செவ்வாய், 26 ஜூன், 2012

தலைமையாசிரியை வெட்டி கொலை அறந்தாங்கியில் பயங்கரம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
அறந்தாங்கியில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தலைமையாசிரியை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மின்தடை நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரைக்குடி சாலையை சேர்ந்தவர் போலீஸ்காரர் முத்துகாமாட்சி. இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி வானதி (46), அறந்தாங்கி அருகே வம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுபலட்சுமி, நித்யஸ்ரீ  என்ற மகள்களும், அய்யப்பராஜ் என்ற மகனும் உள்ளனர். பல் டாக்டரான சுபலட்சுமி, சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.


அய்யப்பராஜ் விடுமுறைக்காக தற்போது சிங்கப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமி நித்யஸ்ரீயுடன் வானதி மட்டும் தனியாக இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசித்து வந்தார். தாயும் மகளும் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. புழுக்கம் அதிகமாக இருந்ததால் வானதி எழுந்து, காற்றுக்காக கதவை திறந்து வைத்தார். பின்னர் வாசலில் தலை வைத்து படுத்துவிட்டார். உள்அறையில் மகள் படுத்திருந்தார். அதிகாலை 3 மணி வரை மின்சாரம் வரவில்லை. புழுக்கத்தால் தவித்த நித்யஸ்ரீ, அறையில் அம்மாவை காணவில்லை என்றதும் அவரை தேடி வெளியே வந்தார். அந்த நேரத்தில் மின்சாரம் வந்தது.

வாசல் கதவருகே அம்மா ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்ததை பார்த்து சிறுமி கதறினாள். வானதியின் உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருந்தது. அழுதபடி வெளியே ஓடிய நித்யஸ்ரீ, பக்கத்து வீட்டு கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எழுந்து ஓடிவந்தனர்.
வானதி இறந்து கிடப்பதை பார்த்து திடுக்கிட்ட அவர்கள், அவரது தம்பி ரவிக்கும், அறந்தாங்கி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி முருகேசன், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். புதுக்கோட்டை எஸ்.பி. தமிழ்ச்சந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டன.

மோப்ப நாய் ஆகாஷ், வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள பெருமாள்பட்டி வரை ஓடி சென்று படுத்துக்கொண்டது. மர்ம நபர்கள், வானதியை கொலை செய்துவிட்டு பெருமாள்பட்டி வழியாக தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வானதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வானதி அணிந்திருந்த 2 பவுன் செயின், வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டு, பர்ஸ், செல்போன் ஆகியவற்றை காணவில்லை என உறவினர்கள் கூறினர். வானதியின் தம்பி ரவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தலைமையாசிரியை நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை: