செவ்வாய், 26 ஜூன், 2012

திட்டித் தீர்த்த ஜெயலலிதா.. நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம்?அதிமுக கவுன்சிலர்கள்,

 How Jaya Raided Admk Councillors Recent Meeting

பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம்.
சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சியாகி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தவிர இவர்களை விட வேறு யாருமே தேவையில்லை என்ற அவல நிலை. வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் கூப்பிட்டு வைத்து அத்தனை பேரையும் திட்டித்தீர்த்து விட்டாராம் ஜெயலலிதா.
ஒவ்வொரு கவுன்சிலரும் செய்த தவறுகளை பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து ரெய்டு விட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனராம்.
திமுக கட்டிய கட்டடத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு சாத்துப்படி
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிட்டி தியாகராயர் அரங்கத்தில்தான் இந்த ரெய்டு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். செல்போன், ஜெயா டிவி ரிப்போர்டர்கள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்குக் கூட உள்ளே வர அனுமதியில்லை. நேரம் காலம் தெரியாமல், வழக்கம் போல ஜெயலலிதாவை வரவேற்று ஏகப்பட்ட பேனர்களைக் கட்டி வைத்து விட்டனர். ஜெயலலிதா வந்தபோது இவற்றைப் பார்த்து டென்ஷனாகி விட்டார். எது எதற்கெல்லாம் பேனர் வைப்பது என்ற விவஸ்தையே இல்லையா என்று திட்டித் தீர்த்த ஜெயலலிதா, திட்டுவதற்காக வந்துள்ளேன். இதைப் போய் வரவேற்கிறீர்களே என்று கோபத்துடன் கூறியபடி உள்ளே வந்தார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர். பின்னர் பேசத் தொடங்கிய ஜெயலலிதாவின் பேச்சில் சூடு பறந்ததாம்.
முந்தைய திமுக ஆட்சியின்போது மாநகராட்சியில் கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு பிடி பிடிக்க பாதி கவுன்சிலர்களுக்கு வயிற்றைக் கலக்கி விட்டதாம்.
வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாதுனு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார்.
பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்னு டிமாண்ட் பண்றீங்க. வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டியிருக்கிற வீடுகளுக்கே போய் அடாவடி வசூல் பண்றீங்க. கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க. டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க. ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது என்று வாங்கியுள்ளார்.
64வது வார்டு கவுன்சிலர் சுந்தர் பெயரைக் கூறி எழுந்திருக்கச் சொன்ன ஜெயலலிதா, குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடுனு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க...என்று கடுமையாக டோஸ் விட ஆடிப் போய் விட்டாராம் சுந்தர்.
அதேபோல 63வது வார்டு கவுன்சிலர் அலிகான் பஷீர் என்பவரை நிற்கச் சொன்ன ஜெயலலிதா, மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க.. என்று புகார் பட்டியலைப் படிக்க அவர் அமைதியாக நின்றாராம்.
இவர் சசிகலாவுக்கு நெருக்கமானவராம். சசிகலாவுக்கு அடிக்கடி புதுப் படங்களின் டிவிடிகளைக் கொடுத்து நட்பைப் பெற்று இதன் மூலம் கவுன்சிலர் சீட்டை வாங்கியுள்ளாராம். மேலும், சென்னையில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியை இழந்ததற்கு, இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெ. அன்பழகனுடன் ரகசியமாக கூட்டுவைத்து அலிகான் பஷீர் செயல்பட்டதாக உளவுத்துறை அம்மாவிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இதை விட பெரிய அசிங்கம் இருக்கா...
ஜெயலலிதா அடுத்து ரெய்டு கொடுத்த கவுன்சிலர்தான் இங்கு குறிப்பிடத்தக்கவர். அவரது பெயர் ராஜலட்சுமி. 173வது வார்டு கவுன்சிலர். அவரது பெயரைச் சொல்லி ஜெயலலிதா கூறியபோது, இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது என்று கடும் உஷ்ணப் பார்வை பார்த்தபடி ராஜலட்சுமியை கடுமையாக சாடினார். இதைக் கேட்டு ராஜலட்சுமி ஆடிப் போய் அமைதியாக நின்றார்.
கவுன்சிலர்களிலேயே அதிக அளவிலான புகார்கள் 114வது வார்டு கவுன்சிலர் முகம்மது அலி ஜின்னா மீதுதான் வாசிக்கப்பட்டதாம். சகல மோசடிகள், முறைகேடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இவர் வேறுயாருமல்ல, 2009 லோக்சபா தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மகனும் தப்பவில்லை
இதேபோல மாதவரம் 27வது வார்டு உறுப்பினர் கண்ணதாசன் மீதும் புகார் வாசித்தார் ஜெயலலிதா. இவர் அமைச்சர் மூர்த்தியின் மகன் ஆவார்.
கவுன்சிலர் போல ஆக்ட் கொடுத்த குப்பம்மா
ஜெயலலிதா அடுத்த பிடித்த நபர்தான் சுவாரஸ்யமானவர். 93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க, அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.
ஓவர் ஆக்ட் பண்ணாதே...
அடுத்து 38வது வார்டு சந்தானத்தைப் பிடித்து கடுமையாக திட்டியுள்ளார் ஜெயலலிதா. அதைக்கேட்டு பயந்து போன சந்தானம்,தனது இரு கைகளால் கன்னத்தில் புத்தி போட்டுக் கொண்டு, புத்தி வந்துருச்சும்மா என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, கோபமாகிப் போன ஜெயலலிதா, ஓவர் ஆக்டிங் கொடுக்காதே என்று அதட்டலாக கூறினார்.
தொடர்ந்து ஜெயலலிதா மொத்தமாக அத்தனை பேரையும் எச்சரிக்கும் வகையில் பேசியபோது,
பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்​திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன்.
சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன் என்று தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாராம் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 169 கவுன்சிலர்களில் 100க்கும் மேற்பட்டோர் டோஸ் வாங்கினராம்.
'அம்மா'விடம் திட்டு வாங்கி விட்டுச் சென்ற அத்தனை கவுன்சிலர்களும் உளவுத்துறை போலீஸார் மீது கடும் காட்டத்துடன் இருக்கிறார்களாம். அதேசமயம், இவர்கள் அத்தனை பேரும் உடனடியாக திருந்தும் திட்டத்திலும் இல்லையாம். மாறாக, வழக்கம் போல நடை போடப் போவதாக பலரும் சவால் போல கூறி வருகிறார்களாம். நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம், எங்களிடம் பங்கு வாங்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களையும் நாங்கள் பட்டியல் போட்டுத் தரத் தயார். அவர்களையும் கூப்பிட்டு அம்மா ரெய்டு விடட்டும் என்று கோபத்துடன் கூறுகிறார்கள்.
எப்படியோ, விரைவிலேயே மாநகராட்சி அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: