தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது, எக்ஸாக்ட்லி எங்கே இருந்தார்கள்?
ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள, “பூகோள எல்லையைக் கடந்து எந்த வித தடைகளும் இல்லாமல்” மீன்பிடிக்க அனுமதிக்கும் நாடு உலகில் எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை
Viruvirupu
ஈழத் தமிழர் தொடர்பாக தி.மு.க. டெசோ மாநாடு நடத்தப் போவதாக
அறிவித்துக் கொண்டிருக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து இலங்கை
விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அடுத்த கடிதம் பறந்திருக்கிறது. இது
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதை கண்டிக்க
வேண்டும் என எழுதப்பட்ட கடிதம்.இரு தினங்களுக்கு முன் (கடந்த 26-ம் தேதி) கடலில் நடைபெற்றதாக கூறப்படும் தாக்குதல் குறித்து கடிதத்தில் எழுதியுள்ளார் முதல்வர்.
முதல்வரின் கடிதத்தில், “கடந்த திங்கட்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து 704 எந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதில் 45 படகுகளில் சென்றவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மறுநாள் இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்தெறிந்து, 10 படகுகளை முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், இலங்கையின் கடல் பகுதியில் நடைபெற்றதா, இந்தியக் கடல் பகுதியில் நடைபெற்றதா என்பதில் ஒரு குழப்பம் நிலவுகிறது. முதல்வரின் கடிதத்திலும், ‘கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடைபெற்றது இலங்கையில் கடல் எல்லைக்குள் என இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தாக்குதல் நடப்பதற்கு முன், ‘இலங்கைக் கடல் பகுதியை விட்டு, இந்தியப் பகுதிக்குள் செல்லுங்கள்’ என்ற முன்னெச்சரிக்கை தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டதா என்பதை இலங்கைச் செய்திகள் குறிப்பிடவில்லை.
கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகத்திடம், “இலங்கை கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகிறதா?” என்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, “அப்படியான தகவல் ஏதும் எம்மிடம் கிடையாது” என்று பதில் கூறியதாக, செய்தி வெளியாகியுள்ளது.
அப்படியானால், எங்கே வைத்து தாக்குதல் நடந்தது? யாரும் சரியான விபரங்களை தெரிவிப்பதாக இல்லை.
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 12 மாதங்களில் இது போன்று பல முறை நடந்துள்ளதால், இதில் தாங்கள் தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது நடந்துள்ள இந்தக் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மீனவர்கள் மத்தியில் மனதளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் கச்சத்தீவு பகுதியில் பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர். அவ்வகையில் அரசியல் எல்லை பூகோள எல்லையைக் கடந்து எந்த வித தடைகளும் இல்லாமல் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் அதே பழைய நிலை ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள, “பூகோள எல்லையைக் கடந்து எந்த வித தடைகளும் இல்லாமல்” மீன்பிடிக்க அனுமதிக்கும் நாடு உலகில் எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை. இந்திய கடல் எல்லைப் பாதுகாப்பு சட்டத்தில், பூகோள எல்லையைக் கடந்து வெளிநாட்டவர்கள் வந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.
‘உணர்ச்சி அரசியல்’ செய்ய விரும்பினால், மேலேயுள்ள கேள்விகளை அரசியல்வாதிகளோ, மீடியாவோ கேட்கக்கூடாது என்பது மட்டும் நன்றாக தெரியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக