திங்கள், 8 அக்டோபர், 2012

ஜெயலலிதாவை கோபத்தில் ஆழ்த்திய சொறி, சிரங்கு படை, தேமல் அணி

சி.வி.சண்முகத்திற்கு வேட்டு வைத்த 'அண்ணன்' ராதாகிருஷ்ணன் மற்றும் 'சொறி, சிரங்கு, தேமல்' சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதற்குப் பின்னணியில் இது உள்ளது, அது உள்ளது என்று பல காரணங்களைக் கூறி வந்தாலும், இதுதான் காரணம் என்று புதிய காரணம் என்று கச்சைக் கட்டி கிளம்பியுள்ளது.
அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் சி.வி.சண்முகம். மூத்த அமைச்சரும் கூட. விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவுக்கு கடும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் இவரே. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான கொலை வழக்கு வலுவாக இருப்பதற்கும் சண்முகமே மூல காரணம். சண்முகத்தை வைத்துத்தான் பாமகவுக்கு அங்கு குடைச்சல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.
ஆனால் அப்படிப்பட்ட சண்முகத்தையே இப்போது தூக்கி அடித்து விட்டார்
ஜெயலலிதா. இதுதான் கட்சி வட்டாரத்தில் இப்போது பரபரப்பான செய்தி. ஜெயக்குமார் சபாநாயகர் பதவியிலிருந்து போனது ஒரு அதிர்ச்சி என்றால், சண்முகம் போனது இன்னொரு அதிர்ச்சி.
சி.வி.எஸ்ஸுக்கு வந்த முதல் சிக்கல்
சண்முகம் பதவி பறி போக பரபரப்புக் காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் சிஸ்டத்தை நவீனப்படுத்துவதற்காக ரூ. 350 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. இதனை அரசு நிறுவனமான எல்காட்டின் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டது.
எந்தத் தனியார் நிறுவனம் என்ற பேச்சு வந்தபோது, சி.வி.சண்முகம் ஒரு நிறுவனத்தை சிபாரிசு செய்து அதற்கே ஆர்டர் கிடைக்குமாறு செய்யுமாறு கூறினாராம். இதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சண்முகம்,அதிகாரிகளை திட்டித் தீர்த்து விட்டாராம்.
இதனால் வெகுண்ட அதிகாரிகள் உடனடியாக முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளரிடம் போய் புகார் கூறி விட்டனர். அவரும் உடனடியாக முதல்வரின் பார்வைக்கு இதைக் கொண்டு சென்று விட்டாராம். இது சி.வி.சண்முகம் மீது விழுந்த முதல் கரும் புள்ளியாகும்.
2வது சிக்கல்
அடுத்த சிக்கல் ராதாகிருஷ்ணன் மூலம் வந்தது. ராதாகிருஷ்ணன் வேறு யாருமல்ல, சண்முகத்தின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். ராதாகிருஷ்ணனின் நெருங்கிய நணபரான சுதாகர் என்பவர்தான், சண்முகத்திடம் சீனியர் பிஏவாக உள்ளார்.
சண்முகம் சார்பில் பல வேலைகளை சுதாகரும், ராதாகிருஷ்ணனும் இணைந்துதான் செய்து வந்தனராம். பண பேரம் உள்ளிட்ட பலவற்றையும் இவர்கள்தான் செய்து வந்தனராம். பணம் தர மறுப்பவர்களை மிரட்டுவது, ரெய்டு வரும் என்று பயமுறுத்துவது என சகலவிதமான கட்டப் பஞ்சாயத்துக்களையும் செய்து வந்தனராம் இந்த இருவரும். இவர்களால் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேக்ஸ் மூலம் அனைத்து விவரங்களையும் போட்டுக் கொடுத்து விட்டனர்.
ராதாகிருஷ்ணன் தன்னை ஒரு அமைச்சர் போலவே நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தாராம் விழுப்புரம் மாவட்டத்தில். சணமுகத்தை யார் அணுகினாலும் அவர் அண்ணனைப் போய்ப் பாருங்க என்றுதான் சொல்வாராம்.
ராதாகிருஷ்ணனிடம் போய் விட்டாலே பணத்தைப் பற்றித்தான் பேசுவாராம். கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி பணம் இருந்தால்தான் வேலை நடக்குமாம். கட்சிக்காரர்கள் வந்து எந்த உதவி கேட்டு வந்தாலும் செய்ய மாட்டாராம் சண்முகம்.
3வது பெரும் சிக்கல்
அடுத்த சிக்கல்தான் மிகப் பெரியது. அதாவது முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரிடம், சி.வி.சண்முகம் காட்டிய அலாதிப் பாசம் மற்றும் தீவிர ஆதரவு. இதுதான் ஜெயக்குமாரையும், சி.வி.சண்முகத்தையும் அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்ப முக்கியக் காரணம் என்கிறார்கள்.
அதாவது ஜெயக்குமாரின் பிறந்தநாளுக்காக பெரிய அளவில் வசூல் வேட்டை நடந்தது தெரிந்ததுதான். அதில் சண்முகமும் தன் பங்குக்கு பெரிய அளவில் வசூல் வேட்டையில் குதித்தாராம்.
வணிகவரித்துறை உயர் அதிகாரிகளைத் தானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தனை லட்சம் வேண்டும் என்று பச்சையாகவே கூறி வசூல் வேட்டைக்கு முயன்றாராம். ஆனால் அதிகாரிகள் முடியாது என்று கூறியுள்ளனர். அத்தோடு நிற்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் இதைக் கொண்டு போய் விட்டனர்.
4வது சிக்கல்
அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் என்.ஆர்.சிவபதிக்கு எதிராக சமீபத்தில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. இதனால் சிவபதி குழம்பிப் போய் விட்டார். முதல்வர் பார்வைக்கும் இது போனது. அவர் சிவபதியை அழைத்து விசாரிக்க சிவபதி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து சிவபதியிடமே என்ன ஏது என்று விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
அவர் விசாரித்தபோதுதான் அந்த போஸ்டரின் பின்னணியில் சி.வி.சண்முகம் இருந்தது தெரிய வந்ததாம். அதாவது சி.வி.சண்முகத்திடம், டிரைவரும், அவரது நெருங்கிய நண்பருமான எத்திராஜ் என்பவர்தான் இந்த போஸ்டர் அவதூறுக்குக் காரணம் என்று தெரிய வந்ததாம். இதை உளவுப் பிரிவு போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து 'அம்மா'வுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பி வைத்து விட்டார் சி.வி.சண்முகம்.
ஜெ.வை டென்ஷனாக்கிய மாபெரும் 5வது சிக்கல்
இத்தனை புகார்களையும் கையில் வைத்துக் கொண்டு காத்திருந்த முதல்வரிடம், சி.வி.சண்முகத்தின் ஒரு பேச்சு குறித்த புகார் போனபோதுதான் ஜெயலலிதா வெகுண்டு போய் விட்டாராம்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். இவர்கள் தமிழகம் முழுக்கச் சுற்றி கட்சியினரை சந்தித்து வருகின்றனர். இதில் சி.வி.சண்முகத்திற்கு இடம் தரப்படவில்லை. இதனால் கடுப்பாகிப் போன இவர், இந்த குழு குறித்து சொறி, சிரங்கு படை, தேமல் அணி என்று கட்சியினரிடம் நக்கலடித்துப் பேசியுள்ளார். இதுதான் ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி விட்டதாம்.
அமுக்குணி என்று நினைத்திருந்த சி.வி.சண்முகம் மீது இப்படி அடுக்கடுக்காக புகார்கள் வந்ததால்தான் மொத்தமாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார் ஜெயலலிதா என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: