வியாழன், 11 அக்டோபர், 2012

புரோக்கர் தப்பியோட்டம்! இலங்கையரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறிய

Viruvirupu
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக திருச்சி புரோக்கர் ஒருவர் கூறி அழைத்துச் சென்ற 55 இலங்கையர், தமிழகம், எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளியம்மன் கோயிலில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் நூறு பேர் படகு மூலம் விளாத்திகுளம் கடல் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், இதற்காக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் தங்கி இருப்பதாகவும் தமிழக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்தலக்கரை வந்த இவர்கள், காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் போல அங்கு தங்கினர். அங்கிருந்து கலைக்குட்டம் செல்வதற்கு எட்டயபுரத்தில் வேன் வாடகை பேசியபோது, இவர்கள் மீது சந்தேகமடைந்த வேன் டிரைவர்கள் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததையடுத்து, கோவில்பட்டி டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது, சுமார் 100 பேர் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளியம்மன் கோயிலில் தங்கியுள்ளது தெரியவந்தது. போலீசார் அங்கு வருவதை அறிந்ததும் 40 பேர் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சியிருந்த 20க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 55 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, இவர்கள் அனைவரையும் திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த புரோக்கர் ரமணன் என்பர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, ஒருவருக்கு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்டு அங்கு கொண்டுவந்தது தெரியவந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள கலைக்குட்டம் கடற்கரை கிராமம் சென்று அங்கிருந்து படகு மூலம் கேரளா வழியாக ஆஸ்திரேலியா செல்வதுதான் திட்டமாக இருந்தது.
இவர்கள் போலீஸில் சிக்கியதை அறிந்த புரோக்கர் ரமணன், மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தப்பி சென்று விட்டார். தப்பியோடும் அவசரத்தில் தனது மற்றொரு குழந்தையை விட்டு சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: