புதன், 10 அக்டோபர், 2012

கர்நாடக முதல்வரைப் பார்க்க மறுத்த பிரதமர்

 Pm Coldshoulders Shettar Over Cauve 2 நாளாக காத்திருந்து ஏமாந்தார் ஷெட்டர்!

டெல்லி வந்திருந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் 2 நாட்களாக கடுமையாக முயற்சித்தும் அவரைப் பார்க்க மறுத்து விட்டாராம் பிரதமர் மன்மோகன் சிங். தனது உத்தரவையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மதிக்காமல் தன்னிச்சையாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தியதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஷெட்டரைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2 நாட்களாக பிரதமரைப் பார்க்க கடுமையாக முயற்சித்தும் ஷெட்டரால் முடியவில்லை. இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஷெட்டர் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
காவிரிப் பிரச்சினையை தற்போது கர்நாடகத்தில மோசமான அரசியல் பிரச்சினையாக்கி விட்டனர். அங்கு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலும், வாக்குகளைக் கவரும் வகையிலும் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி அரசியல் செய்து வருகின்றன. நல்ல பெயரைத் தட்டிச் செல்வது யார் என்பதில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
விவசாயிகள், பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வகையில் அங்குள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடகா திடீரென நிறுத்தி விட்டது. இதனால் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளாராம். இந்தப் பின்னணியில் கடந்த 3 நாட்களாக டெல்லியிலேய முகாமிட்டிருந்தார் ஷெட்டர். அப்போது பிரதமரை நேரில் சந்தித்து தங்களது நிலையை விளக்க அவர் திட்டமிட்டார். ஆனால் பிரதமர் அலுவலகத்திலிரு்நது அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. பிரதமர் பிசியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் பிரதமர், ஷெட்டரை சந்திக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது பெரும் சட்டச் சிக்கலை நோக்கி காவிரிப் பிரச்சினையை கர்நாடகா கொண்டு சென்று விட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடரப் போகும் அவமதிப்பு வழக்கில் மிகக் கடுமையான கண்டனத்தை கர்நாடக அரசு பெறப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில்,தான் அடுத்தடுத்து ஷெட்டரை சந்தித்தால், அது தேவையில்லாத பல்வேறு சிக்கல்களை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும், அரசியல் சாயம் பூசப்படும் என்பதால்தான் ஷெட்டரை சந்திக்க அஞ்சுகிறாராம் மன்மோகன்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு ஏற்படும் வரை காவிரி பாசன மாநில முதல்வர்கள் யாரையும் சந்திப்பதில்லை என்ற முடிவையும் மன்மோகன் சிங் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்பதை நேற்று ஷெட்டரே உறுதிப்படுத்தினார். நேற்று இரவு அவர் பெங்களூர் கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமரை சந்தித்து நிலையை விளக்க முற்பட்டேன். ஆனால் எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. பெங்களூரில் பல வேலைகள் காத்துள்ளதால் நான் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்றார்.
இதற்கிடையே, ஷெட்டருக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததற்கு கர்நாடக பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் செயலைக் கண்டித்து பிரதமர் அலுவலகம் முன்பு ஷெட்டர் தர்ணா நடத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும் தன்னிலை விளக்க அறிக்கை போல ஒரு கடிதத்தை பிரதமருக்கு ஷெட்டர் அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். அதை ஏற்று ஷெட்டரும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதத்தின் வாயிலாகவே அவர் காவிரி நீர் ஆணைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அவதூறு வழக்கை சந்திக்கத் தயார் - ஷெட்டர்
இதற்கிடையே தமிழக அரசு தொடரும் அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்ட வரைமுறைக்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்து வருகிறோம். தண்ணீரை நிறுத்துவது என்பதும் கூட சட்டப்படியான முடிவுதான்.
இதற்கு மேலும் தண்ணீரைத் திறந்து விட வாய்ப்பே இல்லை என்று கோர்ட்டிலும் தெரிவித்து விட்டோம். தமிழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டால் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: