வெளிச்சம்.
கோவையைச்
சேர்ந்த சிறுதொழில் அதிபர்கள் – தொழிலாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து
மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்
அன்று கருணாநிதி ஆட்சியின் போது, மின்வெட்டுத்துறை அமைச்சர் என்று ஆற்காடு வீராசாமிக்குப் பெயர் சூட்டி, ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையும் ஊழலும்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதாக பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன ஊடகங்கள், இன்று அதைவிடக் கேவலமான நிலைமை ஜெயா ஆட்சியில் தொடர்ந்த போதிலும் வாமூடிக் கிடக்கின்றன. மின்சார வாரியத்தில் பெரிய தொழிற்சங்கமாக உள்ள போலிகம்யூனிஸ்டுகள்,ஜெயா அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அம்பலப்படுத்திப் போராட முன்வராமல் ஒதுங்கி நிற்கின்றனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டில் 7 மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்து, மின் உற்பத்தியைத் துவக்கலாம் என்ற அனுமதியைத் தரவேண்டிய நேரத்தில் ஆட்சி மாறியது. தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் என்பதால், மொத்தத்தில் 7,798 மெகாவாட் கிடைக்கும் இத்திட்டங்களை விரைவுபடுத்த ஜெயா ஆட்சியில் முறையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் பயனுக்கு வராமல் உள்ளன. மறுபுறம், தமிழகத்தில் புதிய மின்நிலையங்களை உருவாக்கும் திட்டமோ, குறுகிய கால புதிய மின் திட்டங்களோ எதுவும் அரசிடம் இல்லை. முன்பு கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட மின்திட்டங்கள் நிறைவேறினால்தான் ஓரளவுக்காவது மின்சாரம் கிடைக்கும் என்ற நிலைமைதான் உள்ளது.
காற்றாலை மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் அதற்கான கிரிட் இல்லை என்றும் கூறி, அந்த மின் உற்பத்தியையே அரசு நிறுத்தி விட்டது. காற்றாலைகளை மூடிவிடுமாறு தங்களுக்கு அரசு அறிவித்துள்ளதாகக் காற்றாலை முதலாளிகளே பேட்டியளிக்கின்றனர்.
தமிழகத்தில் நி0லவும் மின்பற்றாக்குறை காரணமாக பிற மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் மின் வாரியத்துக்கு நட்டம் ஏற்பட்ட போதிலும், அந்த நட்டத்தை ஓரளவு மாநில அரசு ஏற்கும் என்று சோல்லி தமிழகத்தின் மின்பற்றாக்குறையைத் தீர்க்க முனைந்தது முந்தைய தி.மு.க. அரசு. தனியார்மயம் என்ற போதிலும் தற்போதைய நெருக்கடியான நிலைமையில் அதைக்கூட செயல்படுத்த ஜெயா அரசு முனையவில்லை.
விழுப்புரம்
மாவட்டத்தில் புதுவை எல்லையருகே அமைந்துள்ள கோட்டைக்குப்பம் கிராம மக்கள்
மின்வெட்டைக் கண்டித்து நடத்திய சாலைமறியல் போராட்டதைக் கலைக்க போலீசு
நடத்திய தடியடி
தொகுப்பாகக் கூறினால், ஜெயா ஆட்சியில் இன்று எந்த நிர்வாகமும் இல்லாமல் போனதே மின்வெட்டு தீவிரமானதற்குக் காரணமாகும். மின் பகிர்மானம் ஒருதலைப்பட்சமாக இருப்பதாலேயே தமிழகத்தின் பிற பகுதிகள் இருளில் தவிக்கின்றன. இருப்பினும், நிர்வாகச் சூரப்புலி என்று ஒரு பிம்பத்தை ஊடகங்கள், பிழைப்புவாதிகள் மூலம் உருவாக்கிக் கொண்டு, அதை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு முயற்சியும் ஜெயா அரசிடமில்லை. சென்னையிலும் மின்வெட்டு அதிகமானால் ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட நேரிடும் என்பதால், சென்னையில் மட்டும் ஓரிரு மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டைக் காட்டி, இதேபோலத்தான் தமிழகமும் இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ஜெயா அரசு ஏத்து வருகிறது.
மின்வெட்டுக்கு எதிராகத் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகப் போராடிவரும் மக்கள், தமிழகத்தை இருளில் தள்ளி தண்டித்துவரும் கேடுகெட்ட ஜெயா ஆட்சிக்கு உரிய தண்டனையை வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக