தமிழே தெரியாத கமிஷனர் எப்படி வீரபாண்டியார் மீதான 500 பக்க புகாரை ஒரே நாளில் படிக்க முடியும்?''
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் ஜூன் 4-ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சி.மாகாலி ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், தனது கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி லீலா ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் அங்கம்மாள் காலனியில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல்ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் உள்ள 560 பக்க ஆவணத்தை தமிழ் எழுத, படிக்கத் தெரியாத அதிகாரி ஒரே நாளில் படித்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆணையிட்டுள்ளார். எனவே, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான எனது கணவர் வீரபாண்டி ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சேலம் போலீஸ் கமிஷனர், வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக