புதன், 27 ஜூன், 2012

இனி எங்களுக்கு அமெரிக்கா வேண்டாம்... கனடா அதிரடி

டோரன்டோ கனடாவில் அமெரிக்காவுக்கு எதிராக புதிய பிரளயம் கிளம்பியுள்ளது. இதுவரை தங்களை அமெரிக்கா மதிக்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அமெரிக்கா தேவையில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இனி நாம் பெரியஅளவில் வர்த்தகம் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அந்த நாடு வந்து விட்டது. மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கனடிய மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் அங்கு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
கனடாவில் திடீரென அமெரிக்காவுக்கு எதிராக வெடித்துள்ள இந்த உணர்வுக்கு அமெரிக்காவுக்கான கனடா நாட்டு முன்னாள் தூதர் டெரிக் பர்னி மற்றும் பென் ஓஸ்லர் ஹாம்ப்சன் ஆகியோர் எழுதியுள்ள How Obama Lost Canada என்ற கட்டுரை நூலே காரணம். இந்த கட்டுரை கனடா நாட்டு வெளியுறவு விவகாரம் என்ற இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.
அந்த நூலில் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளனர் பர்னியும், ஹாம்ப்சனும்.

கனடாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து துரோகம் இழைத்தே வந்திருக்கிறது. குறிப்பாக ஒபாமாவின் காலத்தில் இந்த துரோகம் அதிகரித்துள்ளது என்று அந்த நூலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கீஸ்டோன் எக்ஸ்எல் பைப்லைன் திட்டத்தை சரிவர கவனம் செலுத்தாது, அமெரிக்க பொருட்களை மட்டுமே கனடா வாங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது உள்ளிட்டவை காரணமாக அமெரிக்கா, கனடாவை தனது கைப்பாவையாக வைத்திருக்க நினைத்துள்ளது.
மேலும், லிபியா, ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்காவுக்கு உதவியாக கனடா தனது ராணுவத்தை அனுப்பி வைத்தது. ஆனால் அதை அமெரிக்கா கெளரவப்படுத்தவில்லை, மதிக்கவில்லை. இதனால் கனடாவுக்கு ஒபாமா பெரும் துரோகம் இழைத்து விட்டார், கனடாவின் அன்பை அவர் இழந்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கனடாநாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரும், இனிமேல் அமெரிக்காவுடனான வர்த்தக தொடர்புகளை குறைத்துக் கொண்டு நம்மையும், நமது சக்தியையும், உற்பத்திப் பொருட்களையும் மதிக்கும் சீனா, இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.
இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக கனடாவில் பெரும் சிக்கல் ஏற்பட்டு விட்டது. உற்பத்தி குறைந்து விட்டது, ஏற்றுமதியும் அடிபட்டுப் போய் விட்டது. 2000 மாவது ஆண்டில் அமெரிக்காவுக்கு 85% பொருட்களை கனடா ஏற்றுமதி செய்தது. ஆனால் 2010ஆம் ஆண்டில் கனடா தனது ஏற்றுமதியில் 68% மட்டுமே அமெரிக்காவுக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: