சனி, 30 ஜூன், 2012

கர்நாடகாவில் பாஜக மேலும் உடைகிறது சுபகாரிய சீகிரமஸ்து

 கர்நாடகா பா.ஜ., அமைச்சர்கள் 8 பேர் ராஜினாமா: முதல்வர் சதானந்த கவுடாவுக்கு மீண்டும் நெருக்கடி
பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள், எட்டு பேர் ராஜினாமா கடிதத்தை, முதல்வரிடம் கொடுத்துள்ளதால், கர்நாடக பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ÷ஷாபா ஊரில் இல்லாததால், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள, முதல்வர் சதானந்த கவுடா மறுத்து விட்டார்.
கர்நாடகாவில், சதானந்த கவுடா, முதல்வரான சில நாட்களிலேயே, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், அவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். "கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த வேண்டும்' என, பல வழிகளில், நெருக்கடி கொடுத்து வந்தனர். எதற்கும் அசராத சதானந்த கவுடா, "மேலிடம் சொன்னால் செய்கிறேன்' என்று கூறி, தடை விதித்து வந்தார்.
எடியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள், 70 பேர் ஒன்றிணைந்துள்ளனர். ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டுமென, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தனர்.

20 மட்டும் ஆதரவு: முதல்வர் சதானந்த கவுடாவுக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 20 பேர் மட்டுமே, ஆதரவளித்து வருகின்றனர். இதில், 13 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றினால், ராஜினாமா செய்வோம் என, மிரட்டி வருகின்றனர். அடுத்த மாதம் ,19ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதால், அதுவரை, பொறுமையாக இருக்குமாறு, மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தினர். பரபரப்பான நிலையில், அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில், எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள், நேற்று பல முறை கூடி ஆலோசித்தனர். ஆறு மாதமாக, பா.ஜ., மேலிடம், ஏதாவதொரு காரணத்தை கூறி, காலம் கடத்தி வருகிறது. உடனடியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ராஜினாமா கடிதம்: மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்ய சென்றிருந்த முதல்வர் சதானந்த கவுடா, பெங்களூரு திரும்பியவுடன், அவரது அனுகிரஹா இல்லத்தில், எடியூரப்பா ஆதரவு அமைச்சர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ரேணுகாச்சார்யா, உதாசி, முருகேஷ் நிரானி, ரேவு நாயக் பெலமகி, உமேஷ் கட்டி, சோமண்ணா ஆகிய எட்டு பேரும், தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அமைச்சர்கள் ÷ஷாபா, ராஜூ கவுடா ஆகிய இருவரும், வெளியூரில் இருப்பதால், அவர்களின் ராஜினாமா கடிதத்தை, உதாசியிடம் கொடுத்து, முதல்வரிடம் கொடுக்க கூறியிருந்தனர். அதன்படி, உதாசி கடிதம் கொடுத்தார். அப்போது, முதல்வர் சதானந்த கவுடா, அவர்கள் இருவரையும், நேரில் வந்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்து வேறுபாடு: வெளியில் வந்த பின், உதாசி கூறியதாவது: பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி, பல முறை கேட்டுக் கொண்டும், முதல்வர் கூட்ட வில்லை. இதனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் கள், தங்கள் தொகுதி பிரச்னையை தெரிவிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், முதல்வருடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதானந்த கவுடாவை மாற்றக்கோரி, பலமுறை மேலிடத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராஜினாமா செய்ய முடிவு செய்தோம். இதை, மிரட்டல் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இனிமேலாவது, மேலிடம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று, எதிர்பார்க்கிறோம் என்றார்.

அடுத்தது என்ன? பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் கூறுகையில், ""பா.ஜ., மேலிடம், இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால், எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் கொடுப்போம்,'' என்றார். இதற்கிடையில், கர்நாடக கவர்னர் பரத்வாஜை, முதல்வர் சதானந்த கவுடா, இன்று சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பின் போது, முதல்வர் பதவி விலகுவதாக, ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று, பா.ஜ., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. முதல்வர் ராஜினாமா செய்யாமல், அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க சதானந்தா திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: