புதன், 10 அக்டோபர், 2012

மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு?

www.vinavu.com
மருந்து-கம்பெனிபன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது…? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்

    “டாக்டர் ஆகனும் நாட்டுக்காக சேவை செய்யனும் அதுதான் என் லட்சியம்” பத்தாம் வகுப்பு வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்ததும் தமிழக பத்திரிகைகளில் மாணவர்களின் புகைப்படங்களுடன் இது போன்ற செய்திகள் வரும். அடுத்த வருடம் அதே செய்தி வேறு மாணவர்களின் புகைப்படத்துடன் வரும். இவர்கள் அனைவருமே மருத்துவர்களாகிவிடுகிறார்களா ?
    எனது நண்பனும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இப்படித்தான் சொன்னான். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் சீட் கிடைக்கவில்லை. வழியின்றி எம்.எஸ்.சி. மைக்ரோபையாலஜி படித்தான். வேலை தேடி அலைந்தபோது, சரியான வேலை கிடைக்காததால் மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) ஆனான். அது சென்னை நிறுவனம். மாதம் பத்தாயிரம் சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில், இன்சென்டிவ் என சுகமான வாழ்க்கை அவன் விரும்பிய மருத்துவ துறையிலேயே கிடைத்தது.
    ஓரிரு ஆண்டுகளில் பதவி உயர்வுடன் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான். மாதச்சம்பளம் பதினெட்டாயிரம், புது வண்டி, புளூ பேன்ட், புளூ ஷர்ட், புளூ டை, ஷூ என்று அவன் வீட்டிலிருந்து வெளியே வரும்
    ஒவ்வொரு நாளும் எனக்கு பொறாமையாக இருக்கும்.   விரைவில் தனது கல்விக்கான கடனைக்கூட அடைத்துவிட்டான். இப்போது வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். நான் இன்னும் அதே ஓட்டை வண்டியில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் அனைவருமே அவனை பாராட்டுவார்கள்.
    அவன் பணிபுரியும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, அந்த மருந்து கம்பெனியில் மொத்தம் ஐம்பது வகையான மருந்துகளை விற்கிறார்கள். இவனுடைய பிரிவின் கீழ் மட்டும் பதினெட்டு வகை மருந்துகள். காலையிலும் மாலையிலும் வெவ்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து, தனது கம்பெனி மருந்துகளை அறிமுகப்படுத்தி அவை என்னென்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தும் என்பதை மருத்துவர்களுக்கு கூறுவான். அதன் பிறகு சில சந்திப்புகளில் மருத்துவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டதும் சில இலவச மருந்துகளை கொடுத்து டிரை பன்னி பாருங்க சார் ரிசல்ட் நல்லா இருக்கும் என்று சில மருந்துகளை இலவசமாக கொடுப்பான்.
    மருந்து-கம்பெனி-3மருத்துவர்களும் அவற்றை சிலருக்கு இலவசமாக வழங்குவார்கள். அந்த மருந்து அட்டைகளில் விலை அச்சிடப்பட்டிருக்காது. இலவச மருந்துகள் வேலை செய்கிறதா ? என்பதை அறிந்துகொண்ட பிறகு, மருத்துவர் அதை பரிந்துரைப்பார். அத்துடன் தனது மருத்துவகத்திற்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளில் அந்த குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி வைக்கச் சொல்லிவிடுவார். உடனே இவன் அந்த கடையை அணுகி டாக்டர் இந்த மருந்துகளை பரிந்துரைக்கத் துவங்கிவிட்டார். அவை எங்களுடைய கம்பெனி மருந்துகள் தான் உங்களுக்கு இந்த மருந்தில் இத்தனை சதம் கமிஷன், எவ்வளவு வேண்டும் என்று ஆர்டர் எடுத்துக்கொள்வான். அத்துடன் நமது நண்பன் கம்பெனி கொடுக்கும் சிறு சிறு அன்பளிப்புகளை உடனுக்குடன் டாக்டரிடம் வழங்கி தனது நிறுவன மருந்துகளையும் நினைவில் நிறுத்துவான்.
    நீங்கள் செல்லும் மருத்துவமனைகளில் பார்க்கலாம். பேப்பர் வெயிட் இருக்கும். உள்ளே ஒரு மாத்திரையின் பெயர் இருக்கும். உடற்கூறு படம், டார்ச் லைட், எடைபோடும் இயந்திரம், முட்டியைத் தட்டிப் பார்க்கும் கருவி, பிரசர் செக் கருவி என அனைத்தும் இருக்கும். அனைத்திலும் பலவகையான விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் மருத்துவர்களுக்கு மருந்து கம்பெனிகள் தான் வழங்குகின்றன.
    இப்படி எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இவன் அறிமுகம் செய்த மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர் திடீரென்று அவற்றை குறைத்துக் கொண்டாலோ, அல்லது வேண்டுமென்றே வேறு மருந்துகளை பரிந்துரைத்தாலோ நண்பன் உடனே தனது மேனேஜரை அழைத்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பான்.
    சில புதிய ஆஃபர்கள் வந்திருப்பது போல பேசி மீண்டும் தனது மருந்துகளையே பரிந்துரைக்க வைப்பான். அதற்காக தான் மேனேஜரை உடன் அழைத்துச் செல்கிறான். அவர் இப்போது தூண்டிலில் சில பெரிய புழுக்களை போடுவார். மருத்துவரை மொத்தமாக அமுக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களையும், FAMILY TOUR கூப்பன்களையும் வழங்குவார். அவை உள்நாடு வெளிநாடு என்று பேரத்தை பொருத்து அமையும். மருத்துவர் அதற்கும் அடங்கவில்லை என்றால் நேரடியாக பணம் வெட்டப்படும் !
    சூளைமேட்டில் ஒரு மருத்துவர், மனைவி நகைகளை எல்லாம் விற்று கடன்பட்டு புதிதாக ஒரு மருத்துவமனை கட்டியிருக்கிறார். இவரைப் போன்ற சிலர் கடனைக் கட்ட வேண்டும் என்ன செய்வது ? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இலவச மருந்துகள் வேண்டாம், பொருட்களும் வேண்டாம் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறோம் என்று ஒவ்வொரு கம்பெனியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள். அவை அனைத்தும் மிகப்பெரிய மருந்து கம்பெனிகள்.
    டயாபடீஸ் ஸ்பெசலிஸ்டா ?
    வருசத்துக்கு பத்து லட்சத்துக்கு பரிந்துரைத்தால் எனக்கு எத்தனை சதவீதம் ?
    என துறை வாரியாக சதவீத கணக்கில் பேரம் பேசி பரிந்துரை செய்கிறார்கள்.
    எனக்கு தெரிந்து தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை துவங்கி நள்ளிரவு வரை கீழ்தளத்தில் விருந்துகள் நடைபெறும். DOCTOR’S CONFERENCE என்கிற பெயரில் நடத்தப்படும் சோரம் போகும் இந்த விழாவில் பேருக்கு சில மருத்துவர்களை பேச சொல்வார்கள். பிறகு தான் உண்மையான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் துவங்கும் ! அந்த மருந்து கம்பெனியின் மூத்த அதிகாரிகள் பேசுவார்கள். பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வண்ண வண்ண மது வகைகள் விருந்தளிக்கப்படும். அதன் பிறகு உணவு வகைகள் பரிமாறப்படும். இந்த கூட்டங்களுக்கு பெண் மருத்துவர்களும் வருவதுண்டு. ஒவ்வொரு கூட்டங்களிலும் மருத்துவர்கள் போதை அதிகமாகி சரிந்து விழுவது நடக்கும்.
    கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விசயம் இங்கு வரும் மருத்துவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் வருவது இல்லை.இவர்களை அழைத்து வருவதற்காக விலையுயர்ந்த தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன. மாலை கூட்டம் துவங்கியது முதல் நள்ளிரவு வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் மெடிக்கல் ரெப்புகள் செய்வார்கள். கவனிப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இது போன்ற சிறப்பு கவனிப்புகள் குறிப்பிட்டவகை ஸ்பெஷலிஸ்டுகளுக்கு மட்டும் தான்.
    கம்பெனிகளுக்கு மிகவும் அதிக வருமானம் ஈட்டித் தரும் மருத்துவர்களையும், பிரபல மருத்துவர்களையும் கவனிக்கும் விதமே வேறு. இவர்களுக்கான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் அயல்நாடுகளில்தான் நடக்கும். அதிலும் மது, மாது, உணவு என சகல சௌபாக்கியங்களும் உண்டு. அதே நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு இல்லை. எனினும் ஏதோ ஒரு வகையில் அனைத்து மருத்துவர்களும் மருந்து கம்பெனிகளிடமிருந்து எதையாவது பெறுகிறார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் மிகப்பெரும்பான்மையினர் இப்படி தான் உள்ளனர்.
    மருந்து-கம்பெனிஅடுத்து ஒரு குறிப்பிட்ட மருந்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்துவிட்டால், அதற்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை, அதை விற்றாக வேண்டும். மருந்துகளை மொத்தமாக விற்கும் விற்பனையாளர்களையும், மருந்து கடைக்காரர்களையும் அணுகி வழக்கமா கொடுக்கிற கமிஷனை விட அதிகமா தர்றோம், கூடவே இலவச மருந்துகளையும் தருகிறோம் என்று பேசி அந்த குறிப்பிட்ட வகை மருந்துகளை தள்ளிவிடுகின்றனர்.
    இன்னொரு முக்கியமான விசயம். மருத்துவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படும் இலவச மருந்துகளை குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க முடியும். மீதம் உள்ளதை என்ன செய்கிறார்கள் ? இங்கே தான் ராதாகிருஷ்ணன் வருகிறான். ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் ராதாகிருஷ்ணன் விலை அச்சிடப்படாத இந்த இலவச மருந்துகளை மொத்தமாக அள்ளிச் செல்கிறான் !
    பத்து ரூபாய் மருந்துக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசா தருகிறான். இந்த கழிவு விலையில் மெடிக்கல் ரெப்புகள் தமது அறைகளில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து மருந்துகளையும் ராதாகிருஷ்ணன் வரும் ஒரு நல்ல நாளில் விற்றுவிடுவார்கள். அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்வது தான் ராதாகிருஷ்ணனின் வேலை. அதன் பிறகு அவை எந்த மாநிலத்து ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது தெரியவில்லை !
    அரசு நிறுவனங்களால் ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே மாத்திரைகள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களால் ஏழு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்நாட்டில் அதிகபட்சமாக 8,800 ரூபாய்க்கு தயாரிப்பட்ட மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தைக்குள் நுழைந்த பிறகு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.
    ♦♦♦♦
    நானும் உழைச்சு தான் சாப்பிடுகிறேன் என்கிறார்கள் மெடிக்கல் ரெப்புகள் ! மருத்துவர்களுக்கு நடப்பதை போலவே இவர்களுக்கும் மாதா மாதம் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் மருத்துவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வீழத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி உரைகளுக்கு பிறகு இவர்களை உற்சாகப்படுத்த உற்சாக பானங்களும், உணவும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
    பன்னாட்டு நிறுவனங்களுக்காக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் இப்படித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் மருந்துச் சீட்டு எழுதும் போது நோயாளியின் நோயைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்வதற்குப் பதில் தனக்கு கிடைக்கும் பரிசு, சலுகைகளை நினைத்தவாறு எழுதுகிறார்கள்.
    பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை இப்படித்தான் இயங்குகிறது. முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் தொழில் அறம் என்பது இதுதானே?
    மேலும் படிக்க

    கருத்துகள் இல்லை: